Published : 14 Apr 2020 12:45 PM
Last Updated : 14 Apr 2020 12:45 PM
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 5,493 ஆக அதிகரித்துள்ள நிலையில், ஊரடங்கு குறித்து இம்ரான் கான் முடிவெடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
பாகிஸ்தானில் திங்களன்று அனைத்து மாகாணங்களின் முதலமைச்சர்கள் கலந்து கொண்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம் குறித்து பாகிஸ்தானின் மத்திய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அசாத் உமர் கூறும்போது, “சமூக விலகல் மற்றும் ஊரடங்கு மட்டுமே கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும். இக்கூட்டத்தில் ஊரடங்கு விதிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு விதிப்பது குறித்து நாளை அறிவிக்கப்படும். மேலும், வணிக நிறுவனங்கள் திறப்பது குறித்து நாளை நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் சுமார் 100க்கும் அதிகமான மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானில் கரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. இந்த நிலையில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,493 ஆக அதிகரித்துள்ளது. 96 பேர் பலியாகியுள்ளனர். பாகிஸ்தானில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ளன.
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவல் அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT