Published : 09 Aug 2015 11:44 AM
Last Updated : 09 Aug 2015 11:44 AM
துப்பாக்கித் தோட்டாக்களால் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் முகத்தை வரைந்து, ரஷ்யா தங்கள் நாட்டின் மீது தொடுத்துள்ள போருக்கு உக்ரைன் பெண் ஓவியர் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
உக்ரைனைச் சேர்ந்த பெண் தரியா மார்ச்சென்கோ (33). ஓவியரான இவர், சமீபத்தில் 'போரின் முகம்' என்ற தலைப்பில் விளாதிமிர் புதினின் முகத்தை வரைந்துள்ளார். அந்த ஓவியம் முழுக்க, துப்பாக்கித் தோட்டக்களைக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளது என்பது தான் இதில் சிறப்பம்சம்.
சுமார் 7 அடி நீளம் கொண்ட இந்த ஓவியத்தில் சுமார் 5 ஆயிரம் தோட்டாக்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன.
இதுகுறித்து தரியா கூறியதாவது:
ஒரு கையில் விளக்கைக் கொண்டு இந்த ஓவியத்துக்கு அருகில் கொண்டு சென்றால், அந்த ஓவியத்தில் புதினின் முகம் வெவ்வேறு விதமாக மாறுவதைக் காணலாம்.
ஒரு பக்கம் பெருமைப்படுவது போலவும், இன்னொரு பக்கம் குழப்பமாக இருப்பது போலவும், இன்னொரு புறம் தீவிரமான யோசனையில் இருப்பது போலவும் புதினின் முகம் மாறும்.
இவ்வாறு புதினின் முக உணர்வுகள் மாறும்போது, மக்களுக்கு வெவ்வேறு எண்ணங்கள் தோன்றும். ஆனால் எனக்கு ஒரே ஓர் எண்ணம் மட்டுமே தோன்றுகிறது. அதாவது, உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்திருக்கும் இந்தப் போரானது, மற்ற போர்களில் இருந்து மறுபட்டது. ஏனெனில், இந்தப் போர் பொய்யின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் போரினால் என்னுடைய நாடு எவ்வளவு இழப்புக்கு ஆளாகியிருக்கிறது என்பது இந்த உலகுக்குத் தெரியாது. எனவே, துப்பாக்கித் தோட்டாக்களைக் கொண்டு கலைப் படைப்புகள் செய்வதற்கு ஆர்வம் ஏற்பட்டது.
துரதிருஷ்டவசமாக, என்னைப் போன்ற கலைஞர்களுக்கு, தங்க ளின் படைப்புகளை உருவாக்க, இதுபோன்ற பல பொருட்களைத் தந்து உதவுகிறது போர்.
இவ்வாறு அவர் கூறினார்.
'தி ஃபைவ் எலிமென்ட்ஸ் ஆஃப் வார்' என்ற தலைப்பில் ஐந்து ஓவியங்களை தரியா படைக்க உள்ளார். அதில் முதலாவது இந்த புதின் ஓவியம். போர்க்களத்தில் இருந்து கிடைக்கும் ஆயுதங்கள், மற்றும் போர் ஏற்படுத்திய சேதங்களால் கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு இரண்டு ஓவியங்களை உருவாக்க உள்ளார் அவர்.
இவரின் இன்னோர் ஓவியத் துக்கு 'தி பிரெய்ன்ஸ் பிஹைண்ட் தி வார்' என்ற தலைப்பு வைக்கப் பட்டுள்ளது. இறுதியாக வரையும் ஓவியம் என்ன மாதிரியானதாக இருக்கும் என்பதை அவர் ரகசிய மாக வைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT