Published : 22 Apr 2020 06:09 PM
Last Updated : 22 Apr 2020 06:09 PM
சீனாவின் வூஹானிலிருந்து புறப்பட்டு வந்த கரோனா வைரஸ் தொற்று காரணமாக எங்கள் நாட்டுக்கு 149 பில்லியன் யூரோ டாலர்கள் இழப்பீட்டினை சீனா எங்களுக்கு வழங்க வேண்டும் என ஜெர்மனி நாடு பகிரங்கமாகக் கோரிக்கை வைத்தது. அதேபோல், வைரஸ் எப்படிப் பரவியது என்பதைக் கண்டுபிடிக்க விசாரணைக் குழு ஒன்றை சீனாவுக்கு அனுப்ப இருப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்தது. ஆனால் இந்த இரண்டு கோரிக்கைகளையுமே சீனா சிறிதும் சட்டை செய்யவில்லை.
ஜெர்மனி, அமெரிக்கா மட்டுமல்ல; கரோனா தொற்றால் எண்ணிப் பார்க்கமுடியாத உயிரிழப்புகளையும் நெருக்கடிகளையும் சந்தித்துவரும் மேற்குலக நாடுகள் பலவும் சீனா மீது கடும் கோபத்தைக் காட்டி வருகின்றன.
இந்நிலையில்தான் சீனாவிடம் 149 பில்லியன் யூரோ டாலர்களை ஜெர்மனி இழப்பீடாகக் கேட்டது. இழப்பீட்டுக் கோரிக்கையின் மீது சீனா தனது கடுமையான பாய்ச்சலைக் காட்டியிருக்கிறது. ‘ஜெர்மனி வெறுப்பை உமிழ்வதாகவும், உலகம் முழுவதையும் பாதிக்கும் ஒரு தீவிரத்தொற்று நோய்க்குக் குறிப்பிட்ட ஒரு நாட்டைக் குறை கூறி இழப்பீடு கேட்பது மோசமான செயல் என்றும் இது அயல்நாட்டு வெறுப்பையும், தேசியவாதத்தையும் தூண்டும் செயல்’ எனவும்சீனா விமர்சித்துள்ளது. அதேபோல் கரோனா வைரஸ் தோன்றியது எவ்வாறு என்பதைக் கண்டறிவதற்கான அமெரிக்க விசாரணைக் குழு வருமானால் அதை சீனா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் கூறிவிட்டது.
இதுபற்றி சீன வெளியுறவுத் துறை அளித்திருக்கும் விளக்கத்தில், ''இந்த கரோனா வைரஸ் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பொதுவான எதிரி. உலகின் எப்பகுதியிலும், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தோன்றியிருக்கலாம். மற்ற நாடுகளைப் போலவே சீனாவும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் சீனா குற்றவாளிகள் அல்ல. வைரஸால் பாதிக்கப் பட்ட ஒரு நாடு அதை உருவாக்கியதாகக் கூறுவது உண்மையல்ல.
அதேநேரம் வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர சீனா எடுத்த முன்மாதிரியான முயற்சிகளையும் அதில் கிடைத்த மதிப்புமிக்க அனுபவத்தையும் நாங்கள் உலக சமுதாயத்தின் முன்பு வெளிப்படுத்தியதற்காக எங்களைச் சர்வதேசம் பாராட்டியதை நினைவில் கொள்ள வேண்டும். 2008-ல் அமெரிக்காவின் நிதி நெருக்கடிதான் உலகளாவியப் பொருளாதார நெருக்கடியாக மாறியது. இதற்கு அமெரிக்காதான் பொறுப்பேற்க வேண்டும் என யாராவது கேட்டார்களா?'' என்றும் பூமரங்காக மாறி கேள்வியைத் திருப்பிவிட்டுள்ளது.
ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய இரண்டு பெரிய ஐரோப்பிய நாடுகளின் குற்றச்சாட்டுகளுக்கும் கோரிக்கைக்கும் சீனா உடனடியாக எதிர்வினையைக் காட்டமாகக் காட்டியிருக்கும் அதேநேரம், தனது சட்டை செய்யாத அணுகுமுறையையும் வழக்கம்போல் சீனா வெளிப்படுத்தியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT