Published : 21 Apr 2020 07:27 PM
Last Updated : 21 Apr 2020 07:27 PM
கடந்த 2019-ம் ஆண்டு இதே ஏப்ரல் 21-ம் தேதி இலங்கையின் கொழும்பு நகரில் இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறு நாளின் வழிபாட்டின் நடுவே எதிர்பாராத பயங்கரவாத வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. தமிழர், சிங்களவர் எனும் வேறுபாடுகளை மறந்து இலங்கை மக்களை உலுக்கிய அக்கோரச் சம்பவம் கொழும்பு மாநகரில் மட்டுமல்லாது இலங்கையில் வேறு சில நகரங்களிலும் குண்டுவெடிப்பு பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டு இலங்கை வரலாற்றில் முதல்முறையாகப் பதிவாகின.
இந்தக் கொடிய தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிர்களைப் பறித்தும் கை, கால், கண் உள்ளிட்ட முக்கிய உடல் பாகங்களைச் சிதைத்தும் நடத்தப்பட்ட கொடூர பயங்கரவாத மனித வெடிகுண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்தாலும் அக்கோரக் காட்சிகளின் மீள முடியாத நினைவுகளின் நிழல் ஆறாத ரணமாக கொழும்பு மக்களின் மனதிலும் உலகம் முழுவதும் வாழும் இலங்கைத் தமிழ் மக்களின் மனதிலும் நிழலாடிக்கொண்டிருக்கிறது.
காலை நேரத் தாக்குதல்
இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறு ஒரு பண்டிகையாக இலங்கையிலும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அன்றைய தினம் புத்தாடைகளை அணிந்த சிறுபான்மை மக்கள் கூட்டம் கூட்டமாக அன்றைய காலை வழிபாட்டுக்காகச் சரியாக 8.45 மணிக்கெல்லாம் தேவாலயங்களுக்குச் சென்றனர். ஒரு மணிநேரம் நடைபெறும் அந்த வழிபாட்டின் நடுவே குண்டுகள் வெடித்தன. இலங்கையின் வர்த்தகத் தலைநகரான கொழும்பு உட்பட மூன்று நகரங்களில் இந்த வெடிகுண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மூன்று கிறிஸ்தவ தேவாலயங்களிலும், ஐந்து நட்சத்திர உணவு விடுதிகள் மூன்றிலும் இந்தத் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன.
முதலாவது தாக்குதல் நீர்க்கொழும்பு, புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடந்தது. அந்தத் தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தாக்குதல் கொழும்பு புனித அந்தோணியார் தேவாலயத்தில் நடந்தது. அங்கு ஐம்பதுக்கும் அதிகமானோர் படுகொலை செய்யப்பட்டனர். மூன்றாவது தாக்குதல் நாட்டின் கிழக்கு மாவட்டத்தின் தலைநகரான மட்டக்களப்பு நகரில் புகழ்பெற்ற சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்டது. இதில் முப்பதுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த மூன்று தேவாலயங்கள் குண்டுகள் வெடித்த அதேநேரம், கொழும்பு கிங்ஸ்பெர்ரி, சினமன் கிரான்ட், சங்ரிலா ஆகிய ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் குண்டுகள் வெடித்தன.
பிற்பகலிலும் தொடர்ந்த குண்டுவெடிப்பு
காலையில் நடந்த குண்டுவெடிப்புகளோடு தாக்குதல் முடிந்தது என்று கொழும்பு போஸீஸ் எண்ணிக்கொண்டிருந்தபோது அதேநாளின் பிற்பகல் வேளையில், கொழும்புவின் புறநகரான தெஹிவளையில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு அருகிலுள்ள ‘ட்ரப்பிக் இன்’ என்ற நட்சத்திர ஹோட்டலிலும் குண்டு வெடித்ததில் இருவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, கொழும்பின் பல பகுதிகளிலும் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது தெமட்டகொடையில் சந்தேகத்துக்கு இடமான வீடு ஒன்றில் குண்டுகள் இருப்பதாக வந்த தகவல்களை அடுத்து அங்கே சோதனையில் ஈடுபட்டிருக்கும்போதே குண்டுகள் வெடித்து ஆன் தி ஸ்பாட் மூன்று போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு அடுத்தடுத்து நடந்த வெடிகுண்டுத் தாக்குதல்களில் குழந்தைகள், பெரியவர்கள், வயோதிகர்கள், இளையோர் என 39 வெளிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 253 பேர்வரை கொல்லப்பட்டதுடன் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த பயங்கரவாதத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் பலரின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட நாளான ஏப்ரல் 23-ம் தேதியை இலங்கை அரசு துக்க நாளாக அறிவித்தது. காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பின்னர் உயிரிழந்த அதேநேரம், உயிர் பிழைத்த பலர் உறுப்புக்களை இழந்தவர்களாக இன்றும் வேதனையிலிருந்து மீள முடியாமல் உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் இலங்கை அரசால் அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹோட்டல்களும், தேவாலயங்களும் புனரமைப்புச் செய்யப்பட்டன. ஆனால், உயிர்களை இழந்தவர்களின் உறவினர்கள், உறுப்புகளின் இழந்தவர்களின் வாழ்க்கை துயரத்தின் நிழலிலிருந்து வெளியேற முடியுமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT