Published : 25 Mar 2020 03:14 PM
Last Updated : 25 Mar 2020 03:14 PM
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் நடுமையத்தில் உள்ள சீக்கிய வழிபாட்டுத் தலமான குருத்துவாரா மீது அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் தற்கொலைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் பலியாகியுள்ளனர்.
ஆப்கான் சிறுபான்மையினச் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதலாகும் இது.
ஆப்கான் நேரம் காலை 7.45 மணிக்கு ஷோர் பஜார் பகுதியில் புகுந்த தீவிரவாதிகள் சுமார் 150 பேர் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த குருத்வாராவுக்குள் புகுந்தனர்.
இதில் 11 பேர் பலியாகி மேலும் 11 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்பு படையினருடன் இன்னமும் கூட 3 தீவிரவாதிகள் சண்டையிட்டு வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார்.
11 குழந்தைகள் குருத்வாராவிலிருந்து மீட்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். மேலும் வழிபாட்டுத் தல கட்டிடத்தில் சிக்கிய பலர் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட நிர்வாகி தெரிவித்தார்.
இஸ்லாமிக் ஸ்டேட் பொறுப்பேற்பு:
தலிபான்கள் தங்களுக்கும் இந்தத் தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என மறுத்துள்ள நிலையில் இஸ்லாமிக் ஸ்டேட் என்ற ஐஎஸ். அமைப்பு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பாக ஆப்கானிஸ்தானில் சீக்கிய குருத்வாராவை ஐஎஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் 19 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம் நாடான ஆப்கானில் சுமார் 1000 சீக்கியர்களும் இந்துக்களும் வசித்து வருகின்றனர். முன்னதாக இந்த மாத தொடக்கத்தில் ஐஎஸ் ஜிஹாதிகள் காபூல் அரசியல் கூட்டம் ஒன்றில் நடத்திய தாக்குதலில் 32 பேர் பலியாகினர். ஐஎஸ் அமைப்பு என்பது இஸ்லாமியத்தின் தீவிர சன்னி வியாக்கியானப் பிரிவாகும். 2015-ல் ஆப்கானில் இது செயல்படத் தொடங்கியது.
சமீப காலமாக அமெரிக்க ஆப்கன் படையினரின் தாக்குதலாலும் தலிபான்களின் தாக்குதலாலும் ஐஎஸ் தீவிரவாதம் பின்னடைவு கண்ட போதிலும் சிலபல வேளைகளில் நகர மையங்களில் கொடூரமான தாக்குதலை நடத்தி விடுவது வழக்கமாகி வருகிறது.
உலகமே கரோனாவை எதிர்த்துப் போராடும் வேளையில் ஆங்காங்கே பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன, இப்படியிருக்கையில் பிரார்த்தனை தலத்தில் நடத்திய இந்தத் தாக்குதல் கடும் கண்டனங்களை ஈர்த்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT