Published : 13 Apr 2020 03:04 PM
Last Updated : 13 Apr 2020 03:04 PM

கரோனா படுகுழி: கறுப்பினத்தவர்களையும் ஹிஸ்பானிக்குகளையும் காப்பது எப்படி?

அமெரிக்கா முழுவதும் கறுப்பினத்தவர்கள், ஹிஸ்பானிக் மக்கள் (ஸ்பெயின் மொழி பேசும் நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து வந்தவர்கள்), வறுமையிலும், மோசமான சுகாதார நிலையிலும், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா போன்ற நோய் பாதிப்புகளுடனும் இருக்கிறார்கள்.

இன்றைக்குக் கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழக்கும் வெள்ளையின அமெரிக்கர்களின் இறப்பு விகிதத்தை விட கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானிக் மக்களின் இறப்பு விகிதம் அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

மக்கள்தொகையும் மரணங்களும்
நியூயார்க் நகரில், ஹிஸ்பானிக் மக்களின் இறப்பு விகிதம் மிக அதிகமாக இருக்கிறது. அந்நகரின் மக்கள்தொகையில் ஹிஸ்பானிக் மக்கள் 29 சதவீதம் எனும் நிலையில், உயிரிழந்திருப்பவர்களில் 34 சதவீதம் பேர் ஹிஸ்பானிக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க்கில் 22 சதவீதம் கறுப்பினத்தவர்கள் வாழும் நிலையில், கரோனா தொற்று காரணமாக உயிரிழப்பவர்களில் 28 சதவீதம் கறுப்பினத்தவர்கள்தான்.

அதேசமயம், பிற நகரங்களையும் மாநிலங்களையும் ஒப்பிட, நியூயார்க்கில் இனரீதியான ஏற்றத்தாழ்வுகள் குறைவு என்றே சொல்லலாம். சிகாகோவில் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் கறுப்பினத்தவர்கள். இத்தனைக்கும் அந்நகரின் மக்கள்தொகையில் கறுப்பினத்தவர்கள் மூன்றில் ஒரு பங்குதான். மிச்சிகன் மக்கள்தொகையில், கறுப்பினத்தவர்கள் 14 சதவீதம் என்றாலும், ‘கோவிட்-19’ பாதிப்பால் மரணமடைந்தவர்களில் 40 சதவீதம் பேர் அவர்கள்தான்.

பெருந்தொற்று தொடரும் நிலையில், நாடு முழுவதும் இனம், பாலினம், வயது ஆகியவற்றின் அடிப்படையில் கரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்புகளை சுகாதாரத் துறையினர் வெளியிடுவது அவசியம். உதாரணத்துக்கு, பாஸ்டனில் லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் மத்தியில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது குறித்து மருத்துவர்களும், சமூகத் தலைவர்களும் குரல் எழுப்பிவரும் நிலையில், அதிகாரிகளிடம் அதுகுறித்த அக்கறை வெளிப்படவில்லை.

அடிமட்டத் தொழிலாளர்களின் நிலை

இனரீதியான பாகுபாடுகள் எதிர்பார்க்கத்தக்கவைதான். எனினும் அவை ஏற்படுத்தும் துயரங்கள் அளவற்றவை. மாநில அரசுகளும் நகர நிர்வாகங்களும் இப்போதாவது, உரிய நடவடிக்கைகளை எடுத்தால், விளிம்புநிலையில் இருக்கும் மக்களைக் காப்பாற்றிவிடலாம் என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையால், இந்தப் பெருந்தொற்றை எதிர்கொள்வதில் ஏற்கெனவே அமெரிக்கா தடுமாறிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவசரப் பணிகள், சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், அத்தியாவசியப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைத்துப் பணியாளர்களுக்கும் அவை தேவைப்படுகின்றன என்பது தெளிவு. காவலாளிகள், பொருட்களை விநியோகிப்பவர்கள், மளிகைக் கடை ஊழியர்கள், பண்ணைத் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் போன்றோருக்கும் இவை அவசியம்.

ஆரம்பத்திலிருந்தே தொழிலாளர்களைக் காக்கத் தவறிவிட்டதாக நியூயார்க் பெருநகரப் போக்குவரத்துத் துறை மீது குற்றம் சாட்டப்படுகிறது. நியூயார்க்கில் தொழிலாளர்கள் மத்தியில் கரோனா தொற்று விகிதமும், இறப்பு விகிதமும் அதிகம். பெரும்பாலான நகரங்களைப் போலவே நியூயார்க்கிலும் நகராட்சிப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களில் கறுப்பினத்தவர்களும், ஹிஸ்பானிக் மக்களும்தான் அதிகம்.

சிகிச்சை கிடைக்காமல் வீடு திரும்பும் அவலம்
ஆரம்ப சுகாதார மருத்துவப் பணியாளர்களை அணுகும் வாய்ப்பு, இம்மக்களுக்குக் குறைவு என்பதால், இவர்களுக்கு மருத்துவச் சேவையை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இப்போது பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. நியூயார்க்கில் வசிக்கும் இனச் சிறுபான்மையினர் பலர், தங்கள் குடும்பத்தினர், மருத்துவப் பணியாளர்கள் முன்னிலையில் வீடுகளிலேயே மரணமடைகிறார்கள். அல்லது, நிரம்பி வழியும் பொது மருத்துவமனைகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து, வேறு வழியில்லாமல் வீடு திரும்பிவிடுகிறார்கள்.

என்னென்ன செய்ய வேண்டும்?
மருத்துவ வசதிகளைப் பெறுவதில் நிலவும் இந்தப் பாரபட்சங்கள், அமெரிக்காவின் சுகாதாரக் கொள்கையில் அடிப்படை மாற்றங்கள் தேவை என்பதை உணர்த்துகின்றன. அதேசமயம், பின்தங்கிய நிலையில் இருக்கும் மக்களுக்கு மருத்துவ வசதிகள் கிடைப்பதில் இருக்கும் தடைகளை உடனடியாக நீக்குவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மாநிலங்களும் நகரங்களும் எடுக்க வேண்டும்.

ஒருவழியாக, குயின்ஸ், ப்ரூக்ளின், பிராங்க்ஸ் போன்ற பகுதிகளில் வசிக்கும் இனச் சிறுபான்மையினருக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யும் மையங்களைச் சமீபத்தில் ஏற்படுத்தியிருக்கிறது நியூயார்க். எனினும், இன்னும் நிறைய விஷயங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது.

பெரும்பாலான கறுப்பின, ஹிஸ்பானிக் மக்கள் மத்தியில் அரசு மீதான நம்பிக்கை குறைவுதான். இவர்களுக்கு வழங்கப்படும் தகவல்கள் குழப்பமூட்டும் வகையில் இருப்பதுடன் தாமதமாகவே இவர்களை வந்தடைகின்றன. இவர்களுக்கு உதவ, தேவையான எல்லா நடவடிக்கைகளையும் மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் எடுக்க வேண்டும். மருத்துவ உதவிக்காகக் காத்திருப்பவர்களை அடையாளம் கண்டு உதவ, நம்பிக்கைக்குரிய தொண்டு நிறுவனங்கள், தேவாலயங்கள், தொழிலாளர் சங்கங்கள் போன்றவற்றைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும், தனியார் மற்றும் அரசுத் துறை மருத்துவமனைகளுக்கு இடையிலான சுவரைத் தகர்க்க, சாத்தியமான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும். நியூயார்க்கில் தனியார் மருத்துவமனைகளும், சிட்டிஎம்டி (CityMD) போன்ற மருத்துவக் குழுக்களும் தங்களிடம் இருக்கும் மருத்துவ வசதிகளை, தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டும் கிடைக்கச் செய்ய வேண்டும். கட்டணம் செலுத்தும் வசதி உள்ளவர்களுக்கே இந்த வசதிகள் சென்று சேர்வதைத் தடுப்பதை நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ குவோமோவும், நியூயார்க் நகர மேயர் பில் டே ப்ளாசியோவும் உறுதிசெய்ய வேண்டும்.

வீடுகளுக்குக் கொண்டுசெல்லப்படும் விபரீதம்
தொற்றுக்குள்ளானாலும் வீட்டுக்குள்ளேயே தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள முடியாத நிலையில் இருக்கும் தொழிலாளர்களை மாற்று இடங்களில் தங்கவைப்பது, உயிர்களைக் காக்கும் இன்னொரு வழிமுறையாக இருக்கும்.

குயின்ஸில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட் பகுதியின் நெருக்கமான குடியிருப்புகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் பலர் வசிக்கிறார்கள். அங்கு கரோனா வைரஸ் படு வேகமாகப் பரவிவருகிறது. வீட்டு வாடகை அதிகமாக உள்ள நியூயார்க் போன்ற நகரங்களில் வசிக்கும் குடும்பங்கள், சிறிய குடியிருப்புகளிலேயே அதிக அளவில் வசிக்கிறார்கள். இதுபோன்ற குடியிருப்புகளில் வசிக்கும் தொழிலாளர்கள் பணியிடங்களில் தொற்றுக்குள்ளானால், வீட்டில் இருக்கும் பெற்றோர்களுக்கும் தாத்தா – பாட்டிகளுக்கும் அந்த வைரஸைக் கையளித்துவிடுகிறார்கள்.

நியூயார்க் நிர்வாகம் ஏற்கெனவே, ஹோட்டல் அறைகளையும் கல்லூரி விடுதிகளையும் காலி செய்து, அவற்றில் நோயாளிகளையும், குடியிருப்புவாசிகளையும் தங்கவைத்திருக்கிறது. வறுமை நிலையில் இருக்கும் மேலும் பல நோயாளிகளை, அவர்களது குடும்பங்களிலிருந்து தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் வகையில் இதை இன்னும் விரிவுபடுத்தலாம். இதன் மூலம் நோய்ப் பரவலையும் மட்டுப்படுத்தலாம்.

விளிம்புநிலை சமூகத்தினரிடம் இந்த வைரஸ் பரவல், பொருளாதார ரீதியாகப் பேரழிவை ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய, மாநில மற்றும் உள்ளூர் அரசுகள் உடனடி நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் எனும் நிர்பந்தத்தை அது உருவாக்கியிருக்கிறது.

கையறு நிலையில் உதவிக்கரங்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் குயின்ஸ் போன்ற இடங்களில், இறந்தவர்களை அடக்கம் செய்யக் கூட பணம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு உதவ நிதி திரட்ட முடியாமல் சமூக அமைப்புகள் திணறுகின்றன. “நியூயார்க்கில் நோய்த் தொற்றுக்குள்ளானவர்கள், வேலையிழந்தவர்கள் அல்லது இரண்டுக்கும் ஆளான எண்ணற்ற தொழிலாளர்கள் உணவு கோரி அழைக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு எவ்விதத்திலும் உதவ முடியாத நிலையில் இருக்கிறோம்” என்கிறார் ‘நியூ இமிக்ரன்ட் கம்யூனிட்டி எம்பவர்மென்ட்’ எனும் தொழிலாளர் அமைப்பின் செயல் இயக்குநர் மேனுவல் கேஸ்ட்ரோ.

தங்களிடம் 100 பெட்டிகளில் இருக்கும் மளிகைப் பொருட்களைக் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து குறிப்பிட்ட சில குடும்பங்களுக்கு வழங்குவது என்று திட்டமிட்டதாகக் குறிப்பிட்ட கேஸ்ட்ரோவும், கரோனா தொற்று அறிகுறிகளிடமிருந்து மெல்ல மீண்டுவருபவர்தான். “நூற்றுக்கணக்கான குடும்பங்கள் உதவிக்காகக் காத்திருக்கும்போது அதை எப்படிச் செய்ய முடியும்? உணவு கோருகிறார்கள். வேலை கோருகிறார்கள். ஆனால், அவர்களுக்குப் போதுமான உதவியை அளிக்கும் நிலையில் நாங்கள் இல்லை” என்கிறார் அவர்.

அமெரிக்காவின் அனைத்துத் தரப்புகளையும் சேர்ந்த மில்லியன் கணக்கானோரின் வீடுகளுக்குத் துயரத்தைப் பரிசளித்திருக்கிறது கரோனா வைரஸ். எனினும், கடுமையான பாதிப்பைச் சந்தித்திருக்கும் நியூயார்க், நியூ ஆர்லியன்ஸ், டெட்ராய்ட் போன்ற நகரங்களில் கறுப்பினத்தவர்கள் மற்றும் ஹிஸ்பானிக் குடும்பங்களைப் பொறுத்தவரை பல தலைமுறைகளுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கெனவே, பொருளாதார ரீதியிலான சிரமங்களின் விளிம்பில் வசித்துவரும் இம்மக்களை அது படுகுழியில் தள்ளிவிட்டது.

‘தி நியூயார்க் டைம்ஸ்’ நாளிதழில் வெளியான தலையங்கம் | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x