Published : 22 Apr 2020 07:55 AM
Last Updated : 22 Apr 2020 07:55 AM
அமெரிக்க குடியுரிமைக்கான கிரீன் கார்டுகள் வழங்குவதை அடுத்த 60 நாட்களுக்கு நிறுத்திவைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது அமெரிக்காவுக்குள் இப்போதைக்கு குடியேற வருபவர்களை தடுக்கும் விதமான உத்தரவாகும்.
ஆனால் இந்த உத்தரவு தற்காலிகமாக அமெரிக்காவுக்கு வருபவர்களை பாதிக்காது என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் ஹெச்-1பி விசா வழங்கப்பட்டவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று பலரும் இதற்கு விளக்கம் அளிக்கின்றனர். வேளாண் நோக்கங்களுக்கான சீசனல் குடியேறிகளையும் இது பாதிக்காது.
எப்படியிருந்தாலும் இன்று ட்ரம்ப் கையெழுத்திடும் இந்த செயல் உத்தரவு கிரீன் கார்டுகளுக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இந்திய-அமெரிக்கர்களை பாதிக்கவே செய்யும் என்று ஒரு சில தரப்பினர் கூறுகின்ரனர்.. இதன் மூலம் நிரந்தரக் குடியுரிமை கோருபவர்களுக்கான நடைமுறைகள் மேலும் தாமதமடையும்.
“முதலில் அமெரிக்க ஊழியர்களை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த இடைநிறுத்தம் 60 நாட்களுக்கு இருக்கும். அதன் பிறகு இதில் மாற்றமோ அல்லது நீட்டிப்போ என்னாலும், இன்னும் சிலராலும் பொருளாதார சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு மதிப்பிடப்படும்” என்று ட்ரம்ப் செவ்வாயன்று தெரிவித்தார்.
இந்த உத்தரவு நிரந்தரக் குடியுரிமை கோரும் தனிநபர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று தெரிகிறது. ஏற்கெனவே கிரீன் கார்டு பெற்றவர்கள் தற்காலிகமாக அமெரிக்காவுக்குள் நுழைய தடையில்லை என்கிறார் ட்ரம்ப்.
அதாவது சிலர் உள்ளே வரலாம், நாங்கள் இதைச் செய்துதான் ஆகவேண்டும், மனிதார்த்த பார்வையிலிருந்து நாங்கள் இதைச் செய்துதான் ஆக வேண்டும், என்கிறார் அதிபர் ட்ரம்ப்.
அவர் மேலும் கூறும்போது, “அமெரிக்கர்கள் தங்கள் வேலைகளை மீண்டும் பெற வேண்டும், அவர்கள் வாழ்வாதாரம் மீட்கப்பட வேண்டும். அமெரிக்க பணியாளர்களின் நலன்களைக் காக்க நான் இந்த தற்காலிக இடை நிறுத்த உத்தரவைப் பிறப்பிக்க நிர்பந்திக்கப் படுகிறேன்.
அமெரிக்கா மீண்டும் திறக்கப்படும் போது வேலையற்ற அமெரிக்கர்களுக்கு முதலில் முன்னுரிமை அளிப்பதே முக்கியம். வேலையிழந்த அமெரிக்கர்கள் இடத்தில் புதிதாக குடியேறும் தொழிலாளர்கள் வேலையில் அமர்வது நியாயமல்ல.
மேலும் எதிர்காலத்த்ஹிலும் அமெரிக்க தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வண்ணம் கூடுதலாக குடியேற்ற விதிமுறைகள் மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்படும்.” என்றார் ட்ரம்ப்.
அமெரிக்காவில் கரோனா லாக் டவுன் காரணமாக 2 கோடியே 20 லட்சம் அமெரிக்கர்கள் வேலையிழந்துள்ளனர், நிவாரணத்துக்காக விண்ணப்பித்துள்ளனர், இந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 5 கோடியை நெருங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கரோனா வைரஸ் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய தாக்கத்தினால் இந்த முன் மாதிரியற்ற நடவடிக்கைகளை தான் மேற்கொள்ள வேண்டியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
”நிச்சயம் பொருளாதாரம் மீண்டும் முழுவீச்சில் இயங்கத் தொடங்கும்போது அமெரிக்கர்கள் பணிக்கு பெரிய அளவில் திரும்புவார்கள். இந்த நிலையில் அமெரிக்கர்களுக்காக நாங்கள் வேலையைத் தக்க வைக்க வேண்டும்.” என்கிறார் ட்ரம்ப்.
இப்போதைக்கு அமெரிக்காவில் சட்டபூர்வமாகவே சுமார் 10 லட்சம் அயல்நாட்டு பணியாளர்கள் அவர்கள் குடும்பங்களுடன் கிரீன் கார்டுகளுக்காகக் காத்திருக்கின்றனர்.
ஏற்கெனவே இருக்கும் சட்டத்தின் படி அமெரிக்கா ஆண்டுக்கு 1,40,000 பணிசார்ந்த கிரீன் கார்டுகளை அளிக்க வேண்டும். நாடு ஒன்றுக்கு ஆண்டுக்கு 7% கிரீன் கார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT