Published : 19 Apr 2020 07:01 PM
Last Updated : 19 Apr 2020 07:01 PM
இஸ்ரேலில் கரோனா பரவல் விகிதம் குறையத் தொடங்கியுள்ள நிலையில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் தற்போது நடைமுறையில் இருக்கும் ஊரடங்கு கட்டுப்பாட்டை இன்று முதல் படிப்படியாக தளர்த்துவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கரோனோ வைரஸ் பரவலைத் தடுக்கும் விதமாக சமூக விலகலைக் கடைப்பிடிக்க உலக நாடுகள் பலவும் அதன் தொழில் செயல்பாடுகளை முடக்கியது. இதனால் தொழில் நிறுவனங்கள் முற்றிலும் முடங்கி, பொருளாதாரம் கடும் நெருக்கடிக்கு உள்ளானது. அதேசமயம் தொழில் செயல்பாடுகளுக்கு அனுமதியளித்தால் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கும் என்ற நிலையில் பல நாடுகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ஊரடங்கைக் கடைப்பிடித்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேலில் கரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் அந்நாட்டு அரசு, ஆரம்ப நிலையிலான தொழில் செயல்பாடுகள் மீதான கட்டுப்பாட்டைத் தளர்த்தியுள்ளது.
மார்ச் 14 அன்று இஸ்ரேல் ஊரடங்கைக் கொண்டுவந்தது. அலுவலகம், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் தங்கள் வீடுகளில் இருக்க வேண்டும் என்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஊரடங்கு கொண்டு வரப்பட்டு ஒரு மாதங்களுக்கு மேலாகியுள்ள நிலையில் தற்போது ஊரடங்கைப் படிப்படியாகத் தளர்த்துகிறது.
ஊரடங்கினால் இஸ்ரேலின் பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. பல நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படும் நிலையை எட்டியுள்ளன. வேலையின்மை 25 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறும்போது, ''கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்பட்டுத்துவதில் வெற்றியடைந்துள்ளோம். ஊரடங்கு நடவடிக்கையால்தான் கரோனா தீவிரம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன் பலனாகவே இப்போது நாம் இயல்பு நிலையை நோக்கித் திரும்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிகிறது'' என்று தெரிவித்தார்.
இஸ்ரேலில் இதுவரையில் 13,362 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 167 பேர் உயிரிழந்துள்ளனர். 3,564 பேர் குணமடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT