Published : 09 Apr 2020 11:42 AM
Last Updated : 09 Apr 2020 11:42 AM
கரோனா வைரஸ் விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்புதான் அரசியல் செய்து சீனாவுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. நாங்கள் நிதியை நிறுத்தப்போகிறோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸால் அமெரிக்கா மோசமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இதுவரை அங்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்னர். இதனால் அதிபர் ட்ரம்ப்புக்கு தொடர்ந்து மக்கள் மத்தியில் அழுத்தம் ஏற்பட்டுள்ளது. கரோனா வைரஸை எப்படியாவது கட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகிறார்.
ஆனால், சீனா கரோனா வைரஸிலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. இதைப் பார்த்த அதிபர் ட்ரம்ப் தனது கோபத்தை உலக சுகாதார அமைப்பின் மீது திருப்பினார்.
கரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே போதுமான எச்சரிக்கை அறிவிப்புகளை உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கவில்லை. சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு நடப்பதால், இனிமேல் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்தப்போகிறோம் என்று அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியிருந்தார்.
அதிபர் ட்ரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நேற்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் பேசுகையில் ,“நான் உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளைக் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் மக்களைக் காப்பாற்ற வேண்டும். தயவுசெய்து கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள்.
நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லையென்றால், கரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். இது நெருப்புடன் விளையாடும் விைளயட்டு” எனத் தெரிவித்தார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் பதில் அளித்துப் பேசியதற்குப் பின் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
''கரோனா விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்பின் தலைவர்தான் அரசியல் செய்கிறார். அவ்வாறு செய்யக்கூடாது. கடந்த ஆண்டு நாங்கள் 45 கோடி டாலர் உலக சுகாதார அமைப்புக்காக செலவு செய்தோம். அதற்கு முன் லட்சக்கணக்கிலான டாலர்களைச் செலவு செய்திருக்கிறோம். அதைப் பயன்படுத்தி நன்றாகச் செயல்பட்டார்கள். ஆனால் அரசியலைப் பற்றிப் பேசும்போது, சீனாவுடன் உறவு வைத்துக்கொண்டு நீங்கள் அரசியல் பற்றிப் பேசுவதை நம்ப முடியாது.
சீனா 4.20 கோடி டாலர்தான் உலக சுகாதார அமைப்புக்காக செலவிட்டுள்ளது. ஆனால், நாங்கள் 45 கோடி டாலர் செலவிட்டுள்ளோம். ஆனால், உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது. இது சரியல்ல. இது நியாயமானதாக எங்களுக்குத் தெரியவில்லை. நேர்மையாகச் சொல்கிறேன், உலகத்துக்கும் இது நியாயமானது இல்லை.
உலக சுகாதார அமைப்பு தங்களுக்கு இருக்கும் சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தனாலும் அனைவரையும், அனைத்து நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால் அதுபோன்று நடத்தியதாகத் தெரியவில்லை.
நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதில் சில முடிவுகள் எடுக்கப்போகிறோம். அமெரிக்கா மட்டும் அதிகமான நிதி செலவிடும். மற்ற நாடுகள் குறைவாக நிதி செலவிடுவது சரியல்ல”.
இவ்வாறு ட்ரம்ப் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT