Last Updated : 29 Apr, 2020 06:21 PM

 

Published : 29 Apr 2020 06:21 PM
Last Updated : 29 Apr 2020 06:21 PM

1918-ல் ஸ்பானிஷ் ஃபுளூ; 2020-ல் கரோனா: இரு தொற்றுநோய்களை வென்ற 107 வயது மூதாட்டி!

வரலாற்றைப் புரட்டிப் போட்ட நூற்றாண்டு கடந்த நிகழ்வுகளில் வாழும் உதாரணம் இருப்பது மிக மிக அரிது. அதை மாற்றிக் காட்டியிருக்கிறது இந்த கரோனா காலம். உலகையே கதி கலங்க வைத்திருக்கும் இந்த கரோனா காலத்தில் ஸ்பெயினைச் சேர்ந்த மூதாட்டி ஏனா டெல் வெல்லா என்பவர் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறார். நூறு வயதைக் கடந்த இந்த மூதாட்டி சாதாரணமாகக் கவனத்துக்கு வரவில்லை. இரு தொற்றுநோய்களை வென்றெடுத்த மூதாட்டி என்ற பெரும் பெயரோடு உலக அளவில் கவனம் ஈர்த்திருக்கிறார்.

இன்று உலகையே பாடாய்படுத்திவரும் கரோனா வைரஸ் தொற்றுநோயைப் போலவே, நூறு ஆண்டுகளுக்கு முன்பும் உலகம் ஒரு தொற்றுநோயால் உறைந்துபோய் கிடந்தது. முதலாம் உலகப் போரால் உலகம் திண்டாடிக் கொண்டிருந்த வேளையில், 1918-ம் ஆண்டில் உலகை பீதியில் உறைய வைக்க ஸ்பானிஷ் ஃப்ளூவும் கிளம்பியது. இன்று கரோனோ தொற்றுநோயைப் போலவே, அன்று பெரும்பாலான உலக நாடுகளில் ஸ்பானிஷ் ஃபுளூ ஜெட் வேகத்தில் பரவியது. 1918-ம் ஆண்டு முதல் 1920-ம் ஆண்டு வரை நீடித்த இந்த ஸ்பானிஷ் ஃபுளூ வைரஸால் உலகம் முழுவதும் 50 கோடி மக்கள் மாண்டார்கள் என்கின்றன பதிவுகள்.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு உலகையே அசைத்துப் பார்த்த ஸ்பானிஷ் ஃபுளூ தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் ஸ்பெயினைச் சேர்ந்த ஏனா டெல் வெல்லா. 1913-ம் ஆண்டில் பிறந்த இவர், 5 வயதுச் சிறுமியாக இருந்தபோது ஸ்பானிஷ் ஃபுளூ தொற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட ஏனா டெல், சிகிச்சைக்குப் பிறகு ஸ்பானிஷ் ஃபுளூ தொற்று நோயிலிருந்து மீண்டு வந்தார். அன்று சிறுமியாக நோய்த்தொற்றுக்கு ஆளாகி, அதிலிருந்து மீண்டு வந்த ஏனா டெல், 2013-ம் ஆண்டில் நூற்றாண்டைக் கடந்தார்.

ஆனால், தற்போது 107-வது வயதை எட்ட உள்ள ஏனா டெல்லுக்கு கரோனா வடிவில் பெரும் சோதனை வந்தது. இத்தாலியைத் தொடர்ந்து ஸ்பெயினில் கரோனா தொற்று வேகமாகப் பரவிய வேளையில், ஏனா டெல் கரோனாவால் பாதிக்கப்பட்டார். மாட்ரிட்டில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஏனா டெல், கரோனா நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வருவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. வயதானவர்களைக் கரோனா ஒரு வழி பார்த்துவிடுகிறது என்பதால் ஏற்பட்ட சந்தேகம் இது.

ஆனால், மருத்துவமனையில் நீண்ட உயிர்ப் போராட்டத்துக்குப் பிறகு கரோனாவிலிருந்து பரிபூரணமாக மீண்டுவந்திருக்கிறார் ஏனே டெல். நலத்தோடு வீடும் திரும்பிவிட்டார் டெல். அவரை உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர் மருத்துவர்களும் ஊழியர்களும். முதியவர்களுக்கு கரோனா நோய்த்தொற்று வந்தால் அவ்வளவுதான் என்று கூறப்படும் நிலையில், 107 வயதான டெல், அதிலிருந்து மீண்டுவந்து உலகுக்குப் புதிய செய்தியைப் பகிர்ந்திருக்கிறார்.

அதோடு, நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்பானிஷ் ஃபுளூ, இப்போது கரோனா என இரு பெரும் தொற்று நோய்களிலிருந்து மீண்டு, ஒரு நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த இரு தொற்று நோய்களிலும் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர் என்று வாழும் உதாரணமாகியிருக்கிறார் ஏனா டெல். வரலாற்றில் அரிதான நிகழ்வுகள் எப்போதாவது நிகழும். அந்த வகையில் ஏனா டெல் வெல்லா நிகழ்த்தி காட்டியிருப்பது அரிதிலும் அரிதான ஒன்று!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x