Published : 22 Apr 2020 06:32 PM
Last Updated : 22 Apr 2020 06:32 PM
கரோனா வைரஸ் ஒருவருக்குப் பாதித்துள்ளதா என்பதை ரத்தப் பரிசோதனை, சாரி டெஸ்ட், பிசிஆர் டெஸ்ட் மூலம் அறியலாம். ஆனால் நாய்கள் மூலம் அறிய முடியுமா?
முடியும் என்று கூறுகிறார்கள் பிரிட்டனைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். நாய்களுக்கு இருக்கும் அதீத மோப்ப சக்தியால் நோயாளிகளை எளிதில் கண்டறிய முடியும் என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்கள். இதற்கு முன் பல்வேறு நோய்களையும் நோயாளிகளின் உடலிலிருந்து வெளிவரும் வாசத்தை வைத்தே நாய்கள் கண்டறிந்துள்ளன என்று தெரிவிக்கிறார்கள்.
பிரிட்டனில் உள்ள மில்டன் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு மெடிக்கல் டிடெக்ஸன் டாக் என்ற பிரிவு உருவாக்கப்பட்டது. அதாவது, ஒரு நோயாளியின் உடலின் உருவாகும் வாசத்தை வைத்து, அதே நோய் எத்தனை பேரைத் தாக்கி இருக்கிறது கண்டுபிடிப்பதாகும்.
மில்டல் கெய்னஸ் நகரில் உள்ள இந்த நாய்கள் காப்பகத்தில் கடந்த மாதத்திலிருந்து கரோனா வைரஸ் பாதித்த நோயாளியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்த பயிற்சி நாய்களுக்கு நடந்து வருகிறது. கரோனா வைரஸ் மட்டுமல்ல அனைத்து வகையான வைரஸால் பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறியும் பயிற்சியாகும்.
இது சற்று நம்பமுடியாததாக இருந்தாலும், இந்தப் பயிற்சியை நடத்தும் அமைப்பின் தலைவர் கிளாரி கெஸ்ட் கூறுகையில், “ஒவ்வொரு நோய் நமது உடலைத் தாக்கும்போதும் அப்போது நமது உடலில் ஒருவிதமான வாசம் வரும். இந்த வாசம் நோய்களுக்கு ஏற்றார்போல் மாறுபடும்.
அந்த வாசத்தை அடிப்படையாக வைத்து அதே வாசம் வரும் மற்ற நபர்களை, எந்த விதமான பரிசோதனையும் இன்றி நாய்களால் தனது மோப்ப சக்தியால் உணரமுடியும். இதற்கு முன் நாங்கள் நாய்கள் மூலம் புற்றுநோய், பார்க்கின்ஸன் நோய், பாக்டீரியா தொற்று போன்றவற்றை வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளோம்.
நாய்க்கு முழுமையான பயிற்சி அளித்துவிட்டால் சில மணிநேரத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பல நூறுபேரை எளிதாக கண்டுபிடித்துவிடும். அவர்களைத் தனிமைப்படுத்தி பரிசோதித்தால் தெரிந்துவிடும். இதற்கு முன் பல நோய்களை நாய்கள் கண்டுபிடித்ததற்கான ஆதாரங்கள் இருப்பதால் இதில் இறங்கியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு இங்கிலாந்தில் உள்ள துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிகல் மெடிசன் பிரிவில் கிளாரி கெஸ்ட் பணிபுரிந்து வருகிறார். இவர் தலைமையிலான குழுவினர்தான் சமீபத்தில் மலேரியா நோயாளிகளை தாங்கள் வளர்க்கும் நாய்கள் மூலம் கண்டறிந்தனர்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜின் அண்ட் ட்ராபிகல் மெடிசன் பிரிவின் தலைவர் ஜேம்ஸ் லோகன் கூறுகையில், “நாய்களின் கூர்மையான மோப்ப சக்தியால், எளிதாக, உச்சபட்ச துல்லியத் தன்மையுடன் நோயாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். ஆதலால் கரோனா நோயாளிகளை எளிதில் அடையாளம் காண இந்த முயற்சி முக்கிய மைல்கல்லாக அமையும். எங்கள் முயற்சி புரட்சிகரமானதாக அமையும்.
இதற்காக நாய்களுக்கு 6 வாரப் பயிற்சியைத் தொடங்கியுள்ளோம். நாய்களால் தோலின் வெப்பநிலை மாற்றம், காய்ச்சல் இருந்தால்கூட கண்டறிய முடியும். இது வெற்றிகரமாக அமைந்தால், விமான நிலையங்களில் வரும் பயணிகளைப் பரிசோதிக்க நாய்களைப் பயன்படுத்த முடியும்'' எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT