Published : 04 Aug 2015 11:21 AM
Last Updated : 04 Aug 2015 11:21 AM
பால்கன் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கிரீஸ் 1400 தீவுகளுக்கும் அதிகமானவற்றைக் கொண்டுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அங்கு பலவித பொருளாதார மற்றும் சமூக மாறுதல்கள். சுற்றுலாவும், கப்பல் கட்டுதலும் கிரீஸுக்கு வருமானத்தை அளித்தது. ஆனால் 2008-ல் தொடங்கிய பொருளாதாரச் சரிவு அந்த நாட்டை பாதாளத்துக்குக் கொண்டு சென்றது.
அண்டை நாடான துருக்கியோடு எல்லைப் பிரிச்னை கிரீஸுக்கு உண்டு. முக்கியமாக சைப்ரஸ் தீவை இரு நாடுகளும் பிரித்துக் கொண்டுள்ளன. என்றாலும் இந்த நாடுகள் ஒருசேர ஒரு விபரீதத்தை சந்தித்தன.
1999-ல் அந்தப் பகுதியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் இரு நாடுகளுமே பாதிக்கப்பட்டன. காலத்தின் கட்டா யமாக ஒன்றுக்கொன்று உதவின.
கிறிஸ்தவ மதம் தோன்றுவதற்கு முன்பே இருந்த பல கடவுளர்களை வழிபடும் மார்க்கத்தைச் சேர்ந்த பலர் கிரீஸில் இன்னமும் உண்டு. ஒலிம்பஸ் குன்றை புனிதமாக வழிபடுகிறார்கள். ப்ரோமெதியஸ் என்பவர் கிரேக்கர்களின் நாயகன். அதாவது கடவுளர்களிடமிருந்து நெருப்பை திருடிக் கொண்டு வந்து கிரேக்க மக்களுக்கு இவர் நன்மை செய்தான் என்று கூறப்படுகிறது. ஆண்டுதோறும் இவருக்கு ஆயிரக்கணக்கானவர்கள் விழா எடுக்கின்றனர்.
இந்த விழாவில் முழுக்க கிரேக்க உடை அணிந்த ஆறு தடகள வீரர்கள் (ஈட்டிகள், கேடயங்கள்கூட இவர்கள் வசம் இருக்கும்) ஒலிம்பஸ் குன்றை வேகமாக ஏறிக் கடப்பார்கள். சுமார் 10 கி.மீட்டர் தூரம் கொண்ட பாதை அது. 98 சதவீதம் கிரேக்க மக்கள் ஆர்தடாக்ஸ் கிறிஸ்தவத்தை மதமாகக் கொண்டவர்கள். ஒரு காலத்தில் இந்த மதத்தைச் சேர்ந்த வர்கள் அமைதியை அழிப்பவர் களாகப் பிறரால் கருதப்பட்ட வர்கள். இன்று அவர்களே அமைதி இழந்து கிடப்பதுதான் சோகம்.
கிரீஸ் பொருளாதாரத்தில் நிலை குலைந்து நிற்பது குறித்து இந்தத் தொடரின் தொடக்கத்தில் சற்று விளக்கமாகவே குறிப்பிட்டோம்.
ஜூலை 12, 2015 அன்று ஐரோப்பிய யூனியனின் தலை வர்கள் கிரீஸ் பொருளாதாரத்துக்கு உதவ மீண்டும் ஒப்புக் கொண்டார்கள். கிரீஸ் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறாமல் பாதுகாக்கப்பட்டது.
பலவிதப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்கு கிரீஸ் ஒப்புக் கொண்டது. வாட் வரிவிதிப்பு, ஓய்வூதியத்துக்கான வயது மற்றும் அந்தத் தொகையில் பெரும் மாற்றம் போன்ற பல மாறுதல்கள் அறிமுகமாக உள்ளன.
ஜெர்மனி அளித்த அழுத்தம் காரணமாக ஐரோப்பிய யூனியன் வேறொரு நிபந்தனையையும் கிரீஸுக்கு விதித்தது. இதன்படி 50 பில்லியன் யூரோ மதிப்புள்ள கிரேக்க சொத்துக்கள் ஒரு புதிய சிறப்பு நிதிக்கு மாற்றப்படும். கடனை அடைப்பதற்காக மட்டுமே இந்த நிதி உருவாக்கப்பட வேண்டும்.
பதிலாக பிற ஐரோப்பிய நாடுகள் சுமார் 85 பில்லியன் யூரோ தொகையை கிரீஸின் பொரு ளாதார நெருக்கடியை சரி செய்ய அளிப்பார்கள்.திரைமறைவில் வேறுபல நிபந்தனைகளுக்குக்கூட கிரேக்கப் பிரதமர் சிப்ராஸ் உடன்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக தனது இடதுசாரிக் கொள்கைகளை கிரேக்க அரசு கைவிட வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப் பட்டிருக்க வாய்ப்பு உண்டு.
கடந்த ஐம்பது வருடங்களாகவே நிதிச் சீர்திருத்தத்திற்கு கிரீஸ் முயன் றாலும் அது நடைமுறையில் ஏனோ அறிமுகப்படுத்தப்படவே இல்லை.
இந்த நிலையில் வேறொரு உள்நாட்டுக் குழப்பமும் கிரீஸில் சேர்ந்திருக்கிறது. அந்த நாட்டின் முன்னாள் நிதி அமைச்சர் யானிஸ் வரவுஃபகிஸ் என்பவர் மீது கிரிமினல் குற்றங்கள் சுமத்தப் பட்டுள்ளன. யூரோ மண்டலத்தி லிருந்து வெளியேறுவதற்கு முன்னோடி போல இவர் ஒரு மாற்று நாணயத்தை அறிமுகப்படுத்தவி ருந்தார் என்பதுதான் அது.
கிரேக்க வழக்கறிஞர் ஒருவர் இந்த முன்னாள் நிதி அமைச்சர் மீது அந்த நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்.
முன்னாள் நிதி அமைச்சர் ஒரு மார்க்ஸியவாதி என்பதனாலோ என்னவோ ஐரோப்பிய மத்திய வங்கிக்கு எதிர் நிலையையே தொடர்ந்து எடுத்து வந்தார் என்பதை நிரூபிக்கப் போகிறார்களாம். போதாக்குறைக்கு தனது சிறு வயது நண்பர் ஒருவரை உதவிக்கு அழைத்துக் கொண்டாராம். அந்த நண்பர் இப்போது கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரி யராகப் பணிபுரிபவர். என்ன உதவி? அரசின் கணினிகளை கொஞ்சம் மாற்றி அமைத்து பெரும் வரி செலுத்துபவர்கள் குறித்த விவரங் களை தான் பெற வேண்டும் என்பதற்காக ஏற்பாடு செய்யப் பட்டதாம். நாட்டுக்குள்ளேயே ஓர் இணைப் பொருளாதாரத்தை நடத்த முயற்சி செய்திருக்கிறார்.
‘‘தேச துரோகம் எனக் குற்றம் சாட்டி என்னை தூக்கில் போடவும் வாய்ப்பு உண்டு. எல்லாம் இந்த ஐந்து மாத தவறான ஆட்சியின் விளைவுதான்’’ என்றும் இவர் கூறி இருக்கிறார். சென்ற மாதம் ராஜினாமா செய்தபோது நடந்ததை எல்லாம் அரசு அதிகாரிகளிடம் பகிர்ந்து கொண்டதாகவும், அவை நாட்டின் நலனுக்காகத்தான் என்றதாகவும் அவர் கூறுகிறார். சர்வதேச நிதியத்தின் மறைமுக தலையீட்டில்தான் தனக்கெதிராக வழக்கு தொடுக்கப்பட்டதாக அவர் கூறுகிறார்.
இன்னும் என்னென்ன ரணங்களை கிரீஸ் சந்திக்க வேண்டி இருக்குமோ! இப்போதைக்கு அந்த நாட்டு மக்கள், தங்கள்மீது சுமத்தப்பட்டிருந்த ஒரு தடை நீங்கியதற்காக பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தங்கள் ஏ.டி.எம். அட்டைகளையும், கடன் அட்டைகளையும் அவர்கள் பயன்படுத்தலாம்.
தேசமே மறைமுக ‘கடன் அட்டைகளை’ தடையில் லாமல் பயன்படுத்திக் கொண்டிருக் கும்போது மக்களை மட்டும் அது தடுத்துவிட முடியுமா என்ன?
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT