Published : 12 Apr 2020 08:30 AM
Last Updated : 12 Apr 2020 08:30 AM
கரோனா வைரஸின் கோர பிடியில் ஐரோப்பிய நாடுகள் சிக்கித் தவிக்கையில் அதில் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது இத்தாலிதான். இத்தாலி நாட்டில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது.
ஏற்கெனவே அமெரிக்காவில் 20ஆயிரம் பேர் கரோனாவில் உயிரிழந்தநிலையில் இத்தாலியிலும் அடுத்த சில நாட்களில் அந்த எண்ணிக்கையை அடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தாலியில் இதுவரை கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 418 பேராக அதிகரித்துள்ளது. அங்கு நேற்று 619 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1.52 லட்சமாக அதிகரித்துள்ளது, புதிதாக 4,500 பேருக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் வீட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஈஸ்டர் பண்டிகை நாளான இன்று உற்சாகமாகக் காணப்படும் ரோம் நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகைகக்கு மக்கள் யாரும் எங்கும் செல்லவும் போலீஸார் தடைவிதித்துள்ளதால் உற்சாகமின்றி இருக்கிறது
அதேசமயம் நம்பிக்கையளிக்கும் விதத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 32,500 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இத்தாலியின் மக்கள் பாதுகாப்புத்துறையின் தலைவர் ஏஞ்சலோ போரேலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இத்தாலியில் உயிரிழப்பு நாள்தோறும் சராசரியாக 619 என்ற வீதத்தில் இருந்து வருகிறது, முன்பு இருந்த எண்ணி்க்கையைக் காட்டிலும் குறைந்துள்ளது என்றாலும், உயிரிழப்பைக் குறைக்க முடியவில்லை. கரோனாவால் 1,966 பேர் நேற்று பாதிக்கப்பட்டு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதன் மூலம் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 2,69 ஆக அதிகரித்துள்ளது.
இதில் நம்பிக்கை ஒளி என்னவென்றால், நாள்தோறும் கரோனா வைரஸிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 2,079 பேர் குணமடைந்துள்ளார்கள், இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 32,534 ஆக அதிகரித்துள்ளது.
இதில் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 98 குறைந்து 28,144 பேராக இருக்கிறார்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் 116 குறைந்து 3,381 ஆக இருக்கிறது, 68,744 பேர் வீடுகளில் தனிமையில் இருக்கிறார்கள்.
இத்தாலியில் பலி எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் குறைந்து வருவது குறித்தும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்தும் தவறாக மதிப்பிட்டு கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் மிகப்பெரிய அழிவைச் சந்திக்க நேரிடும். இப்போதுள்ள அவசரநிலை என்பது கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பி்ன்புதான் நீக்கப்படும் .
ஈஸ்டர் பண்டிகைக்கு மக்கள் வீட்டை விட்டு வெளியேறவும், தேவாலயம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக குடும்பத்துடன் வெளியே செல்லுதல், குழுவாகச் சாப்பிடுதல் தடை செய்யப்பட்டுள்ளது. போலீஸார் நாடுமுழுவதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டு மக்களை கண்காணித்து வருகின்றனர்
இவ்வாறு போரேலி தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT