Published : 12 Apr 2020 09:55 PM
Last Updated : 12 Apr 2020 09:55 PM
கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் குணமடைந்ததை தொடர்ந்து வீடு திரும்பினார்.
போரிஸ் ஜான்சனுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கடந்த 10 நாட்களுக்கு முன்பே உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட அவர் சிகிச்சை எடுத்து வந்தார்.
ஆனால் கடந்த வாரம் திடீரென லண்டனில் உள்ள புகழ்பெற்ற புனித தாமஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
ஜான்சனுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படுவதால், அவரை ஐசியுவுக்கு மாற்றியதாகவும், சுயநினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
கனடா பிரதமர் ஜஸ்டின் உட்பட பல உலக நாடுகளின் தலைவர்கள் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து போரிஸ் ஜான்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் தொடர் சிகிச்சையால் அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இந்தநிலையில் சுவாசக் கருவி இல்லாமல் சுவாசிக்கும் அளவுக்கு அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதனால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். பின்னர் அவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். எனினும் அடுத்த சில நாட்களுக்கும் அவர் வீட்டில் இருந்தே ஓய்வெடுப்பார் எனவும், எந்த பணியிலும் ஈடுபட மாட்டார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT