Published : 13 Apr 2020 07:59 AM
Last Updated : 13 Apr 2020 07:59 AM
கரோனாவின் கோரப்பிடிக்குள் சிக்கி மோசமான உயிரிழப்புகளையும், பாதிப்புகளையும் அனுபவித்த இத்தாலியில் 3 வாரங்களுக்குப் பின் நேற்று உயிரிழப்பு குறைந்தது. கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் முதன்முதலில் கரோனா வைரஸின் பாதிப்புக்கு உள்ளானது இத்தாலிதான். கரோனா வைரஸின் கோரத்தைத் தாங்க முடியாமல் முதன்முதலில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்ததும் இத்தாலி அரசுதான். ஆனால் நாட்கள் செல்லச் செல்ல மக்களிடையே சமூக விலகல் எனும் கரோனாவைக் கொல்லும் ஆயுதத்கைக் கையில் ஏந்தாததால் பெரும் உயிரிழப்பைச் சந்தித்தது.
உலகிலேயே கரோனா வைரஸுக்கு அதிகமான உயிரிழப்புகளைச் சந்தித்த தேசம் எனும் பரிதாபத்துக்குரிய பெயரை கடந்த இரு நாட்களுக்கு முன்புவரை இத்தாலியிடம் இருந்தது. ஆனால், அமெரிக்கா சந்தித்துவரும் உயிரிழப்பு இத்தாலியையும் மிஞ்சியது.
இத்தாலியில் இதுவரை கரோனா வைரஸுக்கு 19 ஆயிரத்து 899 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 56 ஆயிரத்து 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 34 ஆயிரத்து 211 பேர் குணமடைந்துள்ளனர். இதில் நேற்று 431 பேர் உயிரிழந்தனர். 4,333 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸால் இத்தாலி பாதிக்கப்பட்டதிலிருந்து கடந்த மார்ச் 19-ம் தேதிக்குப் பின் அந்த நாடு சந்திக்கும் மிகக்குறைவான உயிரிழப்பு இதுவாகும்
இதுகுறித்து இத்தாலி அரசின் மக்கள் பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் ஏஞ்சலோ போரேலி கூறுகையில், “மார்ச் 19-ம் தேதிக்குப் பின் முதல் முறையாக இத்தாலியில் நேற்றுதான் மிகக்குறைவான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கரோனா பாஸிட்டிவ் நோயாளிகள் புதிதாக வந்தாலும், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இது மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கும் மிகப்பெரிய நிம்மதியைத் தருகிறது. குணமடைபவர்கள் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிப்பது நம்பிக்கையைத் தருகிறது” எனத் தெரிவித்தார்.
இருப்பினும், இத்தாலியில் கரோனாவில் நிலைமை சீரடையும் வரை அந்நாட்டில் லாக் டவுனை மே மாதம் வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இத்தாலி நாட்டில் 38 சதவீதம் உயிரிழப்புகளைச் சந்தித்த வர்த்தக நகரான மிலனில் போலீஸார் தீவிர ரோந்தில் ஈடுபட்டு மக்களைக் கண்காணித்து வருகின்றனர். ஈஸ்டர் பண்டிகை விடுமுறைக்கு யாரும் வெளியே செல்லாத வகையில் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT