Published : 26 Apr 2020 07:13 AM
Last Updated : 26 Apr 2020 07:13 AM

சவுதி அரேபியாவில் இனி கசையடி தண்டனை கிடையாது- உச்ச நீதிமன்றம் உத்தரவு

ரியாத்

சவுதி அரேபியாவில் இனி கசையடி (சவுக்கடி) தண்டனை வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சவுதி அரேபியாவில் கசையடி தண்டனையை நீக்குவது என்பது நீதித்துறையை நவீன மயமாக்குவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சவுதியின் உச்ச நீதிமன்ற பொது ஆணையம் இதற்கான உத்தரவை அண்மையில் பிறப்பித்துள்ளது.

ஷரியா இஸ்லாமிய சட்டத்தில் கசையால் அடிப்பது தாஜிர் வகையின் கீழ் வருகிறது. அதாவது ஷரியாவின் 2 முக்கிய ஆதாரங்களாக கருதப்படும் குரான் அல்லதுஹதீஸில் எழுதப்படாத குற்றங்களுக்கு நீதித்துறை அல்லது தலைமையின் விருப்பப்படி தண்டனைகள் கொடுக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது. சவுக்கடிவழங்குதல், பொது மக்களுக்கு முன்பாக தண்டனையை நிறைவேற்றுதல், விஷம் கொடுத்தல் போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தன.

அது தற்போது மாற்றப்பட்டு கசையடி தண்டனை வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருட்டு போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு சவுக்கடி வழங்கப்படும். இனி அந்தத் தண்டனை வழங்கப்படாது. அதற்குப் பதிலாக சிறை தண்டனையோ அல்லது அபராதமோ அல்லது இரண்டுமே சேர்த்தோ விதிக்கப்படும்.

அதே நேரத்தில் கொலை மற்றும் தீவிரவாதம் உட்பட பயங்கர குற்றங்களுக்கு தலையை வெட்டி தண்டனை நிறைவேற்றல், கைகளை வெட்டுதல் போன்ற சட்டங்கள் இன்னும் உள்ளன. சவுக்கடி தண்டனை மட்டுமே நீக்கப்பட்டுள்ளது.

சவுதி அரேபிய அரசர் சல்மான்உத்தரவுப்படி இளவரசர் முகமதுபின் சல்மானின் நேரடி மேற்பார்வையின் கீழ் மனித உரிமை சீர்த்திருத்தங்கள் இந்தச் சட்டத்தில் கொண்டு வரப்பட்டுள்ளன என்று உச்ச நீதிமன்ற பொது ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சவுதி அரேபியாவிலுள்ள மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் அவ்வாத் அலாவ்த் கூறும்போது, “சவுதி அரேபிய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள முக்கிய சட்டச் சீர்திருத்தங்களில் இது ஒன்று. இந்தஅறிவிப்பானது சவுதி அரேபியாவின் மனித உரிமை பிரிவில் ஒரு முக்கியமான முன்னேற்றமாகக் கருதப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x