Last Updated : 27 Apr, 2020 08:13 PM

4  

Published : 27 Apr 2020 08:13 PM
Last Updated : 27 Apr 2020 08:13 PM

பொதுமுடக்கத்தை மெல்லத் தளர்த்தும் இத்தாலி: இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன?

இன்றைய தேதிக்கு இந்தியாவின் எல்லா மூலைகளிலும் எதிரொலிக்கும் கேள்வி, மே 3-க்குப் பிறகு பொதுமுடக்கம் தளர்த்தப்படுமா என்பதுதான். இப்படியான சூழலில், கரோனா வைரஸால் நம்மைவிடவும் பேரிழப்பைச் சந்தித்த இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகள் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு, பொதுமுடக்கத்தை விலக்கிக்கொள்ளும் நிலைக்கு நகர்ந்திருக்கின்றன. இதன் மூலம் இந்தியா போன்ற நாடுகளுக்குச் சில முக்கியப் பாடங்களையும் அந்நாடுகள் முன்வைத்திருக்கின்றன.

கரோனா வைரஸ் பரவலால் சீனாவுக்குப் பிறகு, பெரும் பாதிப்பை எதிர்கொண்டவை ஐரோப்பிய நாடுகள்தான். குறிப்பாக, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளில் தொற்று எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்தன. குறிப்பாக, இத்தாலி இதுவரை 26,000 பேரை இழந்திருக்கிறது. இன்றைக்கு அதைவிட மோசமான இடத்தில் அமெரிக்கா சென்றுவிட, படிப்படியான திட்டமிடல்கள் மூலம் பலி எண்ணிக்கையைக் குறைத்திருக்கிறது இத்தாலி.

அடிபட்டு மீண்ட தேசம்
ஆரம்பத்தில் கரோனாவின் வீரியத்தை முழுமையாக உணர்ந்துகொள்ளாத இத்தாலி, விரைவிலேயே அதற்கான விலையைக் கொடுத்தது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மார்ச் 9-ல் நாடு முழுவதும் பொதுமுடக்க உத்தரவைப் பிறப்பித்தார் இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே. உலகின் பல்வேறு நாடுகளைப் போலவே, இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர், இப்படியான முடக்கத்தை இத்தாலி சந்தித்தது இதுவே முதல் முறை.

இந்தச் சூழலில், கரோனா பாதிப்பு உச்சத்தை இத்தாலி அடைந்துவிட்டது என்று மார்ச் 31-ல் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் சில்வியோ ப்ரஸஃபெர்ரோ அறிவித்தார். பொதுமுடக்கம் அமலுக்கு வந்த மூன்றாவது வாரத்திலிருந்து, தொற்றுக்குள்ளாவோரின் தினசரி விகிதமும், மரணங்களும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின. மார்ச் 10 நிலவரப்படி, கரோனா தொற்றுக்குள்ளான ஒரு நபர், 2 முதல் 3 பேருக்கு வைரஸைப் பரப்பும் சூழல் இருந்ததை மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டினர். பொதுமுடக்கம் உள்ளிட்ட தொடர் நடவடிக்கைகளுக்குப் பிறகு, 0.2 முதல் 0.7 ஆக இருக்கிறது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று விகிதம் குறைந்திருப்பதுதான், பொதுமுடக்கத்தைத் தளர்த்துவதற்கான நம்பிக்கையை அந்நாட்டுக்கு அளித்திருக்கிறது.

அதைத் தொடர்ந்து, ஏழு வாரங்களுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கையை நோக்கி அடியெடுத்து வைக்கிறது இத்தாலி. படிப்படியாக பொதுமுடக்கத்தைத் தளர்த்துவதற்கான திட்டங்களை ஜிசப்பே கான்டே உருவாக்கியிருக்கிறார். தடுப்பூசி தயாரிக்கப்படும் வரை பொதுமுடக்கம்தான் கரோனா வைரஸிலிருந்து காக்கும் முக்கிய நடவடிக்கை என்பது உலகின் பல்வேறு அரசுகளின் நம்பிக்கை. இத்தாலி பிரதமரும் அதைத்தான் எதிரொலிக்கிறார்.

எனினும், முடங்கிக் கிடப்பதால் பொருளாதார ரீதியாக ஏற்படும் இழப்புகள் இத்தாலியை வெகுவாகச் சிந்திக்கச் செய்திருக்கின்றன. அதன் அடிப்படையில், மே 4 முதல் இத்தாலியில் பொதுமுடக்கம் மெல்ல மெல்ல நீக்கப்படவிருக்கிறது. இத்தாலி மீண்டு வந்துவிட்டது என்பதை உலகத்துக்கு உணர்த்தும் வகையில், மே 18 முதல் அருங்காட்சியகங்களும் திறக்கப்படும் என்று இத்தாலி நாளிதழ்கள் தெரிவிக்கின்றன.

எச்சரிக்கை உணர்வு
பொதுமுடக்கத்தை தளர்த்திக்கொள்வது இன்றைய சூழலில் கிட்டத்தட்ட கத்தி மேல் நடப்பதற்கு ஒப்பானது என்பதை இத்தாலி அரசின் பல்வேறு துறையினரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். “இத்தாலியில் கரோனா வைரஸ் பலவீனப்படுத்தப் பட்டிருக்கிறதே தவிர வீழ்த்தப்படவில்லை” என்று நெருக்கடியை எதிர்கொள்ளும் ஆணையத்தின் தலைவர் டொமெனிகோ ஆர்குரி கூறியிருக்கிறார். தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டால், இந்த விகிதம் மீண்டும் 1-க்கும் அதிகமாகலாம் என்று ப்ரஸஃபெர்ரோவும் எச்சரித்திருக்கிறார். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவசரகதியில் செய்யாமல், எச்சரிக்கை உணர்வுடனேயே பிரதமர் ஜிசப்பே கான்டேவும் செயல்படுகிறார்.

இந்த இரண்டாம் கட்டமானது, கரோனா வைரஸுடனேயே காலத்தைக் கழிப்பதுதான் என்பதில் தெளிவாக இருக்கும் அவர், “நீங்கள் இத்தாலியை விரும்புகிறீர்கள் என்றால், தனிமனித இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்றுங்கள்” என்று மக்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார். “நான்கில் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட, குடும்ப உறுப்பினர்களின் தொடர்பே காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே, ஒரு மீட்டர் இடைவெளியை எப்போதும் கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் எச்சரித்திருக்கிறார்.

என்னென்ன சாத்தியம்?
மே 4-க்குப் பிறகு இத்தாலியர்கள் தங்கள் பிராந்தியத்துக்குள் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் சென்றுவரலாம். பொதுப் போக்குவரத்து தொடங்கினாலும், குறிப்பிட்ட எண்ணிக்கையில்தான் வாகனங்கள் இயக்கப்படும். ஒரு பிராந்தியத்திலிருந்து இன்னொரு பிராந்தியத்துக்குச் செல்ல வேண்டுமானால் சிறப்பு அனுமதி தேவை. அதுவரை சுகாதாரப் பணியாளர்கள், அவசரகாலப் பணியில் இருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

முக்கியமான நிபந்தனைகள்
அனைவரும் முகக்கவசம் அணிந்துதான் எங்கும் செல்ல வேண்டும். வெளியில் செல்வதற்கான காரணங்களுக்கு ஏற்ப முறையான ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும். பொதுமக்கள் நடைபயிலவும், உடற்பயிற்சி செய்யவும் வசதியாக பூங்காக்கள் திறந்திருக்கும். அங்கும் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். அதேசமயம், செப்டம்பர் வரை பள்ளிகள் திறக்கப்படாது என்றும் பிரதமர் கூறிவிட்டார்.

பொருளாதாரத்தை மீட்க…
ஏற்கெனவே, பொருளாதார மந்தநிலை ஏற்படலாம் எனும் அளவுக்குத் தடுமாறிக்கொண்டிருந்த இத்தாலி, கரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பின்னர் பொருளாதார ரீதியாகப் மேலும் பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. இத்தாலியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 8 முதல் 10 சதவீதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பெரும் சரிவிலிருந்து தொழில் நிறுவனங்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

மானியத்துடன் கூடிய வங்கிக் கடன்களைச் சிறு நிறுவனங்கள் பெற்றுக்கொள்ளலாம். இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அதைத் திரும்பச் செலுத்தலாம். வேலையிழந்த தொழிலாளர்களுக்கும் 600 யூரோக்கள் வழங்கப்படும். இதுபோன்ற திட்டங்களை அரசு அறிவித்திருந்தாலும், அவற்றை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இன்னமும் களையப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்க விஷயம். ஏற்கெனவே கட்டுமானத் துறை, ஏற்றுமதி சார்ந்த தொழில்கள் உயிர் பெற ஆரம்பித்துவிட்டன. மே 4 முதல் இத்தாலியின் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் இயங்க ஆரம்பிக்கும்.

ஆயத்தமாகும் ஐரோப்பா
ஸ்பெயினில் கரோனா தொற்றுக்கு உள்ளானவர்களிடையே இறப்பு விகிதம் குறைந்துவருவது, அந்நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்ஷெஸுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. நிலைமை சாதகமாக அமைந்தால், மே 2-ல் பொதுமுடக்கத்தைத் தளர்த்தலாம் என்று அவர் கருதுகிறார்.

அந்நாட்டில் ஆறு வார பொதுமுடக்கத்துக்குப் பின்னர் ஏப்ரல் 26 முதல் குழந்தைகள் வெளியில் வர அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் காலை 9 முதல் இரவு 9 மணிக்கு இடையில், ஒரு மணிநேரத்துக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் மட்டும் சென்றுவரலாம். பிரான்ஸில், ஊரடங்குக்கு ஆதரவான வாக்குகள் 50 சதவீதத்துக்கும் கீழே குறைந்திருப்பது, சமீபத்தில் நடத்தப்பட்ட கருத்தறியும் வாக்கெடுப்பில் தெரியவந்திருக்கிறது. இதையடுத்து, அந்நாட்டில் மே 11 முதல் பொதுமுடக்கம் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்வீடனில் இன்றுவரை கடைகள், உணவகங்கள், ஆரம்பப் பள்ளிகள் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அங்கு, 10 லட்சம் பேரில் 200 பேர் எனும் விகிதத்தில்தான் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

முக்கியமான வல்லரசு நாடான அமெரிக்காவே கரோனா பாதிப்பால் கதிகலங்கி நிற்கும்போது, ஐரோப்பிய நாடுகள் இந்த அளவுக்கு நம்பிக்கையுடன் செயல்படுவதற்கு என்ன காரணம்? தடமறியும் செயலிகள் (tracing apps), பரிசோதனைகளை அதிகரிக்கும் நடவடிக்கைகள், முகக்கவசங்களை வழங்குவது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகளைப் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

“தற்போது நிலவும் சூழலை மாற்ற, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் எல்லைகள் திறக்கப்படுவது, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவர பொதுவான செயல் திட்டங்களை வகுப்பது என்பன உள்ளிட்ட நடவடிக்கைகள் அவசியம்” என்று ஸ்பெயின் துணைப் பிரதமர்களில் ஒருவரான தெரஸா ரிபெரா கூறியிருக்கிறார். ஐரோப்பாவைப் பொறுத்தவரை வர்த்தக நடவடிக்கைகள், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பையும் சார்ந்திருக்கின்றன. அந்த வகையில் ஒருவருக்கொருவர் கைகோத்து, பாதிப்பிலிருந்து மீள ஐரோப்பிய நாடுகள் ஆயத்தமாகின்றன.

நாம் எப்போது மீளப்போகிறோம்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x