Last Updated : 13 Apr, 2020 08:58 AM

 

Published : 13 Apr 2020 08:58 AM
Last Updated : 13 Apr 2020 08:58 AM

கரோனாவில் சிக்கித் திணறும் அமெரிக்கா; 22 ஆயிரத்தைக் கடந்த உயிரிழப்பு: மோசமான நிலைக்குச் செல்லும் பொருளாதாரம்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் : கோப்புப்படம்

நியூயார்க்

அமெரிக்கா தனது அலட்சியத்தால் கரோனாவின் கொடூரக் கரங்களுக்குள் சிக்கித் தவிக்கிறது. தொடர்ந்து 5-வது நாளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை அமெரிக்கா சந்தித்து வருவது மனித சமூகத்தைப் பெரும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.

அமெரிக்காவில் அதிகரித்துவரும் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு நேற்று 1,528 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை அமெரிக்காவில் 22 ஆயிரத்து 105 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை எந்த நாட்டிலும் இல்லாத வகையில் 5 லட்சத்து 60 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது.

அதாவது இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய 4 நாடுகளின் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை மொத்தமாக அமெரிக்கா வைத்துள்ளது. அமெரிக்காவில் கரோனா வைரஸின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால், அங்கு குணமடைந்தாோர் எண்ணிக்கை பெரிதாக உயரவில்லை. 32 ஆயிரத்து 634 பேர் மட்டுமே இதுவரை குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பது நியூயார்க் மாநிலம்தான். அங்கு இதுவரை 1.89 லட்சம் பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது அந்நாட்டின் பாதிக்கப்பட்டோரில் மூன்றில் ஒருபங்கு நியூயார்க் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.

நியூஜெர்ஸி மாகாணத்தில் 61,850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 2,350 பேர் உயிரிழந்துள்ளனர். மிச்சிகன், பென்ஸில்வேனியா, மசாசூசெட்ஸ், இல்லினாய்ஸ், லூசியானா ஆகிய மாநிலங்களிலும் சராசரியாக 20 ஆயிரம் பேர் கரோனவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸின் பாதிப்பால் அமெரிக்காவின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டுள்ளது. பல்வேறு தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கரோனா வைரஸின் பாதிப்புக்கு அஞ்சி மூடப்பட்டுள்ளன. பல லட்சக்கணக்கான மக்கள் வேலையிழந்து அரசின் உதவியை எதிர்பார்த்துள்ளனர். மேலும், அரசின் பெரும்பகுதி நிதி மக்களின் சுகாதாரத்துக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளதால், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி சிரமத்துக்குள்ளாகியிருக்கிறது.

இதுகுறித்து மினியாபோலீஸ் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் நீல் காஷ்காரி தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், ''கரோனா வைரஸின் பிடியிலிருந்து மீண்டு அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப்பாதைக்குத் திரும்ப நீண்டகாலம் தேவைப்படும். அமெரிக்கா நீண்ட கடினமான பாதையை எதிர்நோக்கியிருக்கிறது.

அதேசமயம், கரோனா வைரஸிலிருந்து மீள்வதற்கு அடுத்த 2 மாதங்களில் மருந்துகளோ அல்லது சிகிச்சையோ வந்தால் மக்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டு பணிக்குச் செல்ல முன்வருவார்கள். சிகிச்சையும் ஆர்வமாக எடுக்க வருவார்கள்.

ஆதலால், கரோனா வைரஸைத் தடுக்க தடுப்பூசிகள் ஏதும் கண்டிபிடிக்கப்படாமல் இருந்தால் அடுத்துவரும் காலம் அமெரிக்காவுக்கு நினைக்க முடியாத அளவுக்கு மோசமாக இருக்கும். பொருளாதாரத்தில் வி வடிவ சரிவு, மீட்சி என்று சொல்வார்கள். அதாவது மிகவேகமான பொருளாதாரச் சரிவு அடுத்து வரும் காலங்களில் இருக்கும். ஆனால், அடுத்த 18 மாதங்களுக்கான பொருளாதார மீட்புத் திட்டத்தை அமெரிக்க அரசு செயல்படுத்தினால் சரிவு இருந்த அதேவேகத்தில் பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x