Published : 25 Mar 2020 09:05 AM
Last Updated : 25 Mar 2020 09:05 AM
அமெரிக்காவில் கரோனாவுக்குப் பலியான முதல் பதின்ம வயது நபர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது என்று லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் எரிக் கார்செட்டி என்பவர் தெரிவித்துள்ளார்.
லங்காஸ்டரைச் சேர்ந்த பதின்ம வயது நபர் மரணமடைந்ததைத் தொடர்ந்து அவருக்கு முன்னமேயே நோய்கள் எதுவும் இருந்ததா, எதிர்ப்புச் சத்துக் குறைவாக இருந்ததா என்ற சந்தேகம் எழுந்த நிலையில் அந்த பதின்ம வயது சிறுவன் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்ததாக மேயர் தெரிவித்துள்ளார்.
“நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்த நபர் வைரஸுக்குப் பலியாகியுள்ளார். ஆகவே இளைஞர்களே எச்சரிக்கை இது உங்களையும் கடுமையாகப் பாதிக்கும். உங்கள் நடத்தை உயிரைக் காப்பாற்றவும் செய்யும், உயிரைப்பறிக்கவும் செய்யும். அந்த உயிர் உங்களுடையதாகக் கூட இருக்கலாம்” என்று மேயர் கார்செட்டி எச்சரித்துள்ளார்.
ஆனால் பலியான அந்த நபர் ஆணா பெண்ணா உள்ளிட்ட அடையாளங்கள் தெரிவிக்கப்படவில்லை.
“கோவிட்-19 வைரஸ் வயது, இனம், வருவாய் ஆகியவை பார்த்து தொற்றுவதில்லை” என்று லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்ட்டி பொதுச் சுகாதார இயக்குநர் பார்பாரா ஃபெரர் தெரிவித்தார்.
வயதானவர்கள், குறிப்பாக நோயுள்ளவர்களையே கரோனா பீடிக்கிறது என்ற அறிவியல் உண்மை ஒருபுறம் இருந்தாலும் இளம் வயதினரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் இரண்டேயிரண்டு மைனர்கள் மட்டுமே கரோனாவுக்கு பலியானதாகத் தெரிவிக்கப்பட்டது.
லாஸ் ஏஞ்சல்சில் இதுவரை 662 உறுதி செய்யப்பட்ட கரோனா தொற்று நோயாளிகள் உள்ளனர், இதுவரை 11 பேரெ பலியாகியுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக கரோனா தடம் கூறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT