Last Updated : 26 Aug, 2015 12:47 PM

 

Published : 26 Aug 2015 12:47 PM
Last Updated : 26 Aug 2015 12:47 PM

சக மாணவர்களை துப்பாக்கியுடன் மிரட்டி சிறைபிடித்த அமெரிக்க சிறுவனால் பரபரப்பு

அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் சக மாணவர்கள், ஆசிரியர்கள் என 29 பேரை 14 வயது மாணவர் துப்பாக்கிமுனையில் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பள்ளி ஆசிரியர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் மாணவர் சரணடைந்தார். மற்றவர்களும் மீட்கப்பட்டனர்

மேற்கு வெர்ஜினியாவில் அமைந்துள்ள ஃபிலிப் பள்ளியில் இந்தச் சம்பவம் நடந்தது. இது குறித்து வெர்ஜினியா போலீஸார் கூறும்போது, "அந்த மாணவர் துப்பாக்கியுடன் பள்ளி வளாகத்தின் 2-வது தளத்தில் உள்ள வகுப்பறையில் மாணவர்களை துப்பாக்கிமுனையில் சிறை பிடித்தார்.

அப்போது அங்கிருந்த மாணவர்கள் அச்சத்தில் இருந்த நிலையில், ஆசிரியை ஒருவர் மாணவர்களை கட்டுப்படுத்தினார், வகுப்பறைக்கு எதார்த்தமாக வந்த மாணவர்களையும் அவர் சைகை காட்டி உள்ளே வரவேண்டாம் என எச்சரித்திருக்கிறார்.

அந்த மாணவரிடம் ஆசிரியை நடத்திய பல மணி நேர பேச்சுவாத்தைக்குப் பின்னர் மாணவர்கள் அனைவரையும் மீட்டு எங்களிடம் சரணடைய செய்தார். மாணவரிடம் மொத்தம் 29 பேர் சிக்கி இருந்தனர். அவர்களை கை உயர்த்த கோரி மாணவர் துப்பாக்கிமுனையில் எச்சரித்துள்ளார்" என்றார்.

மாணவர்கள் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டது தெரிந்த உடன் ஒலிபெருக்கி மூலம் பள்ளி முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சம்பவத்தின் போது மாணவர்களை காப்பாற்றிய ஆசிரியையிடம் அந்த மாணவர் சில நிபந்தனைகளை விதித்ததாக கூறப்படுகிறது.

எனினும் மாணவர் அப்படி நடந்து கொண்டதற்கான காரணம், அவரது பெயர் உள்ளிட்ட விவரங்களை போலீஸார் வெளியிடவில்லை.

சிறார் வழக்கு என்பதால், இதனை சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x