Published : 02 Apr 2020 12:40 PM
Last Updated : 02 Apr 2020 12:40 PM

கரோனா யுத்தத்தில் கரை சேருமா பாகிஸ்தான்?

உலகையே மாற்றிக்கொண்டிருக்கும் ஒரு தொற்றுநோய்க்கு எதிராக ஓர் உலகப் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லாக் கண்டங்களிலும் ஆயிரக்கணக்கானோர் மரணமடைந்திருக்கிறார்கள். உயிரிழப்பின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரத்துக்கும் உயர்ந்துகொண்டே இருக்கிறது. மிகவும் வளர்ச்சியடைந்த நாடு முதல், ஏழை நாடு வரை எந்த நாடும் இதிலிருந்து தப்பிவிடவில்லை.

இது சமீப காலங்களில் ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய பேரழிவு. இதன் முழுமையான பாதிப்பை இனிமேல்தான் உணரப்போகிறோம். பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பலம் பொருந்திய நாடுகள் இந்தத் தொற்றுநோயின் மையமாகியிருக்கின்றன. அதிகாரபூர்வ கணக்கீட்டின் அடிப்படையிலேயே அமெரிக்காவில் மட்டும், 1 லட்சம் முதல் 2 லட்சம் வரை மரணங்கள் நிகழலாம் என்று கூறப்படுகிறது.

சமீபத்தில் கசிந்திருக்கும் பிரிட்டன் அரசின் அறிக்கை ஒன்று ‘ஃபைனான்சியல் டைம்ஸ்’ இதழில் வெளியாகியிருக்கிறது. அதில் 80 சதவீத பிரிட்டன் மக்கள் தொற்றுக்குள்ளாகலாம் என்றும், 5 லட்சம் பேர் மரணமடையலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்துவருவதே இந்தப் பேரழிவின் தீவிரத் தன்மையைக் காட்டுகிறது. “வரும் ஆண்டில் உலகின் 40 முதல் 70 சதவீதம் பேர் வைரஸ் தொற்றுக்குள்ளாகலாம்” என்று இதே அறிக்கையில் ஹார்வர்டு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டிருக்கிறார்.

பாகிஸ்தானின் நிலை
பொது சுகாதாரத்தில் படுமோசமான நிலை, பெரிய அளவிலான சவால்களை எதிர்கொள்வதற்குத் தேவையான திறனின்மை என்றிருக்கும் பாகிஸ்தான் போன்ற ஏழை நாடுகளைப் பொறுத்தவரை, இந்தப் புள்ளிவிவரங்கள் பொருத்தமற்றவைதான். வளர்ச்சி குறைவான நாடுகளில் இந்தத் தொற்றுநோய் ஏற்படுத்தும் பொருளாதார மற்றும் சமூகப் பாதிப்பின் மதிப்பு கணக்கிடவே முடியாதது. பெரும்பாலான நாடுகள் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்படலாம்.

எனவே, இந்தப் பிரச்சினைக்கான தீர்வு என்பது இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்ல. இந்த வைரஸ் தொற்றின் தற்போதைய அலை இன்னமும் உச்சமடையவில்லை எனும் சூழலில், இன்னொரு அலைக்கும் சாத்தியமிருக்கிறது என்று கருதப்படுகிறது. இது நீண்ட யுத்தமாக இருக்கப்போகிறது எனும் எண்ணத்தை இது வலுப்படுத்துகிறது. இந்த நோயை எதிர்கொள்ள நமக்குத் தெரிந்த ஒரே அணுகுமுறை சமூக விலக்கம்தான். எனினும், இதன் மூலம் வைரஸைக் கட்டுப்படுத்தலாம் என்பதற்குக் குறைந்த வாய்ப்புகளே உள்ளன. அந்த வாய்ப்பையும் தவறவிட்ட பல நாடுகள் அதற்காக மிகப் பெரிய விலையைக் கொடுக்க நேர்ந்திருக்கிறது.

தாமதமான நடவடிக்கை
பாகிஸ்தானைப் பொறுத்தவரை, இதுவரை அறிவிக்கப்பட்டிருக்கும் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால், பெரும் பேரழிவு இனிமேல்தான் நிகழக்கூடும். பிரதமர் இம்ரான் கானின் ‘ஊடூ’ (voodoo) பாணி அணுகுமுறையாலும், தாமதமான நடவடிக்கைகளாலும் வைரஸ் பரவலைத் தடுக்கும் வாய்ப்பைப் பாகிஸ்தான் ஏற்கெனவே தவறவிட்டுவிட்டது என்று பல நிபுணர்கள் கருதுகிறார்கள். நாட்டு மக்களுக்குப் பிரதமர் ஆற்றியிருக்கும் உரை, இதுவரை பாகிஸ்தான் கண்டிராத மிகச் சிக்கலான நெருக்கடி நேரத்தில், தேசத் தலைமையிடம் இருக்கும் போதாமையையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது.

முழு ஊரடங்கு நடவடிக்கைக்கு எதிரான கருத்துடன் பேசியிருக்கும் இம்ரான் கான், கொள்கைக் குழப்பத்தையும் அதிகரிக்கச் செய்திருக்கிறார். உண்மையில், முழு ஊரடங்குதான் இந்தத் தருணத்தில் இறுதியாகத் தேவைப்படும் விஷயம். இது ஒரு அடிப்படையான பொது சுகாதார நெருக்கடி; முன்னுரிமை அடிப்படையில் இதற்கு முகம் கொடுக்க வேண்டும் என்பது புரிந்துகொள்ளப்பட்டதாகவே தெரியவில்லை. சமூக விலக்கம் கடுமையாக அமல்படுத்தப்படுவதைத் தவிர்த்துவிட்டு, இந்த நெருக்கடியை எதிர்கொள்ளவே முடியாது – பொருளாதார இழப்பு எந்த அளவுக்கு ஏற்பட்டாலும் சரி!

பேசப்படாத பிரச்சினை
இந்த நோய் கட்டுப்படுத்தப்படாமல் பரவுவதைவிட, நாட்டின் பொருளாதாரத்துக்கும், சமூகத்தின் ஏழை மக்களுக்கும் மிகப் பெரிய பேரழிவு வேறு இல்லை. பாகிஸ்தானில் சமூகப் பரவல் அதிகரித்துவருவது அதற்கான அறிகுறியைத்தான் காட்டுகிறது. ராய்விண்டில் சமீபத்தில் நடந்த தப்லீக் இஸ்திமா நிகழ்வில் கலந்துகொண்டவர்களின் வழியே வைரஸ் பரவல் பெருமளவில் நடந்திருப்பதில் ஆச்சரியம் ஏதும் இல்லை.

இதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்பதுதான் கவலைக்குரிய விஷயம். நமது எல்லைகளைத் தாண்டி வைரஸ் பரவ இந்நிகழ்வு காரணமாகியிருக்கிறது. காஸா பகுதியில் கரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருப்பவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் என்று தெரியவந்திருக்கிறது.

மிகப் பெரிய பாடம்
உலகம் இதன் பாதிப்பிலிருந்து மீண்டு வர பல ஆண்டுகள் அல்லது ஒரு தலைமுறையேகூட ஆகலாம். இதுபோன்ற தொற்றுநோய்களால் மனித குலத்தின் பாதுகாப்புக்கு ஏற்படும் ஆபத்து என்பது, புவியியல் மற்றும் தேசிய எல்லைகளைக் கடந்தது என்பதுதான் இதிலிருந்து கிடைத்திருக்கும் மிகப் பெரிய பாடம்.

தேசப் பாதுகாப்பு குறித்த கருத்தாக்கத்தையே இது முற்றிலுமாக மாற்றியமைத்துவிடும். போர்க்களங்களை விடவும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இதுபோன்ற பேரழிவுகளிலிருந்து தேசங்களை ராணுவ சக்தியால் காப்பாற்றிவிட முடியாது. கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவருவது, இரண்டாம் உலகப் போரின் விளைவுகளுடன் ஒப்பிடும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

ராணுவம் காப்பாற்றாது
கரோனா வைரஸ் ஏற்படுத்திவரும் பேரழிவு, உலகத்துக்கே விழிப்பூட்டும் நிகழ்வாக அமைய வேண்டும். ராணுவ வலிமையைக் கட்டமைப்பதைவிட மனித மேம்பாட்டில் உலகம் இனி கவனம் செலுத்த வேண்டும். பொது சுகாதாரம், பருவநிலை, சுற்றுச்சூழல் உள்ளிட்ட சமூகப் பிரச்சினைகளைப் புறக்கணித்துவிட்டு, ஆயுதங்கள் வாங்குவதிலும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவதிலும்தான் உலக நாடுகள் பெருமளவு பணத்தைச் செலவிடுகின்றன.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, 2018-ல், உலக அளவில் ராணுவ செலவுகள் 1,822 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. முந்தைய ஆண்டைவிட இது 2.6 சதவீதம் அதிகம். இதில் அமெரிக்காதான் அதிக அளவில் செலவழித்திருக்கிறது என்பது எதிர்பார்க்கப்பட்ட விஷயம்தான் என்றாலும், வேறு பல நாடுகளும் பாதுகாப்பு பட்ஜெட்டை அதிகரித்திருக்கின்றன. இது பிராந்திய ரீதியான பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நாடுகளைப் பொறுத்தவரை, பொது சுகாதாரம் என்பது மிகவும் குறைவான முன்னுரிமை தரப்பட வேண்டிய விஷயம்.

ஆனால், ராணுவ ரீதியாக சக்திவாய்ந்த நாடுகள்கூட தாக்குதலுக்கு இலக்காகக்கூடியவை என்று கரோனா வைரஸ் காட்டிவிட்டது. தனது எல்லா வளங்களைப் பயன்படுத்தியும், கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா திணறுவதே இதற்கு உதாரணம். பல உயிர்களைப் பலிவாங்கக்கூடிய இந்த யுத்தத்தை, சர்வதேச நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பால் மட்டுமே வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.

போரில் வெல்ல…
தனது முன்னுரிமைகளை மறுகட்டமைப்பு செய்ய, பாகிஸ்தானுக்கும் இதுதான் தருணம். பாகிஸ்தான் உண்மையாகவே பாதுகாப்புடன் இருக்க, பொருளாதாரம், உணவு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை மட்டும் பலப்படுத்தினால் போதாது. பொது சுகாதாரத்திலும் அதிகமாக முதலீடு செய்ய வேண்டும்.

அணுகுண்டு தேசமாக இருப்பதும், உலகின் ஆறாவது பெரிய ராணுவப் படையை வைத்திருப்பதாகத் தன்னைத் தானே பாராட்டிக்கொள்வதும், பொது சுகாதாரம் தொடர்பான இந்தப் போரில் வெல்ல பாகிஸ்தானுக்கு உதவாது!

ஜாஹித் ஹுசைன்

நன்றி: டான் (பாகிஸ்தான் நாளிதழ்) | தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x