Last Updated : 16 Aug, 2015 11:09 AM

 

Published : 16 Aug 2015 11:09 AM
Last Updated : 16 Aug 2015 11:09 AM

பதற்றம் நிறைந்த வங்கதேசம் - 6

வங்காளத்தில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் ஆவணங்களைப் பாது காக்கும் பிரிவில் பணியாற்றிய ஷேக் லுஃப்துர் ரஹ்மான் என்பவருக்கு மகனாகப் பிறந்தவர் முஜிபுர் ரஹ்மான்.

சக பாகிஸ்தானியர்கள் அரபி மொழியைப் பெருமையாக நினைத்திருக்க இவர்கள் குடும்பம் வங்காளியாக இருப்பதிலேயே பெருமை கொண்டது. நான்கு மகள் களையும், இரண்டு மகன்களையும் கொண்ட குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாகப் பிறந்திருந்தார் முஜிபுர் ரஹ்மான்.

நான்காம் வகுப்பு படிக்கும்போது ஒரு துரதிருஷ்டம் முஜிபுர் ரஹ்மானின் வாழ்வில் நடந்தது. அவர் கண்களில் ஒரு பாதிப்பு ஏற்பட, இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 1934-ல் பள்ளிப்படிப்பிலிருந்து அவர் விலக வேண்டியிருந்தது. நான்கு வருடங்களுக்குப் பிறகுதான் மீண்டும் பள்ளியில் சேர முடிந்தது. அதுவரை அறுவை சிகிச்சையின் பாதிப்பிலிருந்து அவரால் மீள முடியவில்லை.

தனது பதினெட்டாவது வயதில் முஜிபுர் ரஹ்மான், ஷேக் ஃபசீலாதுன்னெஸா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இரண்டு மகள்களும், மூன்று மகன் களும் பிறந்தனர். (இவர்களில் அந்த நாட்டு அரசியலில் இன்றளவும் குறிப்பிடத் தக்கவராக விளங்குகிறார் ஹசீனா).

கல்லூரிப் படிப்பின்போதே முஜிபுர் ரஹ்மானுக்கு அரசியல் ஆர்வம் அதிகம். இஸ்லாமியா கல்லூரியில் படித்தபோதே அகில இந்திய முஸ்லிம் மாணவர் கூட்ட மைப்பில் சேர்ந்து கொண்டார்.

1943-ல் வங்க முஸ்லிம் லீக் கட்சியில் சேர்ந்தார். அந்தக் காலகட்டத்தில் முஸ்லிம் களுக்கான தனி நாடு கோரிக் கையை பலமாக ஆதரித்தார். 1947-ல் பட்டப்படிப்பை முடித்தார். நாடு பிரிவினையை சந்தித்தது. இந்தியாவி லிருந்து பாகிஸ்தான் பிரிந்தது. கிழக்கு பாகிஸ்தான் முஸ்லிம் மாணவர் கூட்டமைப்பை தொடங்கினார். முஜிபுர் ரஹ்மான். இதைத் தொடர்ந்து வந்த காலகட்டத்தில் சோஷலிசப் பாதையே சிறந்தது என்ற முடிவுக்கு வந்தார்.

உருதுவை மட்டுமே தேசிய மொழியாக அறிவிக்கக் கூடாது என்பதில் முஜிபுர் ரஹ்மான் தீவிரமாக இருந்தார். காரணம் மொழி மட்டுமல்ல உருது என்பது முஸ் லிம்களின் குறியீடாக மட்டுமல்லாமல், மேற்கு பாகிஸ் தானின் உயர்வைக் காட்டும் குறியீ டாகவும் அப்போது முன்னிலை படுத்தப்பட்டது. (கிழக்கு பாகிஸ் தானில் பெரும் பாலானவர்கள் பேசும் மொழி வங்கம் என்பது குறிப்பிடத்தக்கது). இதற்காக 13 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார் முஜிபுர் ரஹ்மான். அவரது புகழ் பெருகத் தொடங்கியது.

ஆனால் இந்த உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் உருதுவை மட்டுமே தேசிய மொழியாக கிழக்கு பாகிஸ்தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று ஜின்னா கட்டளையிட, கிழக்கு பாகிஸ் தானில் எதிர்ப்புகள் வலுவடையத் தொடங்கின. மாணவர்களின் எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினார் முஜிபுர் ரஹ்மான். எனவே சிறைபடுத்தப்பட்டார். எதிர்ப்புகள் வலுவடைந்தன. பல்கலைகழகத்திலிருந்தே முஜிபுர் ரஹ்மான் நீக்கப்பட, கிழக்கு பாகிஸ்தானில் அமைதி குலைந்தது. அவாமி முஸ்லிம் லீக் என்ற கட்சியைத் தொடங்கினார் முஜிபுர் ரஹ்மான். (பின்னர் இது அவாமி லீக் ஆனது). இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார் முஜிபுர் ரஹ்மான். பின்னர் அது சிறிது சிறிதாக வலுவடைந்தது.

1956-ல் கிழக்கு வங்காளம் என்பது கிழக்கு பாகிஸ்தான் என்று பெயர் மாற்றப் பட்டது. இது தொடர்பாக கிழக்கு பாகிஸ் தான் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடைபெற வேண்டும் என்று கூற, பாகிஸ் தான் தலைமைக்கு இவர் மீது கடும் எரிச்சல் ஏற்பட்டது.

‘வங்காளம்’ என்ற வார்த்தைக்குப் பின் பெரும் வரலாறு உண்டு. இந்த வார்த் தையை மாற்றுவதற்கு முன் மக்களின் கருத்தைக் கேட்டிருக்க வேண்டும் என்பது அவாமி லீக்கின் தரப்பாக இருந்தது. 1956ல் கூட்டணி அரசில் முஜிபுர் ரஹ்மான் ஒரு முக்கிய அமைச்சராக விளங்கினார். தொழில், வணிகம், உழைப்பாளர்கள், ஊழல் எதிர்ப்பு, கிராம உதவி போன்ற அத்தனை துறைகளுக்குமான அமைச்சர். என்றாலும் அதற்கு அடுத்த வருடமே தன் பதவியை ராஜிநாமா செய்தார். கட்சிக்குத் தனது முழு நேர உழைப்பு தேவைப்படுகிறது என்றார்.

1958-ல் பாகிஸ்தானின் தலைவராக விளங்கிய அயூப் கான் ராணுவ ஆட்சியை அறிமுகப்படுத்தியபோது, முஜிபுர் ரஹ் மானைக் கைது செய்தார். சுமார் மூன்று வருடம் சிறை தண்டனையை அனுபவித்தார் முஜிபுர் ரஹ்மான். நாளாவட்டத்தில் அவாமி லீக்கின் தலைமையை ஏற்றார். தன் கட்சி மதச்சார்பின்மை கொண்டது என்பதை வலியுறுத்தும் வகையில் ‘முஸ்லிம்’ என்ற பெயரை தன் கட்சிப் பெயரிலிருந்து நீக்கினார்.

(உலகம் உருளும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x