Published : 25 Apr 2020 11:04 AM
Last Updated : 25 Apr 2020 11:04 AM
கரோனா நோயாளிகளின் உயிர் காக்கும் மருந்தாகக் கருதப்பட்டு வந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளால் நோயாளிகளுக்கு கடும் பக்கவிளைவுகள் வருகின்றன என்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை எச்சரித்துள்ளது.
குறிப்பாக இந்த மாத்திரைகளை நோயாளிகளுக்கு வழங்கினால் இதய ரத்த ஓட்டத்தில் சிக்கல், ரத்தக்கொதிப்பு, சிறுநீரகக் கோளாறு, நரம்பு, தசையில் பிரச்சினைகள் போன்றவையும் சில நேரங்களில் உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாகவும் எச்சரித்துள்ளது.
கரோனா வைரஸால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் உயிர் காக்கும் வகையில் செயல்படுவதாக அதிபர் ட்ரம்ப் முதலில் தெரிவித்து, அந்த மருந்தை எந்தவிதமான ஆய்வுமின்றிப் பரிந்துரைத்தார். கடந்த சில நாட்களுக்கு முன் இந்த மாத்திரைகளால் பக்க விளைவுகள் வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்தவுடன், தனது வார்த்தைகளில் இருந்து பின்வாங்கிய ட்ரம்ப், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் குறித்த ஆய்வு தேவை என்று தெரிவித்தார்
இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையர் ஸ்டீபன் எம்.ஹான் கூறியதாவது:
“ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா நோயாளிகளுக்கு மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். ஆனால், நோயாளின் உடல்நலம், ஏற்கெனவே இருக்கும் நோய்கள் இவற்றை நன்கு அறிந்த பின்புதான் இந்த மாத்திரைகளை நோயாளிகளுக்கு மருத்துவர்கள் வழங்க வேண்டும்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா நோயாளிகளுக்கு வழங்கினால் என்ன விதமான பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து தீவிரமான ஆய்வுகள் நடந்து வருகின்றன. முதல் கட்டமாக இதயக்கோளாறு, ரத்தஓட்டத்தை அதிகப்படுத்துதல், நரம்பு, தசை தளர்வு, பாதிப்பு போன்றவை ஏற்படுகின்றன. சில நேரங்களில் உயிருக்கே ஆபத்தாக முடிந்து விடுகிறது.
நியூயார்க் மருத்துவமனையில் சமீபத்தில் 84 கரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின், அசித்ரோமைஸின் மாத்திரைகளால் இதயத்துடிப்பு சீரில்லாமல் சென்று பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதயத்துடிப்பு ஆபத்தான நிலைக்குச் சென்று அவர்களை மீட்டுள்ளனர்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா நோயாளிகளுக்கு வழங்குவதால் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து முழுமையான தகவல் இல்லை. தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன”.
இவ்வாறு ஸ்டீபன் எம்.ஹான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT