Published : 24 Mar 2020 02:14 PM
Last Updated : 24 Mar 2020 02:14 PM
கரோனா வைரஸால் இத்தாலி கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ள நிலையில், அந்நாட்டில் உள்ள வோ நகரம் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைத் தோற்கடித்துள்ளது.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸால் மிகப் பெரும் பாதிப்பை இத்தாலி எதிர்கொண்டுள்ளது. இங்கு கோவிட் (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை 6,077 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 63,927 பேர் பாதிக்கப்பட்டுளனர். 3,000 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் 23,783 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 19,846 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இத்தாலி மருத்துவர்கள் இரவு பகலாக கரோனா காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் கரோனாவால் பெரிதும் பாதிப்பைச் சந்தித்துள்ள இத்தாலிக்கு உதவும் வகையில் மருத்துவர்களையும், மருத்துவ ஊழியர்களையும் கியூபா அனுப்பியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்றால் இத்தாலியே கடும் பாதிப்பைச் சந்தித்துள்ள வேளையில் அங்குள்ள வோ நகரம் மற்ற நகரகங்களுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
பிப்ரவரி 23 ஆம் தேதி வோ நகரம், இத்தாலி சுகாதாரத் துறை அமைச்சகத்தால், எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் தனிமைப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வோ நகருக்குள் யாரும் உள்ளே செல்லவும், வெளியே வரவும் அனுமதி மறுக்கப்பட்டனர். மேலும் நகரில் உள்ள அனைவரும் சோதனை செய்யப்பட்டு கரோனா வைரஸ் தொற்று இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
கரோனா வைரஸ் அறிகுறி இல்லாதவர்களுக்குக் கூட சோதனை செய்யப்பட்டது. இதன் முடிவில் 14 நாட்களுக்குப் பின்னர் வோ நகரில் கரோனா தொற்று ஒருவருக்கு ஏற்படாத சாதனையை வோ நகரம் புரிந்துள்ளது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறும்போது, “அரசாங்கங்கள் தொற்று பாதித்தவரை தனிமைப்படுத்துவதுடன் அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களையும் தனிமைப்படுத்த வேண்டும். கரோனா தொற்று இல்லாதவர்களுக்கு பரிசோதனை செய்ய வேண்டும். இதன் மூலம் பரவலைக் கட்டுப்படுத்தலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT