Published : 06 Apr 2020 09:55 AM
Last Updated : 06 Apr 2020 09:55 AM
கரோனாவின் கிடுக்கிப்பிடியில் சிக்கி அமெரிக்கா மூச்சுத்திணறி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் மட்டும் 25 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுவரை அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு நேற்று மட்டும் ஆயிரத்து 165 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3.36 லட்சத்தை தாண்டியுள்ளது
இதில் மிக மோசமாக நியூயார்க் நகரம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 4,159 பேர் உயிரிழந்துள்னர் என்று ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கரோனா வைரஸ் ஆராய்ச்சிப்பிரிவான சென்டர் ஃபார் சிஸ்டம்ஸ் சயின்ஸ் அன்ட் எஞ்சினியரிங் தெரிவி்த்துள்ளது. அடுத்ததாக நியூஜெர்ஸியில் 846 பேரும், மிச்சிகனில் 540 பேரும், கலிபோர்னியாவில் 324 பேரும் உயிரிழந்துள்ளனர்
இந்நிலையில் அமெரிக்காவில் அடுத்த இரு வாரங்கள் மோசமான உயிரிழப்பைச் சந்திக்க வேண்டியது இருக்கும், மக்கள் கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு அமெரிக்க அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தசூழலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
உலகில் எந்த நாடும் செய்யாத அளவுக்கு 16 லட்சம் மக்களுக்கு நாம் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனையை செய்துள்ளோம். மிகப்பெரிய சேதம் கரோனா வைரஸால் வரப்போகிறது என்பதை எச்சரித்துள்ளதால், 95 சதவீத அமெரிக்க மக்கள் வீட்டுக்குள்ளே இருக்கிறார்கள்.
அமெரிக்க மக்களுக்காக லட்சக்கணக்கிலான முகக்கவசங்கள், மருந்துகள், மாத்திரைகள், கையுறைகள் பல்வேறு நாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. ஒரு ராணுவநடவடிக்கை போன்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டில் 50 மாநிலங்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன, இது எப்போதும் இல்லாத அசாதாரணமான சூழல்
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உயிர்காக்கும் மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரிக்குயின் மாத்திரைகள் இதுவரை 2.90 கோடி மாத்திரைகள் கொள்முதல் செய்யப்பட்டு நாடுமுழுவதும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸிகுளோரக்குயின் மாத்திரைகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டேன்.
அடுத்த இரு வாரங்கள் நமக்கு மிகவும் சோதனையான காலகட்டம், மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். சமூக விலகலை தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். உச்சபட்சமான சுத்தத்தை கடைபிடிப்பது அவசியமாகும்.
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT