Published : 13 Apr 2020 05:42 PM
Last Updated : 13 Apr 2020 05:42 PM
அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் சூழலில் போரின் காரணமாக பெரும் துயர நிலையை அனுபவித்துக் கொண்டிருக்கும் சிரியாவில் கரோனா வைரஸ் தொற்று கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் 200க்கும் அதிமான நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 18 லட்சத்து 53 ஆயிரத்து 505 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1 லட்சத்துக்கு 14 ஆயிரத்து 257 பேர் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் உள்நாட்டுப் போரினால் பெரும் துயர நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சிரியாவில் கரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில், “சிரியாவில் கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் எல்லைகளை மூட சிரிய அதிபர் ஆசாத் உத்தரவிட்டுள்ளார். நாள் ஒன்றுக்கு 100 பேர் வீதம் அங்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 19 பேருக்கு கரோனா வைரஸ் அங்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2 பேர் பலியாகியுள்ளனர். முகாம்களில் உள்ள அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் கரோனா வைரஸ் அறிகுறிகளுடன் மக்கள் இறக்கிறார்கள் என்றும், இந்தத் தகவலை வெளியிட சிரிய அரசு மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் அங்குள்ள தன்னார்வ அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், சிரியாவில் கரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கரோனா வைரஸின் தாக்கம் சிரியாவில் அதிகரித்தால் போர்ச்சூழல் நிலவும் அந்நாட்டில் பேரழிவு உண்டாகும் என்று பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT