Published : 03 Apr 2020 08:20 AM
Last Updated : 03 Apr 2020 08:20 AM
கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், பலியானவர்கள் குறித்து சீனா வழங்கிய புள்ளிவிவரங்கள் எதிலும் நம்பகத்தன்மை இல்லை, அதில் எதுவுமே துல்லியமாக இல்லை என்று இந்திய வம்சாவழி அமெரிக்க அரசியல் தலைவரும், குடியரசுக்கட்சியைச் சேர்ந்தவருமான நிக்கி ஹாலே சந்தேகித்துள்ளார்.
அமெரிக்காவின் உளவு அமைப்பான சிஐஏ ஏற்கனவே சீனா அளித்த புள்ளிவிவரங்கள் நம்பகத்தன்மையானது இல்லை, அதை வெள்ளை மாளிகை நிர்வாகிகள் நம்பவேண்டாம் எனத் தெரிவித்த நிலையில் தற்போது குடியரசுக்கட்சியின் முன்னாள் எம்.பி. நிக்கி ஹாலேவும் அதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்
அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிருபர்களிடம் புதன்கிழமை பேசுகையில் கூட, “ கரோனா வைரஸ் தொடர்பாக சீனா வழங்கிய புள்ளிவிவரங்களை தான் நம்பவில்லை. அந்த எண்ணிக்கையில் எனக்கு சிறிய சந்தேகம் இருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கரோனா வைரஸ் சீனாவில் தாக்கத் தொடங்கி இதுவரை 81,589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 76,408 பேர் குணமடைந்துள்ளனர். 3,318 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், உயிரிழப்பும், பாதிப்பும் கடுமையாக இருக்கும் சீனா அரசு உலகிற்கு பொய்யான தகவல்களை தருவதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது
ஐ.நா.வுக்கான முன்னாள் அமெரி்க்க தூதர் நிக்கி ஹாலே நேற்று நிருபர்களிடம் கூறுகையில் “ சீனாவில் கரோனா வைரஸால் இதுவரை 82 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 3,300 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 150 கோடி மக்கள் உள்ள நாட்டில் இதுதான் புள்ளிவிவரங்களா. இது உண்மையில் நம்பும் வகையில் இல்லை, துல்லியத்தன்மையும் இல்லை.
சீனாவோடு ஒப்பிடும் போது அமெரிக்காவில் இதுவரை 2 லட்சம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 5,800 பேர் உயிரிழந்துள்ளார்கள்.
சீனாவில்தான் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. சீனா எப்போதுமே சர்வதேச அளவில் தனது மதிப்பையும், கவுரவத்தையும் குறைத்துக்கொள்ள விரும்பாத நாடு. உலகில் மற்ற நாடுகள் கரோனா வைரஸை ஒழிப்பதற்கு உதவி செய்வதைவிட சீனா தனது கவுரவத்தின் மீதுதான் அதிகமான அக்கறை கொள்ளும்.
அமெரிக்காவின் சிஐஏ சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர், பலியானோர் குறித்து சுயமாக மதிப்பீடு செய்து வருகிறது. அதுவரை சீனா அரசு அளிக்கும் எந்த புள்ளிவிவரங்களையும் வெள்ளை மாளிகை நம்ப வேண்டாம்.
உலகளவில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த நாடுகள் கடுமையாக போராடி வருகின்றன, அதன் பரவும் வேகம், பாதிப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வரும்நிலையில் சீனாவில் இருந்து உண்மையான பாதிப்பு விவரங்கள், இறப்பு விவரங்கள் வந்தால்தான் உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்
அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் ஓ பிரையன் புதன்கிழமை நிருபர்களிடம் கூறுகையில் “ கரோனா வைரஸில் சீனா உலகிற்கு அளித்த புள்ளிவிவரங்கள் ஏதும் நம்பும் வகையில் இல்லை. ஆனால், துரதிர்ஷ்டமாக அந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் உண்மையானதா என்று உறுதி செய்ய முடியாமல் இருக்கிறோம். ஆனால், சீனா அளித்த விவரங்கள் ஏதும் நம்பமுடியாது. சீனாவின் சமூக ஊடகங்களில் இருந்து எங்களுக்கு வரும் செய்திகள் மாறாக இருக்கின்றன” எனத் தெரிவித்திருந்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT