Last Updated : 29 Mar, 2020 02:50 PM

 

Published : 29 Mar 2020 02:50 PM
Last Updated : 29 Mar 2020 02:50 PM

கோவிட்-19 தாக்குதலின்போது பொருளாதாரத் தடை மனிதாபிமானமற்றது: நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? - ஈரானிய திரைக் கலைஞர்கள் கடிதம்

ஈரானின் வடக்கு டெஹ்ரானில் உள்ள சர்வதேசக் கண்காட்சி மையத்தில் ஈரானிய ராணுவத்தால் அமைக்கப்பட்ட கரோனா வைரஸ் நோயாளிகளுக்கான தற்காலிக 2,000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை.

நாடு கரோனா வைரஸ் தொற்றை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கும்போது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை மனிதாபிமானற்றது என்று ஈரானிய திரைக் கலைஞர்கள் கடிதம் எழுதியுள்ளனர்.

மனிதாபிமானமற்ற உலகளாவிய பொருளாதாரத் தடைகளால் ஈரானின் சுவாசம் மட்டுப்படுத்தப்படுகிறது என்று புகழ்பெற்ற ஈரானிய திரைக் கலைஞர்கள் குழு, உலகம் முழுவதும் உள்ள கலைஞர்கள் சமூகத்திற்கு எழுதப்பட்டுள்ள ஒரு கடிதத்த்தில் குறிப்பிட்டுள்ளனர்.

உலகக் கலைஞர்கள் சமுதாயத்தினருக்கு எழுதப்பட்டுள்ள இந்தக் கடிதம் மார்ச் 28 தேதியிடப்பட்டுள்ளது. இக்கடிதத்தில் 2016-ல் கேன்ஸ் திரைப்பட விழாவில் அஸ்ஹர் ஃபர்ஹாடி இயக்கிய 'தி சேல்ஸ்மேன்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ஷாஹாப் ஹொசைனி, உலகப் புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மஜித் மஜீதி மற்றும் ரக்‌ஷன் பனீட்மாட், பிரபல நடிகர்-திரைப்படத் தயாரிப்பாளர்-எழுத்தாளர் நிகி கரிமி, நடிகர் பாபக் கரிமி உள்ளிட்ட ஈரானைச் சேர்ந்த 302 பேர், ஈரான் திரைப்படத் துறையின் முக்கிய ஆளுமைகள் கையொப்பமிட்டுள்ளனர்.

சமீபத்தில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதுகுறித்து உலகக் கலைஞர்களுக்கு ஈரானிய திரைக் கலைஞர்கள் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

''ஈரான் தற்போது மத்தியக் கிழக்கில் பரவியுள்ள மிக மோசமான கரோனா நோய்த் தாக்குதலுக்கு எதிராகப் போராடுகிறது. எங்களைப் போன்ற உலகத்தில் உள்ள மற்ற நாட்டுக் கலைஞர்கள் அனைவரும் அரசியல்வாதிகளும் எங்கள் வலியை நிச்சயம் உணர்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மேலும் தாமதப்படுத்த வேண்டாம் என்றுதான் இப்பொழுதே இக்கடிதத்தை எழுதுகிறோம்.

பொதுவாக நாம் அனைவரும் கலைஞர்கள், நமது நாடு தேசியம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கலை என்று அழைக்கப்படும் எல்லையற்ற கற்பனாவாதத்தின் குடிமக்கள் நாம் அனைவரும்.

நமது கலை முயற்சிகளால் நமது நாடுகளை மேம்படுத்த முயற்சி செய்கிறோம். மேலும் மக்கள் மீது கலைஞர்களின் செல்வாக்கு அபரிதமானது. காரணம் எவ்வகையான பிரச்சினைகளையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கும் திறமை கொண்டவர்கள் நாம்.

உலகளாவிய அரசியலும் அதன் வல்லரசுகளும் கலைஞர்களைப் பிரிக்க இடைவெளிகளை உருவாக்கியுள்ளன. ஆனால், கலைஞர்கள், உலகுக்கு மனிதநேயம் மற்றும் அமைதி பற்றிய அவர்களின் கூட்டுச் செய்திகளை உலகுக்கு வழங்குவதில் வலுவாகவும் உறுதியுடனும் செயல்பட்டு வருகிறோம்.

ஆனால் இவற்றையெல்லாம் மீறி, அனைவரின் புவியியல் அல்லது அரசியல் சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல், ஒரு பொதுவான எதிரியாக நம் முன் நின்று நேருக்கு நேர் பேசுகிறது கோவிட்-19. இந்த நுண்ணிய எதிரியின் தாக்குதலில் நாம் அனைவரும் சமமாகப் பாதிக்கப்படக்கூடியவர்கள்தான்.

நமது மதப் பின்னணிகள், சித்தாந்தங்கள் வேறுவேறாக இருக்கலாம். ஆனால் இவற்றைப் பொருட்படுத்தாமல், நமது அனைவரின் தனிப்பட்ட சுவை, பாணிகள் மற்றும் கலாச்சாரப் பண்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, நாம் அனைவரும் நம் கலைப் படைப்புகளுடன் கதைகளையும் படங்களையும் உருவாக்குகிறோம். போருக்குச் சமாதானம், அறியாமையை அகற்றும் அறிவு, தீமையை அழிக்கும் நல்லது, அதுபோல, நிச்ச்சயமாக நமது ரட்சிப்புக்குப் பிறகு உயிர்த்தெழுதல் உண்டு.

தீங்கு, அழிவு அல்லது இழப்பிலிருந்து பாதுகாக்கும், மீட்கும் ஒருவரின் ரட்சிப்பு, பலரின் முயற்சியையும் சார்ந்தது. கரோனா ஒரு வைரஸ் மட்டுந்தானா? இது ஒரு எளிமையான வரலாற்றுக் கேள்வி. இது உலக மக்களிடமிருந்தும் அரசாங்கங்களிடமிருந்தும் சிக்கலான பதில்களுக்காகக் காத்திருக்கிறது.

இத்தகைய மோசமான தருணத்தில் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அது நாட்டின் சுவாசத்தையே மட்டுப்படுத்தும் வேலையைச் செய்கிறது. இதன் காரணமாக பலவீனமான விளைவுகள் ஏற்படும். இது மனிதாபிமானமற்ற ஒரு தடை.

இதுவும் கடந்து போகும்; ஆனால் பாதிப்புக்குள்ளான கதைகள் அப்படியே இருக்கும்.

இந்த நெருக்கடி சிறிய அல்லது பேரழிவு இழப்புகளை ஏற்படுத்தும். எனினும் இதுவும் கடந்து போகும். ஆனால் இது தொடர்பான கதைகள் தொகுப்பாக அப்படியே இருக்கும்.

மருந்துகளின் பற்றாக்குறை மற்றும் அடிப்படை மருத்துவமனை வசதிகள் குறித்த கவலைகளை மறைக்கும்போது நோயாளிகளின் மன உறுதியை உயர்த்துவதற்காக அசுத்தமான மருத்துவமனைக் கூடங்களில் நடனமாடும் செவிலியர்களின் கதைகள், மருத்துவமனைகளின் கூடங்களில் கரோனா பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்க முயலும்போது, ​​வாரக்கணக்கில் வீட்டிற்கு போகாமல் முகக் கவசங்கள், கையுறைகள், கவுன் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ள மருத்துவர்களின் கதைகள்.

இவை அனைத்தும் நம் காலத்தின் நுண்ணிய வரலாற்று நினைவுகளில் தங்கியிருக்கும், விரைவில் அல்லது தாமதமாக, இந்த சோகக் கதைகள் எங்களிடமிருந்தோ அல்லது உங்கள் அனைவரிடமிருந்தோ கேட்கப்படும்.

உலகின் செல்வாக்கு மிக்க மற்றும் ஒன்றுபட்ட கலைஞர்களுக்கு ஈரானிய மக்களை மையமாகக் கொண்ட கதைகளைச் சொல்வது தாமதமாகாது என்று நம்புகிறோம். இதனால் உலகின் சக்திவாய்ந்த அரசியல்வாதிகள் சரியான தேர்வுகளை எடுக்கக்கூடும்,

நோய்த் தொற்றில் பாதிக்கப்பட்டு உயிருக்குப் போராடும் (மிகவும் பாதிக்கப்படக்கூடிய முதியவர்கள் உட்பட) மருத்துவப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். உலகின் அருமைக் கலைஞர்களே இதுகுறித்து - “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? நீங்கள் என்ன செய்வீர்கள்?".

இவ்வாறு ஈரானிய திரைக் கலைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x