Last Updated : 28 Mar, 2020 04:54 PM

 

Published : 28 Mar 2020 04:54 PM
Last Updated : 28 Mar 2020 04:54 PM

கரோனா வைரஸ்: மன அழுத்தம், ஊரடங்கு உத்தரவால் கணவன் - மனைவி இடையிலான தகராறு உலக அளவில் அதிகரிக்கும்

பாரிஸ்

கொடூரமான கரோனா வைரஸால் உலகில் உள்ள மக்களில் 5-ல் ஒருபகுதியினர் வீட்டுக்குள் முடங்கி லாக்-டவுனை அனுபவித்து, சமூக விலக்கலைக் கடைப்பிடித்து வரும் நிலையில் அதனால் ஏற்படும் அழுத்தத்தால் குடும்பத்தில் கணவன், மனைவிக்கு இடையே சண்டை, தகராறு, மனக் கசப்புகள் உருவாகும் சூழல் உலக அளவில் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வழக்கறிஞர்களுக்கு கடந்த சில நாட்களாக கணவன், மனைவி இடையிலான சண்டை தொடர்பான வழக்குகள், தொலைபேசி அழைப்புகள் அதிகமாக வருவதாகத் தெரிவித்துள்ளனர்

கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க அனைவரும் சமூக விலக்கலைக் கடைப்பிடிக்க வேண்டும், வீட்டுக்குள் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன்படி இந்தியா, இத்தாலி, சீனா, தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பெயின், அமெரிக்கா, இங்கிலாந்து, ஈரான் போன்ற கரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் லாக் டவுன் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த லாக் டவுனில் வீட்டில் இருக்கும் கணவனும், மனைவியும் வெளியே எங்கும் செல்ல முடியாத சூழலில், மன அழுத்தம் ஏற்பட்டு குடும்பத்துக்குள் தேவையற்ற தகராறு ஏற்படும் சூழல் நிலவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள லூப்கின் நகரில் செயல்படும் கிழக்கு டெக்சாஸ் குடும்ப நல ஆலோசனை மையத்தின் இயக்குநர் கிளெனா ஹார்க்நெஸ் கூறுகையில், “கரோனா வைரஸ் பரவும் காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள லாக் டவுனால் வீ்ட்டுக்குள் அனைவரும் முடங்கும்போது, தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படும். குடும்பத்துக்குள் அதிகமான சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் எங்களின் ஆலோசனை மையத்தின் ஹாட் லைன் இணைப்புக்கு அழைப்பு வருவது கடந்த சில நாட்களாக 20 சதவீதம் அதிகரித்துள்ளது.

கணவன், மனைவிக்கு இடையே உடல்ரீதியான தாக்குதல் புகார் மட்டுமின்றி, மனரீதியான தாக்குதல் குறித்தும் புகார் வருகின்றன. குடும்பத்துக்குள் இடைவெளி இல்லாதபோது இந்த நேரத்தில் குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் அழைக்கும்போது எங்களால் நேரடியாகச் செல்ல முடியாத சூழல் இருக்கிறது. இது அமெரிக்காவில் மட்டுமல்ல பிரேசில் முதல் ஜெர்மனி வரையிலும், இத்தாலி முதல் சீனா வரையிலும் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

பிரான்ஸ் 24 என்ற இணையதளத்துக்கு பாரீஸைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மேரி, பிரான்ஸ் ஹிரியோஜன் அளித்த பேட்டியில், “ பிரான்ஸில் ஏராளமான பெண்கள், குடும்பத்தினர் இந்த லாக் டவுன் நேரத்தில் குடும்ப வன்முறைக்கு ஆட்படுகிறார்கள். அதிலும் கணவர் குடிபோதைக்கு அடிமையானவராக இருந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும். குடும்பத்தில் உள்ள பெண்கள் அடிக்கடி உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்தை அனுபவிப்பார்கள். இந்த லாக் டவுனில் இந்த குடும்பத் தகராறு பெருமளவு அதிகரித்துள்ளது. பொருட்கள் வாங்கக் கடைக்குச் செல்லும் போது கணவன் மனைவிக்கு இடையே ஏராளமான தகராறு ஏற்படுகிறது” எனத் தெரிவித்தார்.

சீனாவில் உள்ள மனித உரிமை அமைப்புகள் முன்பு வெளியிட்ட அறிக்கையில் கூட, லாக் டவுன் நேரத்தில் குடும்பத்தில் வன்முறை அதிகரிப்பு, கணவன், மனைவி இடையே தகராறு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

அதிகமான மன அழுத்தம், கடினமான வாழ்க்கைச் சூழல், சமூகரீதியான ஆதரவு குறைதல் போன்றவற்றால் இந்தத் தகராறு ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர்.

ஜெர்மனியைப் பொறுத்தவரை பள்ளிகள் அனைத்தும் கரோனா வைரஸால் மூடப்பட்டுள்ளன. இந்த சூழலில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக ஜெர்மனி குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

ஜெர்மன் குழந்தைகள் அமைப்பின் தலைமை நிர்வாகி ரெய்னர் ரெட்டிங்கர் கூறுகையில், “கரோனா வைரஸால் ஏற்படும் லாக் டவுன் சூழலில் குழந்தைகள் வாழ்க்கை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாகும். இந்தக் காலகட்டத்தில் குடும்பத்தில் அனைவரும் சமூக விலக்கலைக் கடைப்பிடிப்பதால், குழந்தைகளின் மன அழுத்தத்தையும், பெற்றோரின் மன அழுத்ததையும் யாரும் கவனிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x