Published : 30 Apr 2020 07:54 PM
Last Updated : 30 Apr 2020 07:54 PM
கரோனா வைரஸுக்கு எதிரான போரில் சீனா மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் மிகப் பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளது என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலிலிருந்து மீண்டு, சீனா தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. அதன் தொழில் நிறுவனங்கள் அனைத்தும் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் புதன்கிழமையன்று சீன கம்னியூஸ்ட் கட்சியின் மத்தியக் குழு சந்திப்பு நடைபெற்றது. அதில் தலைமை வகித்த அதிபர் ஜி ஜின்பிங் சீனாவின் சாதனை குறித்தும், பொருளாதார ரீதியாக இனி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசியுள்ளார்.
தற்போது கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து சீனா விடுபட்டு இருந்தாலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் தளர்த்தப்படக்கூடாது என்று ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
சமீப நாட்களில் ரஷ்யாவில் இருந்து சீனா திரும்பும் சீனர்களிடையே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ரஷ்ய - சீன எல்லையில் கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது. இந்நிலையில் அப்பகுதிகளைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார்.
கரோனாவால் சரிவைச் சந்தித்த சீனப் பொருளாதாரம்
கடந்த நான்கு மாதங்களில் சீனாவின் பொருளாதாரம் கடும் சரிவுக்குச் சென்றுள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் சீனாவின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடந்த 28 ஆண்டுகளில் இல்லாத அளவில் 6.8 சதவீதம் சரிந்தது. கரோனா வைரஸ் பரவலால் சீனாவில் தொழில் செயல்பாடுகள் முடங்கியிருந்ததால் வேலையிழப்பு, சிறு, குறு நிறுவனங்கள் திவால் நிலைக்குச் சென்றிருப்பது, வருவாய் இழப்பு போன்றவை ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்றைய கூட்டத்தில் நாட்டின் உள்நாட்டு சிறு, குறு, நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும், பொருளாதாரத்தை மீட்பது குறித்தும் அக்கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவிலுள்ள வூஹானில் கடந்த டிசம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்த சில நாட்களிலேயே கரோனா வைரஸ் பரவல் வேகமெடுத்த நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வூஹானையும் அதன் சுற்றுப் பகுதிகளையும் முழுவதுமாக முடக்க வேண்டிய நிலைக்கு சீனா தள்ளப்பட்டது. அதனால் சீனாவின் தொழில் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கின. இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டது.
சீனாவில் மட்டும்தான் கரோனா வைரஸ் தாக்கம் இருப்பதாக பிற நாடுகள் அலட்சியமாக இருந்த நிலையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் என கரோனா உலக நாடுகளுக்கும் பரவியது. அடுத்தடுத்த மாதங்களில் உலக அளவில் கரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகள் மார்ச் மாதத்தில் ஊரடங்கை அறிவித்தன. தற்போது பிற நாடுகள் கரோன வைரஸ் தொற்றின் தீவிரத்தை எதிர்கொண்டு வரும் நிலையில், சீனா தற்போது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளது.
சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில், நான்கு பேருக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்றுக்கு சீனாவில் 82,862 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 4,633 பேர் உயிரிழந்துள்ளனர். 77,610 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT