Published : 05 Apr 2020 08:16 AM
Last Updated : 05 Apr 2020 08:16 AM
பாகிஸ்தானில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க கடந்த மார்ச் 22-ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று அந்த ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதனிடையே நேற்று நாட்டு மக்களிடையே தொலைக்காட்சியில் உரையாற்றிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறும்போது, “கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாட்டு மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவை நீட்டித்துள்ளோம். ஆனால் இதுபோன்ற ஊரடங்கு உத்தரவுக்கு எதிரானவன் நான். 22 கோடி மக்களை எத்தனை நாட்களுக்கு இப்படி அடைத்து வைப்பது என்று தெரியவில்லை” என்றார்.
இதனிடையே கரோனா வைரஸ் தடுப்புப் பணிகளில் பாகிஸ்தான்ராணுவம் நேற்று முதல் இறங்கியுள்ளது.
கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட சிந்து மாகாணத்தில்உயிரிழப்பு அதிகமாக உள்ளது. அதேபோல் பஞ்சாப் மாகாணத்திலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. அங்கு அதிக அளவில் சுகாதாரத்துறை பணியாளர்கள் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள் தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே பாகிஸ்தானில் கரோனா வைரஸ் குறித்த தகவல்களைப் பெறுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு சமூக வலைத்தளங்கள் முழுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு துறையைச் சேர்ந்த அனைத்து இணையதளங்களும் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சுகாதாரத்துறை தொடர்பான அனைத்து இணையதளங்களும் மூடப்பட்டுள்ளன. வெளியுறவுத்துறை, பாதுகாப்புத் துறை இணையதளங்களையும் மூட உத்தரவிட்டிருப்பதால் அங்கு தகவல்களைப் பெறுவதில் ஊடகங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்நாட்டின் நிர்வாகம் முடங்கும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் தொடர்ந்துஇணையதளங்களை முடக்க பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்துள்ளது. ஊடகங்களுக்கு என்னை செய்தியைத் தரவேண்டும், சர்வதேச அமைப்புகள், பிற நாடுகளுக்கு என்ன தகவல்களை அனுப்பவேண்டும் என்பதை ராணுவமே முடிவு செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT