Published : 12 Apr 2020 07:45 AM
Last Updated : 12 Apr 2020 07:45 AM
கரோனா வைரஸின் பிறப்பிடம் சீனாவாக இருந்தாலும், இப்போது அதன் பரவின் மைய இடமாக ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் மாறிவிட்டது. இதில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கான உயிரிழப்பு இத்தாலியை மிஞ்சிவி்ட்டது. உலகளவில் கரோனாவுக்கு அதிகமான உயிரிழப்பை அமெரிக்கா சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் கரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 577- ஆக அதிகரித்துள்ளது என ஜான் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு தெரிவிக்கிறது. தொடர்ந்து 4-வது நாளாக உயிரிழப்பு அதிகரித்து வருகிறது, அங்கு நேற்று கூட 1,830 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 8 ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளார்கள்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5.32 லட்சமாக அதிகரித்துள்ளது, அந்நாட்டில் நேற்று 30 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. குணமடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
அமெரிக்காவைக் காட்டிலும் மோசமான உயிரிழப்புகளைச் சந்தித்து வந்த இத்தாலியில் உயிர்பலி குறைந்து வருகிறது. அங்கு இதுவரை 19ஆயிரத்து 468 பேர் உயிரிழந்துள்ளனர், சனிக்கிழமை மட்டும் 619 பேர் உயிரிழந்துள்ளனர்
அமெரிக்காவைத் பொறுத்தவரை நியூயார்க், வாஷிங்டன், நியூஜெர்ஸி மாநிலங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இண்டியானா நகரில் உள்ள மருத்துவமனையில் நேற்று ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்தனர், லோவா நகரில் உள்ள மருத்துவமனையில் 14 பேர் பலியானார்கள். சிக்காக்கோவில் குக் கவுண்டியில் தற்காலிகமாக பிணவறை உருவாக்கப்பட்டு அங்கு 2 ஆயிரம் பேரின் உடல்கள் அடக்கம் செய்ய இடமில்லாமல் வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் கரோனாவுக்கு நேர்ந்த உயிரிழப்பில் பெரும்பகுதி நியூயார்க் நகரின் மெட்ரோபாலி்ட்டன் பகுதியில்தான் ஏற்பட்டுள்ளது. சமூக விலக்கல், லாக்டவுன் மட்டுமே கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டாலும் இன்னும் நியூயார்க்கில் மக்கள் சுதந்திரமாகவே அலைகிறார்கள்.
நியூயார்க் நகரில் மட்டும் நேற்று 783 பேர் உயிரிழந்தனர், இதன் மூலம் இதுவரை அங்கு பலியானவர்களின் எண்ணிக்கை 8,600-க்கும் மேலாக அதிகரித்துள்ளது.
நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரூ குமோ கூறுகையில் “ நாள்தோறும் அதிகரிக்கும் உயிரிழப்புகளைப் பார்க்கும் போது பயமாக இருக்கிறது. ஆனாலும் வேறு என்ன செய்ய முடியும். வீட்டுக்குள் தான் சிறிது காலம் இருக்க ேவண்டும். இப்போதுள்ள சூழலில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தினால் கரோனா வைரஸ் மோசமாக மீண்டெழுந்து வரும்” எனத் தெரிவித்துள்ளார்
இதற்க்கிடையே சிக்காக்கோ மாநிலத்தின் குக்கவுண்டி நகரில் உள்ள சிறையில் 300 கைதிகளுக்கும் கரோனா வைரஸ் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதுவரை அங்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில் வரும் செவ்வாய்கிழமை வி்ஸ்கான்ஸின் நகரில் அதிபர் வேட்பாளருக்கான் பிரைமரி தேர்தல் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று வாக்களிப்பார்கள்.இந்தக் கூட்டத்துக்குப்பின், மீண்டும் அமெரிக்காவில் உயிரிழப்பும், பாதிப்பும் அதிகரிக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT