Published : 22 Mar 2020 08:33 AM
Last Updated : 22 Mar 2020 08:33 AM
பிரிட்டன் முழுவதும் திரையரங்குகள், உணவகங்கள், மதுபான விடுதிகளை மூட அந்த நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் உத்தரவிட்டுள்ளார். பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் அமல் செய்யப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸ் கட்டுங்கடங்காமல் பரவுகிறது. பிரிட்டனில் இதுவரை 3,983 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 177 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நேற்றுமுன்தினம் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றினார். அவர் கூறும்போது, "பிரிட்டன் முழுவதும் திரையரங்குகள், உணவகங்கள், மதுபான விடுதிகள் மூடப்பட வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை மக்கள் முறையாகப் பின்பற்றினால் 12 வாரங்களில் கரோனா வைரஸ் ஒழிந்துவிடும்" என்றார்.
பிரிட்டன் நிதித் துறை அமைச்சர் ரிஷி சுனக் கூறும்போது, "கரோனா வைரஸ் பாதிப்பால் தொழிற்சாலைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் 80 சதவீத ஊதியத்தை அரசே வழங்கும்" என்றார். பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்தில் நேற்று பள்ளிகள் மூடப்பட்டன.
அமெரிக்காவில் நெருக்கடி
அமெரிக்காவில் கரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. அந்த நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. மிகப்பெரிய மாகாணமான கலிபோர்னியாவில் மக்கள் வீடுகளை விட்டுவெளியே வர வேண்டாம் என்றுஆளுநர் காவின் நியூசம் அறிவுறுத்தியுள்ளார்.
நியூயார்க் நகரில் கரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அந்த நகரின் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. அங்கு ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் உயிரிழப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைத் தொடர்ந்து நியூயார்க் நகரில் ராணுவ வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். நகரின் ஓட்டல்கள், விளையாட்டு அரங்குகள், கல்லூரிகள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் இதர பகுதிகளில்இருந்து நியூயார்க் நகருக்கு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கா முழுவதும் 17,251 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. 201 பேர் உயிரிழந்துள்ளனர்.
நரகமாக மாறிய இத்தாலி
சுமார் 6 கோடி மக்கள் தொகை கொண்ட இத்தாலியில் இதுவரை 47,021 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,032 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவைவிட இத்தாலியில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.
அந்த நாடு முழுவதும் மக்கள்வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவம் மற்றும் மளிகை பொருட்களை வாங்க மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். இத்தாலியில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 627 பேர் உயிரிழந்தனர். 6,000 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தலைநகர் ரோம், மிலன், வெனிஸ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு ‘ரேஷன்' அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதாவது, உயிர் பிழைக்க வாய்ப்புள்ளவர்களுக்கு மட்டுமே மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கின்றனர்.
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்த இத்தாலியும் நரகமாக மாறியுள்ளது.
பிரான்ஸில் கட்டுப்பாடு
பிரான்ஸில் இதுவரை 12,612 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 450 பேர் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் முழுவதும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நடைப்பயிற்சி, உடற்பயிற்சிக்குகூட மக்கள் வெளியே வரக்கூடாது என்று பிரான்ஸ் அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. சைக்கிளில் செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடைகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
கேன்ஸ் திரைப்பட விழா வரும் மே 12-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் திரைப்பட விழா தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நிலைமை சீரானால் ஜூலை மாதம் திரைப்பட விழா நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஸ்பெயினில் சிறை, அபராதம்
ஸ்பெயின் நாட்டின் மக்கள் தொகை 4.67 கோடியாகும். அந்தநாட்டில் இதுவரை 20,000 பேர்கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,002 பேர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவுவதை தடுக்க ஸ்பெயின் அரசு கடுமையான கட்டுப்பாடுகளை அமல் செய்துள்ளது. மருத்துவம், மளிகை பொருட்களை வாங்க மட்டுமே பொதுமக்கள் வீடுகளை விட்டுவெளியே வரலாம். அதுவும் உரியஅதிகாரிகளிடம் முன் அனுமதி கடிதம் பெற்ற பிறகே மருத்துவமனைகள், கடைகளுக்கு செல்ல முடியும்.
தடையை மீறி வெளியே சுற்றும் நபர்களுக்கு குறைந்தபட்சமாக தலா ரூ.48,000 அபராதம் விதிக்கப்படுகிறது. தொடர்ந்து தடையை மீறுவோருக்கு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பொதுமக்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க ஆளில்லா குட்டி விமானங்களை போலீஸார் பயன்படுத்தி வருகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் இதேபோன்ற கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
ஈரான் திணறுகிறது
ஈரான் நாட்டில் ஒரு மணி நேரத்துக்கு புதிதாக 50 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது. 10 நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அந்த நாட்டு அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி இதுவரை 20,610 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,556 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் ஈரானில் நோயாளிகளின் எண்ணிக்கை, உயிரிழப்பு பலமடங்கு அதிகமாகக் இருக்கக்கூடும். அந்த நாட்டு அரசு உண்மையை மறைக்கிறது என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்காவும் ஐ.நா. சபையும் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் காரணமாக கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள முடியாமல் ஈரான் அரசு திணறி வருகிறது. அந்த நாட்டில் உணவு, மருந்து பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
"வைரஸ் பரவுவதை தடுக்க வீடுகளை விட்டு மக்கள் வெளியே வர வேண்டாம்" என்று ஈரான் அதிபர் ஹசன் ரவுகானியும் அந்த நாட்டு மதத் தலைவர் அயதுல்லா கொமேனியும் அறிவுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT