Published : 24 Mar 2020 11:08 AM
Last Updated : 24 Mar 2020 11:08 AM

தனிமைப்படுத்தப்பட்ட 30 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு இலவச உணவு: நெகிழவைத்த சீக்கிய அமைப்பு

நியூயார்க்கில் தனிமைப்படுத்தப்பட்ட 30 ஆயிரம் பேருக்கு இலவச உணவு வழங்கி, அங்குள்ள சீக்கிய அமைப்பு அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.

அமெரிக்காவில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் கரோனா வைரஸ் தொற்று இருப்பவர்கள் எண்ணிக்கை 43,700 ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலியானவர்கள் எண்ணிக்கை 550 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நகரங்களில் நியூயார்க்கும் ஒன்று. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அங்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் உணவு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர்.

அமெரிக்காவில் நியூயார்க் சீக்கிய மையம் உள்ளது. அந்த அமைப்பின் சார்பில் நலமாக உள்ள தன்னார்வலர்கள், சுத்தமாக, வீட்டில் சமைக்கப்பட்ட உணவை 30 ஆயிரம் அமெரிக்கர்களுக்கு வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய அமெரிக்க குருத்வாரா பிரபாந்த கமிட்டியின் ஒருங்கிணைப்பாளர் ஹீமத் சிங், ''சீக்கியத் தன்னார்வலர்கள் மூலம் உலர் பழங்கள், அரிசி, பயறு ஆகியவற்றைக் கொண்டு சைவ உணவு சமைக்கப்பட்டது. அவற்றை உள்ளூர் அதிகாரிகளைக் கொண்டு வீடுகளுக்கு விநியோகித்தோம்.

தன்னார்வலர்கள் அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. மருத்துவர்கள் அனுமதித்த பிறகே அவர்கள் விநியோகத்தில் ஈடுபட்டனர். வயதானவர்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுடன் கணவன் அல்லது மனைவி இல்லாமல் இருப்பவர்கள் ஆகியோருக்கு உணவுகள் வழங்கப்பட்டன. இதில் 99 சதவீதம் பேர் அமெரிக்கர்கள். சில இந்திய மாணவர்கள் மட்டும் அதில் இருந்தனர்.

குருத்வாராவுக்குக் கிடைத்த நிதியின் மூலம் இதைச் செய்தோம். அமெரிக்காவின் கிழக்கு, மேற்கு கடற்கரைப் பகுதிகளைச் சேர்ந்த சீக்கியத் தன்னார்வலர்கள் மூலம் இது சாத்தியமானது'' என்று தெரிவித்தார்.

இதனால் சீக்கிய அமைப்புக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x