Last Updated : 30 Apr, 2020 01:41 PM

 

Published : 30 Apr 2020 01:41 PM
Last Updated : 30 Apr 2020 01:41 PM

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல ஆன்லைன் பதிவு தொடக்கம்: இந்தியத் தூதரகம் ஏற்பாடு

பிரதிநிதித்துவப்படம்

துபாய்,

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பினால் அவர்களுக்காக ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் வசதியை இந்தியத் தூதரகம் செய்துள்ளது.

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் காரணமாக பல்வேறு நாடுகளும் தங்கள் எல்லைகளை மூடியதால் பல நாடுகளில் பணிச்சூழல் காரணமாக தங்கி இருக்கும் இந்தியர்கள் சிக்கிக்கொண்டனர். இந்திய அரசும் கடம்த மாதம் 25-ம் தேதி முதல் அனைத்துப் பயணிகள் விமானப் போக்குவரத்துக்கும் தடை விதித்தது.

இதன் காரணாக வளைகுடா நாடுகளில் பணிக்காகச் சென்றிருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பியும் முடியவில்லை. இதனால் இந்தியர்கள் தாயகம் செல்ல முடியாமலும், குடும்பத்தினரைக் காண முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதையடுத்து, முதல் கட்டமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப விரும்பினால் அவர்களுக்காக ஆன்லைன் பதிவேட்டை இந்திய அரசு தொடங்கியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மட்டும் 34 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் செல்ல விரும்பினால் துபாயில் உள்ள துணைத்தூதரகம் மூலம் தங்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இதற்காக தூதரகம் சார்பில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி, www.indianembassyuae.gov.in அல்லது www.cgidubai.gov.in மற்றும் www.cgidubai.gov.in/covid_register என்ற இணையதளத்தில் இந்தியர்கள் தங்களின் விவரங்களைப் பதிவு செய்யலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் ஏராளமான இந்தியர்கள் இணையதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்ததால் ஒரு கட்டத்தில் இணையதளத்தின் செயல்பாடு முடங்கியது. இதையடுத்து, ஒரு நபர்தான் ஒரு நேரத்தில் பதிவு செய்யும் படி தூதரகம்மாற்றம் செய்தது. ஒரு குடும்பத்தில் பல நபர்கள் இருந்தால் ஒவ்வொரு நபரும் தனித்தனியாகப் படிவம் நிரப்ப வேண்டும்.

நிறுவனங்கள் மூலம் இந்தியா திரும்பும் இந்தியர்களுக்கு தனியாக விண்ணப்பப் படிவம் தரப்பட்டுள்ளது. எப்போது இந்தியாவிலிருந்து விமானம் இயக்கப்படும் என்பது குறித்து தகுந்த நேரத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை 10 ஆயிரம் இந்தியர்கள் முன்பதிவு செய்துள்ளார்கள் எனத் தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் தாமு ரவி கூறுகையில், “ லாக் டவுன் இன்னும் இந்தியாவில் இருப்பதால் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் கேட்கும் கேள்விக்கு இப்போதுள்ள சூழலில் பதில் அளிக்க முடியாது. இந்தியாவில் உள்ள சூழலை ஆய்வு செய்து எப்போது விமானச் சேவையைத் தொடங்கலாம் என்று அரசுதான் முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x