Published : 20 Apr 2020 02:00 PM
Last Updated : 20 Apr 2020 02:00 PM

ஐரோப்பியர்களுக்கு வென்டிலேட்டர்கள்; ஆப்பிரிக்கர்களுக்கு வெறும் சோப்பா?

உலகத் தலைவர்கள் தொடங்கி தூய்மைப் பணியாளர்கள் வரைக்கும் பாதிப்பை உண்டாக்கும் கரோனா வைரஸ், அனைத்துத் தரப்பினரையும் சமன்படுத்தும் விஷயமாக இருக்கிறது என்று தினமும் எத்தனை முறை கேள்விப்படுகிறோம்?

பயங்கரமான ஒரு வைரஸ், ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட நமது சமூகங்களை இணைக்கும் இழையாக இருக்கிறது என்பதை நம்மால் உறுதியாகச் சொல்லிவிட முடியுமா?

ஆராய்ந்து பார்த்தால், இந்தப் பொதுக் கருத்தில் அப்படி ஒன்றும் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. வழக்கறிஞர்களும், வங்கியாளர்களும் தத்தமது வீட்டிலிருந்து பாதுகாப்பாகப் பணிசெய்துவரும் நிலையில், மறுவாழ்வு இல்லங்களில் பணிபுரிபவர்கள், மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள், பொருட்களை விநியோகம் செய்யும் வாகனங்களின் ஓட்டுநர்கள் போன்றோர், தொற்றுக்குள்ளாகும் அபாயம் நிறைந்த இந்தச் சூழலிலும் தொடந்து வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொள்ளுதல் என்பது, அகதிகள் அல்லது வீடற்றவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களுக்கு ஒரு சிறந்த தெரிவு அல்ல. மேலும், சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இந்த நோய்க்கு அதிக அளவில் பலியாகிறார்கள். உதாரணத்துக்கு, அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தில், ‘கோவிட்-19’ நோய்க்குப் பலியாகின்றவர்களில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்கள் 70 சதவீதம் பேர். இத்தனைக்கும் அம்மாநிலத்தின் மக்கள் தொகையில் அவர்கள் வெறும் 33 சதவீதம்தான்.

மருத்துவ வசதியற்ற ஆப்பிரிக்க நாடுகள்
கடும் அழுத்தத்தின் காரணமாக சீனா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால், உலகின் பெரும்பாலான பகுதிகளில் நிலவரம் வேறு விதமாக இருக்கிறது. காஸாவில் 20 லட்சம் பேருக்கு 20 வென்டிலேட்டர்கள்தான் இருக்கின்றன. 50 லட்சம் மக்கள்தொகையைக் கொண்ட மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு நாட்டில் மூன்றே மூன்று வென்டிலேட்டர்கள்தான் இருக்கின்றன. பர்கினோ ஃபாஸோ நாட்டின் 2 கோடி குடிமக்களுக்கும் இருப்பது 12 தீவிர சிகிச்சைப் படுக்கைகள்தான்.

இந்த நாடுகளின் இளைய தலைமுறையினர் ‘கோவிட்-19’ நோயின் பாதிப்பைக் குறைக்க உதவுவார்கள் என்று நாம் நினைக்கலாம். ஆனால், காசநோய், எச்ஐவி / எய்ட்ஸ், பல்வேறு தொற்றா நோய்கள், காலரா, தட்டம்மை, மலேரியா போன்ற தொற்றுநோய்கள் போன்றவற்றால் அவர்களில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவற்றின் உச்சமாக ‘கோவிட்-19’ நோயும் சேர்ந்துகொண்டிருப்பது, மிக ஆபத்தான ஒரு சேர்க்கையாக மாறும் சூழல் உறுதியாகியிருக்கிறது.

நியாயமற்ற வேறுபாடு
தற்போது, ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் ‘கோவிட்-19’ நோயாளிகளில் 80 சதவீதம் பேருக்குத் தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. மீதமுள்ள 20 சதவீதம் பேருக்கே அது தேவைப்படுகிறது. இந்த 20 சதவீதம் பேருக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை தேவைப்படும். இவர்களில் கால் சதவீதம் பேருக்கு வென்டிலேட்டர்கள் அவசியம். இந்த சிகிச்சைகள் கிடைக்காதவர்களுக்கு மூச்சுத்திணறலால் மரணம் ஏற்படுவது தவிர்க்கவே முடியாதது.

1990களில் எச்ஐவி / எய்ட்ஸ் பெருந்தொற்று தொடங்கிய சமயத்தில், வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கிடைப்பதில் ஐரோப்பிய நாடுகளுக்கும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் இடையில் எத்தகைய வேறுபாடுகள் இருந்தனவோ, அதே வேறுபாடுகள் இப்போது ஆக்ஸிஜன், வென்டிலேட்டர்கள் விஷயத்திலும் ஏற்படப்போகின்றன. இப்படியான வேறுபாடுகள் தேவையுமல்ல, ஏற்றுக்கொள்ளத்தக்கதும் அல்ல என்பதைக் காட்ட தெற்கு ஆப்பிரிக்காவில் வைரஸ் எதிர்ப்பு சிகிச்சைத் திட்டங்களை, ‘டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ (Doctors Without Borders) எனும் அமைப்பு பல ஆண்டுகளாக முன்னெடுத்துவருகிறது.

இந்த நோயின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொண்டிருக்கும் நாம், தரமான சிகிச்சையைப் பெற முடியாத நிலையில் இருப்பவர்களிடம் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பதை உணர்ந்துகொள்வதையும் மறுக்கமுடியாது. ஆக்ஸிஜன் விஷயத்தில் இத்தகைய வேறுபாடு நிலவுவதையும் நாம் ஏற்க மறுக்க வேண்டும்.

செயல்பட வேண்டிய தருணம்
‘கோவிட்-19’ வேகமாகப் பரவுகிறது. அது மட்டுமல்ல, வைரஸ் தொற்று ஏற்படுவதற்கும் அதன் காரணமாக மரணம் நிகழ்வதற்கும் இடைப்பட்ட காலம் ஒரு மாதத்துக்கும் குறைவுதான். இவ்விஷயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த நாம் விரும்பினால், நம்மிடம் வருடக்கணக்கில் நேரம் இல்லை. சில வாரங்கள்தான் இருக்கின்றன.
பணக்கார நாடுகளைப் பொறுத்தவரை, இதற்கு முன் சந்தித்திராத சவாலான ‘கோவிட்-19’ விஷயத்தில், அடித்தட்டு மக்களுக்கான உதவிகளை வழங்குவது தவிர்க்க முடியாதது என்றாலும், சாத்தியக்கூறுகளைக் கொண்டதுதான். ஆனால், போதுமான நிதியாதாரம் இல்லாத நாடுகளின் சுகாதாரத் துறைகளால் இந்தச் சுமைகளைத் தாங்கவே முடியாது.

போதாமைகளின் பட்டியல்
முதலாவதாக, தற்போது கிடைத்துவரும் சிகிச்சை வசதிகளுக்கும், உண்மையான தேவைக்கும் இடையிலான வேறுபாடு மிகப் பெரியது. அதிக வருவாய் கொண்ட நாடுகளில், ஆக்ஸிஜன் சிகிச்சை என்பது ஓரளவு எளிதாகக் கிடைக்கும் விஷயம்தான். ஒவ்வொரு மருத்துவமனையிலும் பைப் லைன் மூலம் ஆக்ஸிஜன் வழங்கும் வகையில் மேம்பட்ட வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால், நாங்கள் பணிபுரியும் மருத்துவமனைகளில் நிலவரம் அப்படி இல்லை. ஆக்ஸிஜன் வழங்கும் ‘ஆக்ஸிஜன் கான்சென்ட்ரேட்டர்’ (Oxygen concentrator) சாதனங்கள் இயங்குவதற்கு, நிலையான மின்விநியோகம் அவசியம். இல்லையென்றால், பாட்டில்கள் மூலம் ஆக்ஸிஜன் வழங்குவதுதான் ஒரே வழி. ஆனால், நாட்கணக்கில், வாரக்கணக்கில் சிகிச்சை தேவைப்படும் ஒரு நோய்க்கு, நடைமுறை சாத்தியமுள்ள தீர்வல்ல இது. பல இடங்களில், மருத்துவ சிகிச்சைக்குப் பயன்படுத்தும் அளவிலான ஆக்ஸிஜன் விநியோகமே இல்லை.

இரண்டாவதாக, கரோனா வைரஸ் தொற்றைப் பொறுத்தவரை, உரிய நேரத்தில் உயர் சிகிச்சை வசதிகள் தேவைப்படுகின்றன என்பது குறித்த புரிதலோ, தர்க்கரீதியான அறிவோ, மனிதாபிமான அடிப்படையில் செயல்படும் மிகச் சில நிறுவனங்களுக்குத்தான் உள்ளது. நாம் இன்றைக்கு எதிர்கொண்டிருப்பது ஒரு புதிய வைரஸை. இதை எதிர்கொள்ள சிறப்புத் திறன்கள் அவசியம். ஒவ்வொரு நோயாளிக்கும் வாரக்கணக்கில் ‘இன்டியுபேஷன்’ (intubation) சிகிச்சை அளிப்பதும் அவசியம்.

நான் அங்கம் வகிக்கும் ‘டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ அமைப்பு, அவசரகால சிகிச்சைக்கும், பெருந்தொற்றுக்கும் சிறப்பு வசதிகள் வழங்கவே செய்கிறது. எனினும், போர்க்கள மருத்துவமனைகளில்கூட சில மணி நேரங்களுக்கு அல்லது நாட்களுக்குத்தான் எங்களால் இன்டியுபேஷன் சிகிச்சையை வழங்க முடிகிறது.

இருப்பினும், ஆபத்தான நிலையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் சிகிச்சை வழங்கவும், வென்டிலேட்டர் வசதி வழங்கவும், எங்கள் எல்லையையும் தாண்டி நாங்கள் முயற்சிக்கிறோம். சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்கள், குடிசைவாழ் மக்கள்… ஏன் சில இடங்களில் ஒட்டுமொத்த மக்கள் தொகையுமே போதிய சிகிச்சை இல்லாமல் இருக்கும் நிலையில், இந்த வேறுபாட்டை எதிர்கொள்ளும் சவாலை ஏற்கிறோம்.

முட்டுக்கட்டைகள் தகர்க்கப்பட வேண்டும்
ஆனால், முட்டுக்கட்டைகள் தகர்க்கப்படாத வரை, இவற்றில் எதுவுமே சாத்தியமாகிவிடாது. தேச எல்லைகளைக் கடந்து மருத்துவ மற்றும் மனிதாபிமான அமைப்புகளின் ஊழியர்கள் சுதந்திரமாகச் சென்றுவருவதற்கு அனுமதிக்கப்பட வேண்டும். மிகுந்த பாதிப்புகளைச் சந்திக்கும் நாடுகளுக்கு மருத்துவப் பொருட்கள் ஏற்றுமதி செய்வதற்கான தடைகள் நீக்கப்பட வேண்டும். புதிதாகத் தயாரிக்கப்பட்ட மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு சாதனங்கள் போன்றவை முன்னணியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தேச எல்லைகளைக் கடந்து கிடைக்கச்செய்ய வேண்டும்.

ஐரோப்பிய நாடுகளைப் போலன்றி, உலகின் பாதி நோயாளிகள், போதிய ஆக்ஸிஜன் சிகிச்சை, தீவிர சிகிச்சை வசதியின்றி இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்ள வேண்டிய சூழலை உருவாக்கியிருக்கும் கொள்கைகளை நாம் நிராகரிக்க வேண்டும். இதை வாசிக்கும் நீங்கள், உலகின் எந்தப் பகுதியைச் சேர்ந்தவராக இருந்தாலும், வெறுமனே சோப்பால் கைகழுவச் சொல்லும் துண்டுப் பிரசுரங்களை ஆப்பிரிக்க தேசங்களின் மக்களுக்கு விநியோகித்தாலே போதும் என்று எதிர்பார்க்கும் கொள்கைகளைக் கண்டிக்க வேண்டும்.

‘கோவிட்-19’ தொற்றுக்குள்ளான ஆயிரக்கணக்கானோர், போதிய ஆக்ஸிஜன் வசதியின்றி மரணமடைய வேண்டிய சூழல் தொடர்வதை நாம் அனைவருமே எதிர்க்க வேண்டும்!

- கிறிஸ்டோபர் ஸ்டோக்ஸ் (‘டாக்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ அமைப்பின் மூத்த நிபுணர்)
தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன் | நன்றி: அல் ஜஸீரா (கத்தார் ஊடகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x