Published : 09 Apr 2020 02:02 PM
Last Updated : 09 Apr 2020 02:02 PM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிர்காக்கும் மருந்தாக கருதப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளைக் தயாரிக்க மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்த பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரோ நன்றி தெரிவித்தார்.
மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தாக வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரைக்குப் பின், இந்த மாத்திரைகளின் ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை செய்தது.
ஆனால் அமெரிக்கா இலங்கை, நேபாளம், வங்கதேசம், பிரேசில் போன்ற நாடுகள் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தன. இதனையடுத்து மனிதநேய அடிப்படையில் தேவைப்படும் நாடுகளுக்கு மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்து, தடைகளை நீக்கியது.
இதையடுத்து பிரேசில் நாட்டு மக்களுக்கு இன்று அந்நாட்டு அதிபர் ஜேர் போல்சோனாரோ உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “நமக்குப் பல நல்ல செய்திகள் வருகின்றன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடியாகப் பேச்சு நடத்தினேன்.
இதன் விளைவாக நமக்கு வரும் சனிக்கிழமை, இந்தியாவில் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் இறக்குமதியாகின்றன. இதன் மூலம் ஹைட்ரக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளைத் தயாரித்து கரோனா வைரஸ் நோயாளிகள், மலேரியா, ஆர்த்திடிஸ் போன்ற நோய்களுக்கு நிவாரணம் பெற முடியும்.
இந்தக் கடினமான நேரத்தில் நமக்கு உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இந்திய மக்களுக்கும் பிரேசில் மக்கள் சார்பில் நன்றிையத் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
கடந்த 4-ம் தேதி பிரதமர் மோடியுடன், பிரேசில் அதிபர் போல்சோனாரோ தொலைபேசியில் பேசி, ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்யக் கோரினார். மேலும், தனிப்பட்ட முறையில் அனுமன் ஜெயந்தி நாளான நேற்று பிரதமர் மோடிக்கு கடிதமும் எழுதினார்.
அதில், “ ராமயாணத்தைக் குறிப்பிட்டு, கடவுள் ராமரின் சகோதரர் லட்சுமணன் போரில் மூர்ச்சையாகி விழுந்த பின் அவரைக் காப்பாற்ற சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்து உயிர்காத்த அனுமன் போன்று எங்களுக்கு உதவியுள்ளீர்கள். மற்ற நாடுகளைப் போன்று கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி உயிரைக் காக்க முடியும் என நம்புகிறோம் “ என பிரதமர் மோடியை அனுமன் செய்த உதவியோடு ஒப்பிட்டு போல்சோனாரோ குறிப்பிட்டிருந்தார்.
லத்தின் அமெரிக்க நாடான பிரேசிலில் கரோனா வைரஸுக்கு இதுவரை 14 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 660 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT