Published : 12 Apr 2020 04:34 PM
Last Updated : 12 Apr 2020 04:34 PM
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது தனக்காக வாதாடிய பெண் வழக்கறிஞர் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்ததில் 2 குழந்தைகளுக்கு தந்தையானதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் அசாஞ்சே. 47 வயதுமிக்க அசாஞ்சே 2006-ல் தொடங்கப்பட்ட விக்கிலீக்ஸ் புலனாய்வு இணையதளத்தில் இணைந்தார்
அதன்மூலம் எண்ணற்ற புலனாய்வுச் செய்திகளை வழங்கினார். அமெரிக்க ராணுவ ரகசியங்களை வெளியிட்டதால், பென்டகனின் பழிவாங்கலுக்கு ஆளானார். அவர்களிடமிருந்து தப்பிக்க அவர் பட்டபாடு ஹாலிவுட் திரைக்கதைகளை மிஞ்சியது. அவர் மீது பாலியல் புகார் உட்பட பல புகார்கள் தெரிவிக்கப்பட்டது
அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் கோரினார். பின்னர் அவரது கோரிக்கை ஏற்கப்பட்டு அரசியல் புகலிடம் பெற்று பாதுகாப்பு கிடைத்தது.
ஈக்வேடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதை தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவையே அதிரவைத்த விக்கிலீக்ஸ் புகழ் ஜூலியன் அசாஞ்சே, கடந்த ஒரு வருடமாக இங்கிலாந்தின் பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டது தொடர்பான வழக்கை எதிர்கொண்டு வருகிறார்.
இந்தநிலையில் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்திருந்தபோது பெண் வழக்கறிஞர் ஒருவருடன் சேர்ந்து வாழ்ந்ததில் 2 குழந்தைகளுக்கு தந்தையானதாக தற்போது தகவல் வெளியானது.
இதுகுறித்து தி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. அதில், அசாஞ்சே ஈக்வடார் தூதரகத்தில் தங்கி இருந்தபோது தென் ஆப்ரிக்காவை சேர்ந்த ஸ்டெல்லா மேரீஸ் என்ற பெண் வழக்கறிஞரும் தங்கியிருந்துள்ளார்.
அசாஞ்சேவுக்காக வாதாடிய அந்த வழக்கறிஞர் பின்னர் அவருடன் இணைந்து வாழ்ந்ததாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இரண்டு ஆண் குழந்தைகள் ஆகும். இதில் மூத்த குழந்தைக்கு 2 வயதும், 2வது குழந்தைக்கு ஒரு வயதும் ஆகிறது என அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT