Published : 13 Apr 2020 01:05 PM
Last Updated : 13 Apr 2020 01:05 PM
கரோனா வைரஸ் தொற்று நோயால் உலகமே கலங்குகிறது. இந்த நேரத்தில் உலக நாடுகள், மக்கள் அனைவரும் வேற்றுமைகளை விலக்கி, சுயநலத்தை மறந்து ஒருவொருக்கொருவர் உதவ வேண்டும். ஒற்றுமையாக இருந்து இந்த வைரஸை எதிர்கொள்ள வேண்டும் என்று போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் ஈஸ்டர் தின உரையில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.
ஐரோப்பிய நாடுகளில் முதன்முதலில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானது இத்தாலிதான். கரோனா வைரஸின் கோரத்தைத் தாங்க முடியாமல் முதன்முதலில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததும் இத்தாலி அரசுதான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்களிடையே சமூக விலகல் எனும் கரோனாவைக் கொல்லும் ஆயுதத்கைக் கையில் ஏந்தாததால் பெரும் உயிரிழப்பைச் சந்தித்தது.
உலகிலேயே கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த தேசம் எனும் பரிதாபத்துக்குரிய பெயர் கடந்த இரு நாட்களுக்கு முன்புவரை இத்தாலியிடம் இருந்தது. ஆனால், அமெரிக்கா சந்தித்துவரும் உயிரிழப்பு இத்தாலியையும் மிஞ்சியது.
இத்தாலியில் இதுவரை கரோனா வைரஸுக்கு 19 ஆயிரத்து 899 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 431 பேர் உயிரிழந்தனர். 4,333 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸால் இத்தாலி பாதிக்கப்பட்டதிலிருந்து கடந்த மார்ச் 19-ம் தேதிக்குப் பின் அந்த நாடு சந்திக்கும் மிகக்குறைவான உயிரிழப்பு இதுவாகும்.
கரோனா வைரஸின் தாக்கத்தாலும், பரவும் அச்சத்தாலும் வாடிகன் சிட்டியில் உள்ள புனித பீட்டர் பேஸிலிகாவில் மக்கள் யாரையும் கூடுவதற்கு போலீஸார் அனுமதிக்கவில்லை. இத்தாலி முழுவதும் லாக் டவுன் இருந்ததால் மக்கள் இல்லாமல் வெறுமையாகக் காட்சியளித்தது.
மேலும், போப் ஆண்டவர் வழக்கமாக உரையாற்றும் பால்கனிப்பகுதியில் ஈஸ்டர் தொடர்பாக எந்தவிதமான பேனரும் கட்டப்படவில்லை. யாரும் இல்லாத வெறுமையான இடத்தில் மக்களுக்காக போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் ஈஸ்டர் உரையாற்றினார்.
அதில் அவர் கூறியதாவது:
''பலருக்கும் இந்த ஈஸ்டர் பண்டிகை தனிமையை அளித்திருக்கிறது. இந்த கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் மக்களுக்கு சோகத்தையும், கடினமான வாழ்க்கைச் சூழலையும் அளித்துள்ளது. அது உடல்ரீதியான சிரமங்களையும், பொருளாதாப்ர பிரச்சினைகளையும் அளித்திருக்கிறது
இந்த நேரத்தில் நான் உலகிற்கு சொல்ல விரும்பும் செய்தி, அனைவரும் வேற்றுமை, சுயநலம், பிரிவினை அனைத்தையும் மறந்து நம்பிக்கையுடன் ஒன்றாக சேர வேண்டும். இந்த நேரத்தில் இதுபோன்ற வார்த்தைகளைக் கேட்க வேண்டாம்.
இப்போது நமக்கு நம்பிக்கையின் தொற்று ஒவ்வொருவரின் மனதிலிருந்தும் மற்றொருவர் மனதுக்குச் செல்ல வேண்டும். மக்களுக்காக அத்தியாவசியப் பணிகளில் இருக்கும், அர்ப்பணிப்பு கொண்டவர்கள், போலீஸார், ராணுவத்தினர், மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவரும் மக்களின் சிரமங்களையும், வேதனைகளையும் குறைத்து வருகிறார்கள். அவர்களுக்கு வாழ்த்துகள்.
தனிமைப்படுத்துதல் மூலம் ஏராளமானோர் வீடுகளில் தனிமையில் இருக்கிறார்கள். இது சிந்திப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தையும், வாழ்க்கையின் வெறித்தனமான வேகத்திலிருந்து சற்று இடைநிறுத்தி அன்பானவர்களுடன் வாழ்க்கையை அனுபவிப்பதற்கான வாய்ப்பு.
உலகம் முழுவதும் உடனடியாக போர்கள் முடிவுக்கு வர வேண்டும். சிரியா, ஏமன், ஈராக், லெபனான் ஆகிய நாடுகளில் நிலவும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். கரோனாவால் பாதிக்கப்பட்ட பல்வேறு நாடுகள் மீது விதிக்கப்பட்டுள்ள தடைகள், பொருளாதாரத் தடைகள் தளர்த்தப்பட வேண்டும். ஏழை நாடுகளின் கடன்கள் குறைக்கவோ அல்லது தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடந்த 2-ம் உலகப்போரில் நாம் கடந்து வந்திருக்கிறோம். அதுபோன்று நாம் ஒற்றுமையாக இருந்து இந்தப் பெருந்தொற்றைக் கடக்க வேண்டும். லிபியாவில் ஏராளமான மக்கள் துன்பப்படுவதையும், கிரீஸ், துருக்கி இடையிலான எல்லையில் மக்கள் வேதனைப்படுவதையும் மக்கள் மறந்துவிடக்கூடாது''.
இவ்வாறு போப் பிரான்ஸிஸ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT