Last Updated : 20 Apr, 2020 08:16 AM

 

Published : 20 Apr 2020 08:16 AM
Last Updated : 20 Apr 2020 08:16 AM

கனடாவில் பயங்கரம்: மர்ம நபரின் கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு - 16 பேர் பலி- இதுவரை வரலாற்றில் இல்லாத தாக்குதல்

துப்பாக்கிச் சூட்டுக்கு பிறகு கனடா போலீஸ்.

கனடா நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு பலர் ஆளாகியுள்ள நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் நோவா ஸ்காட்டியா நகரில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார். போலீசார் போல் உடையணிந்து கொண்டு வாகனம் ஒன்றில் சுற்றி திரிந்த அந்த நபர் பலரது வீடுகளிலும் தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 16 பேர் பலியான சம்பவம் அந்த நாட்டையே உலுக்கியுள்ளது.

இந்த சம்பவத்தில் பெண் போலீசார் உள்பட 16 பேர் பலியாகி உள்ளனர். மற்றொரு காவலர் காயமடைந்து உள்ளார். உயிரிழந்த பெண் கான்ஸ்டபிள் ஹெய்தி ஸ்டீவன்சன் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து தேடுதல் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர். 6க்கும் மேற்பட்ட போலீசார் வாகனங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த பணியில் ஈடுபட்டன. இதன்பின்னர் நகரின் என்பீல்டு என்ற இடத்தில் கேஸ் நிலையத்தில் வைத்து அந்நபரை கண்டறிந்தனர்.

போலீசாரின் விசாரணையில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட நபர் கேப்ரியல் வார்ட்மேன் (வயது 51) என தெரிய வந்துள்ளது. அவரும் உயிரிழந்து விட்டார் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு தீயும் வைத்துள்ளார். இந்தத் தாக்குதல் அந்த நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாதது. போர்ட்டாபிக் என்ற சிறிய ஊரில் வீடுகளில் வெளியேயும் உள்ளேயும் ஆங்காங்கே உடலக்ள் சிதறிக் கிடந்தன. இந்த ஊர் ஹாலிபாக்ஸுக்கு 100 கிமீ தொலைவில் உள்ளது.

மற்ற இடங்களிலும் உடல்கள் கிடந்தன. முதலில் தன் விரோதியை இலக்கு வைத்து பிறகு கண்மூடித்தனமாக சுட்டிருக்க வேண்டும், துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பாக போலீஸார் குடியிருப்பு வாசிகளுக்கு எச்சரிக்கும் விதமாக கதவுகளைப் பூட்டிக் கொண்டு இருக்குமாறு எச்சரித்தனர். இப்பகுதியில் பல வீடுகளுக்கு தீயும் வைக்கப்பட்டுள்ளது.

‘அர்த்தமற்ற வன்முறை’

துப்பாக்கி சூடு நடத்தி தானும் மாண்ட அந்த நபர் கேப்ரியல் வார்ட்மேன், இவருக்கு வயது 51. இவர் பகுதி நேரமாக போர்டபிக்கில் வாழ்பவர் என்று தெரியவந்துள்ளது. போலீஸார் போல் சீருடை அணிந்து போலீஸார் பயன்படுத்தும் ராயல் கனடியன் போலீஸ் வாகனம் போன்ற ஒன்றில் வந்துள்ளார்

முதலில் அவரை கைது செய்ததாக அறிவித்த கனடா போலீஸார், “கனடா வரலாற்றில் இல்லாத ஒரு மோசமான அர்த்தமற்ற வன்முறைச் செயல்” என்று வேதனை தெரிவித்தனர்.

அமெரிக்கா போல் இல்லாமல் மக்களை கொன்றழிக்கும் இது போன்ற துப்பாக்கிச் சூடுகள் கனடாவில் மிகவும் அரிதானது. 1989-ல் நடந்த தனிமனித பைத்தியகார துப்பாக்கிச் சூட்டில் 14 பெண்கள் பலியானதையடுத்து அந்த நாட்டில் துப்பாக்கி கட்டுப்பாட்டுச் சட்டம் இயற்றப்பட்டது.

இப்போது கனடாவில் பதிவு செய்யாமல் கைத்துப்பாக்கி வைத்திருப்பது சட்ட விரோதமாகும்.

“ஒரு நாடாக இது போன்ற தருணஙளில் நாம் ஒன்றாக இருப்போம் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருப்போம். நாம் சேர்ந்து பலியான குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்போம். அவர்களுக்கு உதவுவோம்” என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியு தெரிவித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x