Published : 04 Apr 2020 06:04 PM
Last Updated : 04 Apr 2020 06:04 PM
நியூயார்க்கில் கரோனா தொற்றால் ஏற்பட்ட உயிர் பலி எண்ணிக்கை, செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலின்போது ஏற்பட்ட உயிர் பலியின் எண்ணிக்கையை நெருங்கி வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து நியூயார்க் மேயர் ஆண்ட்ரூ குவாமோ கூறுகையில், ''நியூயார்க்கில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மட்டும் கரோனா வைரஸுக்கு நியூயார்க்கில் 562 பேர் பலியாகியுள்ளனர். நியூயார்க்கில் கரோனா தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,935 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கரோனா வைரஸக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 406 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 2,77,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12,283 பேர் குணமடைந்துள்ளனர்.
நியூயார்க்கில் கரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 அன்று நடத்தப்பட்ட இரட்டைக் கோபுர தீவிரவாதத் தாக்குதலின்போது 2,996 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பை கரோனா பலி எண்ணிக்கை நெருங்குகிறது என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 32 ஆயிரத்து 284 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 190 நாடுகளில் நோய்த் தொற்றை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 11,17,860 பேர் உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 59,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
கரோனா வைரஸுக்கு அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT