Published : 07 Apr 2020 09:22 AM
Last Updated : 07 Apr 2020 09:22 AM
கட்டுப்பாடுகள் விதிக்கப்படாத ஆரம்பக் காலத்தில் சுமார் 4 லட்சம் பேர் சீனாவிலிருந்து அமெரிக்காவுக்குத் திரும்பியுள்ளதாக செய்திகள் வெளியானதையடுத்து நாளுக்குநாள் அமெரிக்காவில் தொற்றும் மரணங்களும் கரோனாவினால் அதிகரித்து வருகின்றன.
திங்களன்று மட்டும் 36,000 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பலி எண்ணிக்கை 10,923 என்று 11,000-த்தை நெருங்கும் அபாயத்தில் உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
கரோனா பேய் பிடித்து ஆட்டும் நாடாக அமெரிக்கா ஆகியுள்ளது, இதனால் ஏற்பட்டுள்ள பொருளாதார சீரழிவிற்கு கோடிக்கணக்கானோர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இத்தாலி 16,523 மரணங்களுடனும் ஸ்பெயின் 13,341 மரணங்களுடனும் அடுத்த நிலையில் பெரிய ஆபத்தைச் சந்தித்து வருகின்றன. நியூயார்க்கில் மட்டும் 4,750 பேர் மரணமடைந்துள்ளனர், நியூயார்க் மாநிலத்தில் சுமார் 1,30,000 கரோனா வைரஸ் கேஸ்கள் உள்ளன.
சனிக்கிழமையன்று நியூயார்க்கில் 630 மரணங்கள் ஏறப்ட ஞாயிறன்று 594 ஆகக் குறைய திங்களன்று 599 ஆக மரண விகிதம் குறைந்தது.
பள்ளிகள், அத்தியாவசியமில்லாத வர்த்தகங்கள் மேலும் 3 வாரங்களுக்கு ஷட் டவுனில் இருக்க கவர்னர் ஆண்ட்ரூ கியுமோ உத்தரவிட்டுள்ளார்.
- 'சமூக விலக்கல் வேலை செய்கிறது’
“சமூக விலகல் முறை நம்பிக்கை அளிக்கிறது, ஆனால் அதுதான் தீர்வா என்பதில் தெளிவில்லை. கேஸ்கள் குறைவதற்குக் காரணம் தொற்று விகிதம் குறைவதே. இருப்பினும் சமூக விலகல் கேஸ்கள் விகிதத்தைக் குறைக்கிறது, இது வேலை செய்கிறது என்றே தெரிகிறது” என்றார் கவர்னர் கியூமோ.
கரோனா வைரஸுக்கு இதுவரை உலகம் முழுதும் 75,000 பேர் பலியாகியுள்ளனர். அமெரிக்காவில் 1 லட்சம் முதல் 2,40,000 பேர் வரை மரணிக்கலாம் என்று பலரும் எச்சரிக்க சிலர் இந்த கணித மாதிரியை சந்தேகிக்கின்றனர்.
ஆளும் குடியரசுக் கட்சியின் கவர்னர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் 9 மாகாணங்களில் அமெரிக்காவில் இன்னும் முழு லாக்-டவுன் உத்தரவுகள் பிறப்பிக்கப்படவில்லை. இது பொதுச் சுகாதார நிபுணர்களை வெறுப்படையச் செய்துள்ளது.
நியூயார்க் போன்ற வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் பாதுகாப்பு கவசங்கள், வெண்டிலேட்டர்கள், மருத்துவ உபகரணங்கள் குறைபாடு ஏற்பட்டுள்ளது. வாஷிங்டன், கலிபோர்னியாவில் அனைத்து வசதிகளும் உள்ளதாகத் தெரிகிறது.
வாஷிங்டனில் நோய்த்தொற்று குறைந்திருப்பதோடு அங்கிருந்து நியூயார்க்கிற்கு 400 காற்றோட்ட இயந்திரங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT