Published : 16 Apr 2020 07:45 PM
Last Updated : 16 Apr 2020 07:45 PM
இந்தோனேசியாவில் மே- ஜூன் மாதங்களில் கரோனா தொற்று உச்சத்தைத் தொடும் என்று அந்நாட்டு மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய அரசு கரோனா வைரஸ் தொடர்பாக அலட்சியமாக இருந்து வருவதாகவும், மிகக் குறைந்த அளவிலே இதுவரை பரிசோதனைகளை மேற்கொண்டிருப்பதாகவும் இதன் விளைவாக அடுத்த இரு மாதங்களில் மிக அதிக எண்ணிக்கையில் கரோனா தொற்று இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ நிபுணரும் இந்தோனேசியா அரசின் கரோனா பணிக்குழுவின் ஆலோசகருமான விக்கு அடிசாஸ்மிட்டோ கூறுகையில், ”இந்தோனேசியாவில் மே மாதத்தில் கரோனா தொற்று மிகத் தீவிரம் எடுக்கும். ஜூன் மாதம் வரையில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கும். இந்தக் காலகட்டத்தில் 95,000 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது” என்று தெரிவித்தார்.
வெவ்வேறு புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கரோனா பாதிப்பு சாத்தியம் கணக்கிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்தோனேசிய அரசு விரைந்து செயலில் இறங்காவிட்டால், மே மாத முடிவில் 15 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும். 1,40,000 பேர் உயிரிழக்கக்கூடும் என்றும் இந்தோனேசியப் பல்கலைகழகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் இதுவரை 5,516 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 548 பேர் குணமடைந்துள்ள நிலையில் 496 பேர் உயிரிழந்துள்ளனர்.
போதிய அளவில் கரோனா பரிசோதனைகளுக்கான கருவிகளை இந்தோனேசியா கொண்டிருக்கவில்லை. இதன் காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரோனா பரிசோதனை தொடர்பாக இந்தோனேசிய அரசின் செயல்பாடைப் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்தியாவிலும் முறையான அளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாதது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT