Published : 02 Aug 2015 11:50 AM
Last Updated : 02 Aug 2015 11:50 AM
கிரீஸைத் தனது நாட்டுடன் இணைத்து இத்தாலியின் பரப்பை அதிகரிக்க வேண்டும் என்று முசோலினி தீர்மானித்துச் செயல்படுத்தத் தொடங்கினார். இந்தத் தாக்குதல் அல்பேனியா - கிரீஸ் பகுதியில் நடைபெற்றது. முசோலினி வேறொரு உத்தியையும் பயன்படுத்தினார்.
கிரேக்க ராணுவத்தின் கவனம் அல்பேனிய எல்லையில் இருக்க, அப்போது வடக்கு கிரீஸில் இத்தாலிய ராணுவத்தின் மற்றொரு பகுதி தாக்குதல் நடத்தியது.
ஆனால் பலரும் எதிர்பாராதபடி இத்தாலியப் படையெடுப்பை தடுத்து நிறுத்தியதோடு எதிர்த் தாக்குதலையும் கச்சிதமாகச் செய்தது கிரீஸ்.
1941 மார்ச் மாதத்தில் நடைபெற்ற இத்தாலியின் தாக்குதலை அடுத்த பத்தே நாட்களுக்குள் கிரீஸ் முறியடித்தது. முசோலினியின் போர் வியூகங்களுக்கு அடிமேல் அடி. பிறகு ஹிட்லரின் உதவியை நாடினார் முசோலினி. ஜெர்மனி ராணுவம் கிரீஸ்மீது படையெடுத்தது.
ஜெர்மனியுடனும் கிரீஸ் தொடர்ந்து போரிட்டது. என்றாலும் ஒரு கட்டத்தில் தனக்குப் பல விதங்களில் போரினால் உண்டாகிக் கொண்டிருக்கும் நஷ்டங்களை உணர்ந்த கிரீஸ் அமைதி ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டது. முதலில் ஜெர்மனிக்கும், கிரீஸுக்கும் அமைதி உடன்படிக்கை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இத்தாலியுடனும் அமைதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டது கிரீஸ்.
ஆனால் இந்த உடன்படிக்கை மிகவும் ஒருதலைபட்சமாக இருந்தது. அச்சு நாடுகள் கிரீஸை ஆக்கிரமிக்கத் தொடங்கின. இத்தாலிய, ஜெர்மானிய, பல்கேரியப் படைகள் ஒரு சேர கிரீஸுக்குள் நுழைந்தன. பேராசை சற்றும் குறையாத இத்தாலி இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கிரீஸில் மூன்றில் இருபங்கு பரப்பை ஆக்கிரமித்தது.
தொடரும் கிரீஸின் வரலாற்றில் நிகழ்ந்த மேலும் சில முக்கிய சம்பவங்களைப் பார்ப்போம்.
1941ல் ராணுவத் தளபதி மெடக்சாஸ் இறந்துவிட, கிரீஸ் பலவீனமடைந்தது. ஜெர்மனி கிரீஸை முழுமையாக ஆக்கிரமித்தது. அதே ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் சுமார் ஒரு லட்சம் பேர் கிரீஸில் இறந்தனர்.
அதற்கு மூன்று வருடங்கள் கழித்து பிரிட்டனின் உதவியைக் கோரியது கிரீஸ். பிரிட்டனும் கைகொடுத்தது. தனது ராணுவத்தை கிரீஸுக்கு அனுப்பியது. அந்த ராணுவத்துடன் இணைந்து நாஜிக்களை தனது எல்லையிலிருந்து வெளியேற்றியது கிரீஸ்.
1952ல் புதிய அரசியலமைப்புச் சட்டம் கிரீஸில் அறிமுகமானது. இதன்படி கிரீஸ் ஒரு ராஜாங்கம். எனினும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின்படி அது ஆட்சி செய்யும். இதைத் தொடர்ந்து நேட்டோ எனப்படும் வடஅட்லாண்டிக் நாடுகள் கூட்டமைப்பிலும் உறுப்பினரானது கிரீஸ்.
அடுத்த முக்கிய நிகழ்வு என்று 1973-ல் நிகழ்ந்ததைக் கூறலாம். ஜார்ஜ் பபடோபவூலஸ் என்பவர் அப்போது கிரீஸ் நாட்டின் அதிபராக விளங்கினார். ஒரு காலத்தில் அவரே அந்த நாட்டின் ராணுவ அதிகாரியாக இருந்து ஆட்சியைக் கைப்பற்றியவர்தான். அதிபரான ஆனபிறகும் ராணுவ அதிகாரத்தை அவரால் விட முடியவில்லை மூலம் அதீத அடக்குமுறை, சர்வாதிகாரம். மக்களின் பெரும் வெறுப்பைச் சம்பாதித்திருந்தார்.
தன்வினை தன்னைச் சுடும் என்பதுபோல இவரும் ராணுவப் புரட்சிக்கு பலியானார். ஏதென்ஸ் நகருக்குள் ராணுவத்தினர் நுழைந்து அங்குள்ள அரசுக் கட்டடங்களையெல்லாம் 1973 நவம்பர் 25 அன்று கைப்பற்றியபோது அவர்களுக்கு கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை - அரசிடமிருந்தும் சரி, மக்களிடமிருந்தும் சரி.
புரட்சி ராணுவத்துக்குத் தலைமை தாங்கியவர் டெமெட்ரியோஸ் என்பவர். மக்கள் இதற்கு சிறிய அளவில் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால் அதற்கு வேறொரு காரணமும் இருந்தது. அதற்குப் பத்து நாட்களுக்கு முன்புதான் இந்த ஆட்சிக்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்த கலவரத்தில் பொது மக்களில் சிலர் இறக்க, நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயத்துக்கு உள்ளானார்கள்.
லெப்டினன்ட் ஜெனரல் ஃபேடோன் கிஜிகிஸ் என்பவர் ராணுவத்தால் கிரீஸ் நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து தகவல் தொடர்பு சிதைக்கப்பட்டது. தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டன. ஒரு நாள் முழுவதும் ஏதென்ஸ் சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டது.
நாட்டுத் தலைவரான டெமெட்ரியோஸ் தன்னிடம் அதிக அதிகாரங்களை குவித்துக் கொண்டார். 1974ல் இவரது ஆட்சியும் கலைக்கப்பட்டது. இந்த முறை துருக்கியர்கள் கிரீஸை கைப்பற்றியிருந்தனர். டெமெட்ரியோஸ் மீது தேச துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
(உலகம் உருளும்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT