Published : 14 Apr 2020 08:04 AM
Last Updated : 14 Apr 2020 08:04 AM
பிரிட்டனில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆயிரத்துக்கும் மேல் உயர்ந்துள்ளது
கரோனா வைரஸ் சீனாவில் உருவாகினாலும், இப்போது ஐரோப்பிய நாடுகளில்தான் மையம் கொண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் உயிரிழப்பையும், பாதிப்பையும் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் அதிகப்படுத்தி வருகிறது.
பிரிட்டனில் நேற்று கரோனா வைரஸுக்கு 717 பேர் உயிரிழந்ததையடுத்து, அங்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 329 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 4 ஆயிரத்து 300 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 88 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை பிரிட்டனில் 3.67 லட்சம் பேருக்கு பரிசோதனைகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன, இதில் 14,506 பரிசோதனைகள் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் நடந்தது என்று பிரிட்டன் தேசிய சுகாதாரப்பிரிவு தெரிவிக்கிறது.
பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டோமினிக் ராப் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், “ பிரி்ட்டனில் இந்த வாரக்கடைசியில் லாக்டவுனை நீக்க திட்டமிட்டிருப்பதாக வந்த செய்திகள் தவறானவை. அவ்வாறு எந்த தி்ட்டமும் அரசிடம் இல்லை, ஊரடங்கை நீக்குவோம் என மக்கள் எதிர்பார்க்க வேண்டாம். கரோனா வைரஸின் உச்சத்துக்கு அடுத்த நிலையில் இருக்கிறோம். அதேசமயம் உயிரிழப்பு, பாதிப்பு குறைவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன. இந்த போராட்டத்தில் நாம் வெல்லும் காலம் தொடங்கிவிட்டது.
தற்போது கடைபிடிக்கும் நடவடிக்கைகளில் என்த மாற்றமும் செய்யப்படாது. நமக்கு நம்பிக்கை ஏற்படும் வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்” எனத் தெரிவித்தார்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக லண்டன் புனித தாமஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்த நிலையில்,நேற்று முன்தினம் வீடுதிரும்பினார். தற்போது வீட்டில் ஓய்வில் இருந்து வரும் போரிஸ் ஜான்ஸன் எப்போது பணிக்கு திரும்புவார் என பிரி்ட்டன் அரசு இன்னும் தெரிவிக்கவில்லை
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT