Published : 26 Mar 2020 10:54 AM
Last Updated : 26 Mar 2020 10:54 AM
அமெரிக்காவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000-ஐத் தாண்டியுள்ளது. உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா 3-வது இடத்தில் உள்ளது.
கரோனா தொற்றின் பிடியில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவில், 68 ஆயிரத்துக்கும் அதிகமானார் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 10,000 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் ஒரே நாளில் 150 பேர் கரோனாவுக்குப் பலியாகினர். இதனால் லட்சக்கணக்கான அமெரிக்கர்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர்.
இந்நிலையில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் அமெரிக்காவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,031 ஆக உள்ளது. நாடு முழுவதும் 68,572 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா, இத்தாலியை அடுத்து மூன்றாவது இடத்தில் அமெரிக்கா உள்ளது. இறப்பு விகிதம் 1.5 சதவீதமாக உள்ளது.
நியூயார்க்தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நகரமாக உள்ளது. இங்கு மட்டும் மொத்தம் 280 பேர் மரணம் அடைந்துள்ளனர். புதிதாக 5,000 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கை அடுத்து நியூஜெர்சி, கலிபோர்னியா, மிச்சிகன் இல்லினாய், புளோரிடா ஆகியவை கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT