Last Updated : 07 Apr, 2020 09:49 AM

2  

Published : 07 Apr 2020 09:49 AM
Last Updated : 07 Apr 2020 09:49 AM

ஏதேச்சதிகார புத்தியை மாற்றுங்கள்;ஆப்பிரிக்க மக்கள் மீது கரோனா தடுப்பூசியை சோதிக்க அனுமதிக்க முடியாது: உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஆவேசம்

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியாயேசஸ் : கோப்புப்படம்

ஜெனிவா

கரோனா வைரஸ் பெருந்தொற்று நோய்க்கு எதிரான தடுப்பூசி மருந்துகளை ஆப்பிரிக்க மண்ணில் அந்நாட்டு மக்களுக்கு பரிசோதித்து பார்ப்பதை ஒரு போதும் அனுமதிக்க முடியாது, இந்த ஏதேச்சதிகார புத்தி மாறவேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்

கரோனா வைரஸின் பாதிப்பால் உலகளவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 46 ஆயிரமாக அதிகரித்துள்ளது, உயிரிழந்தோர் எண்ணிக்கை 74 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மனித குலத்தை மிரட்டி வரும் இந்த கரோனா வைரஸுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், அது இன்னும் பரிசோதனை முயற்சியில் மட்டுமே இருக்கிறது. முழுமையாக தடுப்பூசி மருந்துகள் மனிதர்களுக்கு கிடைக்க இன்னும் ஒரு ஆண்டு வரை ஆகலாம்

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நேற்று ஊடகங்களுப் பேட்டி அளி்த்தார். அப்போது அவர் கூறியதாவது:


கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுரையை தீவிரப்படுத்த வேண்டும். ஏனென்றால் மற்ற கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளான கைகளை கழுவுதல் அல்லது சமூக விலகலை கடைப்பிடித்தல் என்பது கடினமானது.

ஏனென்றால், சில நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருக்கும், அல்லது வாழும் சூழல் மோசமாக இருக்கும் அங்கெல்லாம் இரு விஷயங்களை தீவிரமாகச் செயல்படுத்த முடியாது

மருத்துவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம் மற்றும் மருத்துவப்பணிகளுக்கு பயன்படுத்தத் தேவையில்லாத முகக்கவசங்களை கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பயன்படுத்த சில நாடுகள் மக்களுக்கு பரிந்துரைத்துள்ளன.

அனைத்து மக்களும் முகக்கவசங்களைப் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதால் மருத்துவத்துறையில் சுகாதாரப்பணியில் இருக்கும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு முக்கவசம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மருத்துவ முகக்கவசங்களை மருத்துவப்பணியாளர்கள் தவிர்த்து கரோனா நோய் தொற்று உடையவர்களும் பயன்படுத்தலாம்.

சில இனவெறிப்(பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்கள் உடலில் செலுத்திப் பரிசோதிக்க ஆலோசனை தெரிவிக்கிறார்கள்.

ஆப்பிரிக்க மண்ணும், மக்களும் ஒருபோதும் கரோனா வைரஸுக்கான தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக இருப்பதை அனுமதிக்க முடியாது. ஒரு தடுப்பூசியை பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளை, விதிமுறைகளை கடைபிடிக்க கூறியுள்ளதோ அதை உலகச்சமூகம் கடைபிடிக்க வேண்டும். அது ஆப்பிரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி விதிமுறைகள் அனைவருக்கும் ஒன்றுதான்.

முதலில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற தங்கள் ஏதேச்சதிகார மனப்பாங்கை நிறுத்த வேண்டும். ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசிகளை பரிசோதி்க்கும் ஆலோசனைகள் என்பது இனவெறி பிடித்த வார்த்தைகள், இதை கடுமையாக எதிர்க்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம்.

அதுபோன்ற தடுப்பூசிகளை ஆப்பிரிக்க மண்ணில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் பரிசோதிக்கவும் அனுமதிக்கமாட்டோம். மனிதர்களை மனிதர்களாக நடத்த வேண்டும், அதேபோல நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு டெட்ரோஸ் அதானம் கெப்ரியாயேசஸ் தெரிவித்தார்

தடுப்பூசி தயாரிக்கும் முயற்சியில் 70 நாடுகள் ஈடுபட்டுள்ளன, 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x