Last Updated : 05 Apr, 2020 04:43 PM

2  

Published : 05 Apr 2020 04:43 PM
Last Updated : 05 Apr 2020 04:43 PM

கரோனா நோய் தொற்று: ஏன் அமெரிக்காவில் மட்டும் இந்த அளவுக்கு பாதிப்பு?: என்ன காரணம்?  வெளியான புதிய தகவல்கள்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்: கோப்புப்படம்

நியூயார்க்

உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் அமெரி்க்க மக்களுக்கு ஏற்படுத்தியுள்ள பாதிப்பு மிக அதிகமாகும். இந்த அளவுக்கு பாதிப்பு அமெரிக்காவில் ஏற்படக் காரணம் என்ன என்பது குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸ் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்படுத்தியுள்ள பாதிப்பு சற்று அதிகம்தான். அதிலும் அமெரி்க்காவில் புற்றீசலில் வருவதுபோல் நாள்தோறும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும், உயிரிழப்பும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

அமெரிக்காவில் மட்டும் இதுவரை 3 லட்சத்குக்கும் மேற்பட்டோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்கள். அடுத்துவரும் இருவாரங்களில் உயிர்பலியும், பாதிப்பும் பல மடங்கு அதிகரிக்கும் என வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

கரோனா வைரஸ் மூலம் அமெரிக்காவில் 2லட்சம் மக்கள் வரை உயிரிழக்கக்கூடும் என பகீர் தகவலையும் வெள்ளைமாளிகை சமீபத்தில் வெளியிட்டது

இப்போது எழுந்துள்ள கேள்வி என்னவென்றால் அமெரிக்காவில் மட்டும் இந்தஅளவுக்கு பாதிப்பு ஏற்படக் காரணம் என்ன என்பதுதான். அதுகுறித்து அமெரிக்காவில் வெளியாகும் “நியூயார்க் டைம்ஸ்” நாளேடு ஆய்வு செய்து கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் திடுக்கிடும் பல தகவல்கள் கூறப்பட்டுள்ளன:

சீனாவின் ஹூபே மாகணம், வுஹான் நகரில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து உலகிற்கு சீனா எச்சரிக்கை செய்த பின், அங்கிருந்து 4.30 லட்சம் மக்கள் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம் வந்துள்ளதுதான் அமெரிக்காவுக்கு பாதிப்பு தீவிரமானதற்கு முக்கியக்காரணமாகும்.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பின் பிறப்பிடமாக இருந்த வுஹான் நகரிலிருந்து மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவுக்கு நேரடி விமானம் மூலம்வந்துள்ளனர்

சீனாவிலிருந்து 1,300 விமானங்கள் அமெரிக்காவின் முக்கியமான 17 நகரங்களுக்கு இயக்கப்பட்டுள்ளன, இந்த விமானங்கள் மூலம்தான் மக்கள் அமெரிக்காவுக்குள் வந்துள்ளார்கள்.

கரோனாவின் வீரியத்தன்மை அறிந்து அதிபர் ட்ரம்ப் கடுமையான விதிமுறைகளை அமெரிக்காவில் நடைமுறைப்படுத்தும் முன்பே சீனாவிலிருந்து ஏறக்குறைய 4 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்துவிட்டார்கள்.

இந்த 4 லட்சம் மக்கள் சீனாவிலிருந்து அமெரி்க்காவின் 17 நகரங்களில் கால்பதிக்கும் போது அமெரிக்க அரசு விமானநிலையங்களில் கரோனா குறித்த பரிசோதனைகளை தீவிரப்படுத்தவில்லை, மருத்துவ சோதனைகளும் போதுமான அளவில்இல்லை. இவையெல்லாம் அமெரிக்காவில் தற்போது கரோனா வைரஸ் உக்கிரமானதற்கு முக்கியமான காரணங்களாகும்.

அதிலும் ஜனவரி மாதம் 15-ம்தேதிவரை சீனா கரோனா வைரஸின் தீவிரம் குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கவில்லை. இதன் காரணமாக சீனாவிலிருந்து ஏராளமானவர்கள் அமெரிக்காவின் பல்வேறுநகரங்களுக்கு எந்தவிதமான தடையும் இன்றி சென்றுள்ளார்கள்.

கரோனா வைரஸின் ஆபத்தை அறிந்தபின் ஜனவரி மாதத்தின் பிற்பகுதியில் இருந்து தான் அமெரிக்க அரசு விமானநிலையங்களில் பரிசோதனயை தீவிரப்படுத்தத் தொடங்கியது.

அதுவும் லாஸ் ஏஞ்சல்ஸ், சான்பிரான்ஸ்சிஸ்கோ, நியூயார்க் நகரங்களில் உள்ள விமானநிலையங்களில் மட்டுமே வுஹான் நகரில் இருந்து பயணிகள் தீவிரமான சோதனைக்கு ஆளாக்கப்பட்டனர்.

ஆனால், இந்த சோதனை தொடங்கப்படுவதற்கு முன்பே அமெரிக்காவில் 4 லட்சம் பேர் சீனாவிலிருந்து நுழைந்துவி்ட்டார்கள். இ்ந்த புள்ளிவிவரங்களை சீனாவில் உள்ள விமான புள்ளிவிவர நிறுவனமான வாரிபிளைட் தெரிவி்த்துள்ளது.

இதில் எத்தனை பயணிகள் கரோனா வைரஸ் பாதிப்போடு அமெரிக்காவுக்குள் சென்றார்கள், வைரஸ் பாதிப்பு இல்லாமல் வந்தார்கள் என்ற கணக்கு இதுவரை இல்லை அது மர்மமாகவே இருக்கிறது.

அமெரிக்காவுக்குள் நுழைந்த 4.30 லட்சம் பேரில் அமெரிக்க மக்கள் மட்டுமல்ல பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களும் இருந்துள்ளார்கள்.

இவர்கள் லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிான்சி்ஸ்கோ, நியூயார்க், சிகாகோ, சீட்டல், நிவார்க், டெட்ராய்ட் ஆகிய நகரங்களுக்கு நேரடியாக சீனாவிலிருந்து பயணித்துள்ளார்கள்.

கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்க விதித்தபோதிலும் கூட கடந்தவாரம் வரை சீனாவிலிருந்து விமானங்கள் அமெரிக்காவுக்கு வந்தவாறுதான் இருந்தன. குறிப்பாக பெய்ஜிங்கிலிருந்து லாஸ்ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க் ஆகிய நகர்களுக்கு வந்தன. 250-க்கம் மேற்பட்ட விமானங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வந்துள்ளார்கள்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் கூறியபடி, அமெரிக்க அரசு விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை தாமதமாக செயல்படுத்தியதுதான் கரோனா வைரஸ் பரவ காரணமாக இருந்திருக்கலாம் என்றார்.

நியூயார்க்டைம்ஸ் நாளேடு நடத்திய ஆய்வின்படி, விமானப் புள்ளிவிவரங்கள், பயணிகள் வருகை ஆகியவற்றைப் பார்க்கையில் போக்குவரத்து கெடுபிடிகள்தான், விதிமுறைகளை அமெரிக்கா தாமதமாக நடைமுறைப்படுத்தியதுதான் அங்கு கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவ முக்கியக்காரணமாகும்.

எந்தவிதமான அறிகுறியும் இன்றி 25 சதவீத மக்கள் கரோனா வைரஸால் பாதி்க்கப்பட்டுள்ளார்கள் என்று சுகாதாரத்துறையினர் நம்புகிறார்கள். அதுமட்டுமல்லாமல் முதன்முதலில் ஜனவரி 20-ம் தேதி வாஷி்ங்டன் நகரில்தான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல்நபர் அடையாளம் காணப்பட்டார். அதன்பின் பலவாரங்கள் அடையாளம் தெரியாத வகையில்,கண்டுபிடிக்க முடியாத வகையில் கரோனா வைரஸ் வாரக்கணக்கில் அமெரிக்கா முழுவதும் பரவியுள்ளது.

அமெரிக்காவுக்கு முதன்முதலாக இந்த கரோனா வைரஸை யார் கொண்டுவந்தது என்று இதுவரை எந்த மருத்துவ அதிகாரியாலும் கண்டுபிடிக்கப்படாமலே இருக்கிறது.

அமெரிக்க அரசாங்கம் கெடுபிடிகள், சோதனைகளை விமானநிலையங்களில் கொண்டு வருவதற்குமுன் சீனாவிலிருந்து அமெரி்க்காவுக்கு 3.81 லட்சம் பயணிகள் வந்துவிட்டார்கள். பெரும்பாலான விமானங்கள் சீனாவிலிருந்து இயக்கப்பட்ட சீன விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிடிஐ செய்தி ஆதாரங்களுடன்..

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x