Published : 12 Aug 2015 12:26 PM
Last Updated : 12 Aug 2015 12:26 PM
தொலைக்காட்சி நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்ற லிபிய நாட்டு பிரதமர் அப்துல்லா அல் தானி தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
லிபிய பிரச்சினைகள் குறித்து அந்நாட்டு மக்கள் பிரதமரிடம் நேரடியாக கேள்விகளை எழுப்பக்கூடிய நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அந்த நேரலை நிகழ்ச்சியில், நாட்டில் நிலவும் மின்பற்றாக்குறை, பாதுகாப்பின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அப்போது ஆவேசமடைந்த லிபியா பிரதமர் அப்துல்லா அல் தானி, "நான் பதவி விலகுவதால் உங்களது பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்றால் உடனடியாக அதைச் செய்கிறேன்" என்றார்.
மேலும், தனது ராஜினாமா கடிதத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாகவும் நிகழ்ச்சியில் தெரிவித்தார். பிரதமரின் பேச்சு அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
லிபியாவில் அதிபர் கடாபி தலைமையிலான அரசு வீழ்ச்சியடைந்ததற்கு பின்னர், இருமுறை ஆட்சி மாறிவிட்டது. தற்போது அப்துல்லா அல் தானி தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அவரது ஆட்சியை சர்வதேச நாடுகள் அங்கீகரித்து உள்ளன.
அரசு படைகளுக்கு எதிராக அடிக்கடி தாக்குதல்கள் நடந்துவரும் நிலையில், பிரதமர் அப்துல்லா தானியை மர்ம நபர்கள் தாக்க முயன்றதாக கடந்த வாரம் தகவல் வெளியானது.
நாடாளுமன்றத்துக்கு சென்று திரும்பும்போது தன்மீது கொலைவெறி தாக்குதல் நடந்ததாக அவரே தெரிவித்திருந்தார்.
ஆனால், இது குறித்த விரிவான தகவல் வெளியாகாத நிலையில் பிரதமர் தானி மீதான தாக்குதல் கூலிப்படையினரால் நடத்தப்பட்டதாக அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் தெரிவித்தனர். நாட்டில் பாதி இடங்கள் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ளது. சமீபத்தில் தலைநகர் திரிபோலி விமான நிலையம், தொலைக்காட்சி நிலையம் ஆகியவற்றையும் தீவிரவாதிகள் கைப்பற்றினர்.
இதைத் தவிர தானி ஆட்சியின் மீது பெரிய அளவிலான ஊழல் புகார்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT