Published : 18 Apr 2020 07:13 AM
Last Updated : 18 Apr 2020 07:13 AM
உலகை உலுக்கு வரும், மனித குலத்துக்கு பேரச்சுறுத்தலாகியிருக்கும் கரோனாவிலிருந்து விடிவு உண்டா என்று பலரும் எதிர்பார்த்து வரும் நிலையில், உலகெங்கும் வாக்சைன்கள் தயாரிப்பு மற்றும் கரோனா எதிர்ப்பு மருந்து குறித்த ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் அன்று நாம் குறிப்பிட்ட ரெம்டெசிவைர் ( remdesivir) என்ற பரிசோதனை மருந்தினால் கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்து சில நாட்களிலேயே வீடு திரும்புவதாக அமெரிக்க மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த மருந்திற்கான கிளினிக்கல் பரிசோதனை செய்யப்பட்ட தீவிர மூச்சுக்குழல் நோய்க்குறிகள் மற்றும் காய்ச்சல் உள்ளவர்களுக்கு ரெம்டெசிவைர் கொடுத்துப் பார்த்ததில் ஒரு வார சிகிச்சைக்கு முன்பாகவே குணமடைந்து வீடு திரும்புவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் என்று ஸ்டாட் நியூஸ் கூறுகிறது.
சிகாகோ பல்கலைக் கழகத்தில் தொற்று நோய் நிபுணராக இருந்து வரும் டாக்டர் கேத்தலீன் முலேன் கூறும்போது, “எங்களது பெரும்பாலான நோயாளிகள் ஏற்கெனவெ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இரண்டு பேர்தான் உயிரிழந்தனர். இவர்தான் இந்த மருத்துவச் சோதனைக் குழுவின் முன்னணி மருத்துவர் ஆவார், இவர் வீடியோ ஒன்றில் ரெம்டெசிவைரின் செயல் திறன் பற்றி பேசியுள்ளார்.
ஆனால் சிகாகோ பல்கலைக் கழகம் இது குறித்த எச்சரிக்கையுடன், “நடைபெற்றுக் கொண்டிருக்கும் கிளினிக்கல் சோதனைகளின் மூலம் கிடைக்கும் பகுதியளவு தகவல் என்பது பூர்த்தியடையாத தகவலாகும். இதிலிருந்து இந்த மருந்தின் பாதுகாப்பு, செயல் திறன் அல்லது எதிர்காலப் பயன்பாடு குறித்த முடிவுகளுக்கு நாம் வந்து விடக்கூடாது, இது இன்னும் ஆய்வில்தான் உள்ளது” என்று தெரிவித்துள்ளது.
நிமோனியாவையும் திடீர் சுவாசப்பாதை பிரச்சினைகளையும் உருவாக்கும் கோவிட்-19-க்கு இன்னும் அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சை என்பது கண்டுபிடிக்கப்படவில்லை. தேசியச் சுகாதார அமைப்பு ரெம்டெசிவைர் உட்பட பல மருந்துகளை கிளினிக்கல் ட்ரையல் மூலம் சோதித்து வருகிறது என்று சிகாகோ பல்கலைக் கழக அறிக்கை தெரிவிக்கிறது.
ஜிலீட் சயன்ஸஸ் என்ற நிறுவனம் தயாரித்து வரும் ரெம்டெசிவைர் என்ற இந்த மருந்து எபோலாவுக்கு எதிராக வெற்றியடையவில்லை. ஆனால் விலங்குகளில் சோதித்த போது கோவிட்-19 உட்பட கரோனா தொற்றுக்களான சார்ஸ், மெர்ஸ் போன்றவை தடுக்கப்படுவது தெரியவந்துள்ளது. கடந்த பிப்ரவரியில் உலகச் சுகாதார அமைப்பும் ரெம்டெசிவைர் கோவிட்-19-க்கு எதிராக வேலை செய்கிறது என்று தெரிவித்தது.
இந்த மருந்தின் பரிசோதனைகள் மற்ற 12 மையங்களிலும் நடைபெற்று வருகிறது. தீவிர கரோனா தொற்று நோயாளிகள் 2,400 பேருக்கு இந்த ரெம்டெசிவைர் கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது. தீவிரமல்லாத மிதமான கரோனா அறிகுறிகள் உள்ள 1600 பேருக்கும் ரெம்டெசிவைர் கொடுக்கப்படுகிறது.
இந்த மருத்துவ சோதனைகளின் முடிவுகள் இந்த மாத இறுதியில் தான் வரும் என்று இந்த மருந்தைத் தயாரிக்கும் ஜிலீட் சயன்ஸஸ் தெரிவித்துள்ளது.
இந்த ஒட்டுமொத்த ஆய்வுகளின் தரவுகளிலிருந்துதான் முடிவுகள் பெற முடியும். அனுபவ அடிப்படையில் கூறப்படுவது ஊக்கமளிப்பதாக இருந்தாலும் மருந்தின் பாதுகாப்பு செயல் திறன் குறித்த புள்ளிவிவர அடிப்படையிலான ஆதாரங்கள் இன்னும் நிரூபிக்கப்பட வேண்டியுள்ளது. இப்போதைக்கு அனுபவ அடிப்படையில், முழுதும் நிறைவேறாத பரிசோதனைகளில் ரெம்டெசிவைர் நம்பிக்கை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT